அஸ்மின் : மீண்டும் எம்பி ஆகவில்லை என்றால், பிரச்சனை இல்லை

சிலாங்கூர் அரசாங்கத்தின் மீது, சுங்கை பெசார் அம்னோ பிரிவுத் தலைவர் ஜமால் யூனுஸ் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பல, அம்மாநிலத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பக்காத்தான் ஹராப்பான் ‘செராமா’க்களில் பேசு பொருளாகி வருகிறது.

நேற்றிரவு, பாயா ஜாராஸில் நடந்த ஒரு செராமாவில், பிகேஆரின் இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் அஃபிஃப் பஹார்டின், தவறுதலாக வாக்களித்தால், சிலாங்கூர் மக்களுக்கு ஜமால்தான் மந்திரி பெசாராகக் கிடைப்பார் என கேலியாகப் பேசினார்.

“ ‘சூட்’ அணிந்த ஓர் அழகிய மந்திரி பெசார் வேண்டுமா? அல்லது ‘துண்டு’ அணிந்துவரும் ஜமால் வேண்டுமா?” எனப் பார்வையாளர்களின் சிரிப்பொலிக்கு நடுவே அப்ஃஃப் கேட்டார்.

அவரைத் தொடர்ந்து பேசிய அஸ்மின் அலி, “நான் எம்பி ஆகவில்லை என்றால் பிரச்சனையில்லை, ஜமாலை எடுத்துகொள்ளுங்கள்,” என்று கிண்டலடித்தார்.

“ஒரு துண்டைக் கட்டிக்கொண்டு, காதில் பல் தூரிகையுடன், என் அலுவலகத்திற்கு குளிக்க வந்தார். அவருக்கென்ன பைத்தியமா?” என்று, ஷா ஆலாம், மாநில அரசின் கட்டடத்திற்கு ஓர் ஆர்ப்பாட்டத்திற்காக வந்த ஜமாலின் செய்கையை அஸ்மின் குறிப்பிட்டு பேசினார்.

சிலாங்கூர் நீர் நெருக்கடியை எதிர்கொள்வதாக, அரசாங்கத்தின் ஆதிக்கத்தில் இருக்கும் ஊடகங்கள் கூறுவதையும் அஸ்மின் விமர்சித்தார்.

“சிலாங்கூர் மக்கள் ஒரு மாதமாகக் குளிக்கவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள், யார் இங்கு இன்னும் குளிக்கவில்லை என்னிடம் சொல்லுங்கள்?”

“யார் குளிக்கவில்லை?” என்ற அஸ்மின் அலியின் கேள்விக்கு, “ஜமால்!” என்று பங்கேற்பாளர்கள் பதிலளித்தனர்.

உரையில், வெளிநாட்டு முதலீடுகள் உட்பட, அஸ்மின் அவரது தலைமையின் கீழ் சிலாங்கூர் அரசாங்கத்தின் சாதனைகளைப் பற்றி பேசினார்.

அவர் வாக்காளர்களை அதிகளவில் வாக்களிக்க வருமாறும் கேட்டுக்கொண்டார்.

சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றம் நாளை கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.