ஜிஇ14 : பினாங்கு மாநிலச் சட்டமன்றம் இன்று பிற்பகல் கலைக்கப்படலாம்

பினாங்கு மாநிலச் சட்டமன்றம், 14-வது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் இன்று அதிகாரப்பூர்வமாக கலைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று பிற்பகல் 1.45 மணியளவில் அதனை அறிவிப்பதற்கு முன்னதாக, பினாங்கு யாங் டி-பெர்த்துவ நெகிரி, துன் அப்துல் ரஹ்மான் அப்பாஸ் அவர்களை, மாநில முதல்வர் லிம் குவான் எங் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாநிலச் சட்டமன்றம் அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்ட பின்னர், ஒரு தற்காலிக அரசாங்கமாக அது அறியப்படும்.

பினாங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், பினாங்கு அரசாங்க செயலாளரிடம் தங்கள் அதிகாரப்பூர்வக் காரின் சாவியை ஒப்படைப்பர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சி நடவடிக்கைகளில் அவர்கள் அரசு வசதிகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

2013-ஆம் ஆண்டில், லிம் பினாங்கு மாநிலச் சட்டமன்றத்தை ‘ஏற்ற, மகிமை நிறைந்த நாள்’ எனக் கருதப்பட்ட ஒரு வெள்ளிக்கிழமையில் கலைத்தது குறிப்பிடத்தக்கது.