உங்கள் கருத்து: ஆர்ஓஸ்ஸுக்கும் இசிக்கும் நன்றி, ஹரப்பான் இப்போது ஒன்றுபட்டுள்ளது,

மகாதிர்  அன்வார்  கட்சியின்  சின்னத்தில்  போட்டியிடுகிறார்

பெயரிலி568201438363345:  ஒரு  புதிய   காலக்கட்டத்தின்  விடியல். முதல்முறையாக  எதிரணிகள்  கட்சி  நோக்கங்களையும்   சொந்த  நோக்கங்களையும்   ஒதுக்கிவைத்துவிட்டு   நாட்டு  நலனுக்கு  முன்னுரிமை  கொடுத்து   ஒன்றுபடக்   காண்கிறோம்.

இதற்கு  வழிகோலிய   பக்கத்தான்  ஹரப்பான்  தலைவர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டுக்குத்   தலைதாழ்த்தி   மரியாதை   தெரிவிக்கிறேன். இனி, மலேசிய  அரசியல்  வானம்  முன்போல்  இருக்காது.

எல்லோரும்    அவரவர்  பங்கைச்  செய்யும்  நேரம்  வந்துவிட்டது. உங்கள்   சொந்த  ஊருக்குத்   திரும்பிச்  சென்று  நண்பர்களை,  குடும்பத்தாரை,   தெரிந்தவர்களைத்    தவறாமல்    வாக்களிக்கச்  சொல்லுங்கள்.

நேரான பேச்சு: முன் எப்போதுமில்லாத  வகையில்   ஹரப்பான்   கட்சிகள்  ஒன்றுபட்டு   14வது   பொதுத்   தேர்தலில்   பிகேஆர்  சின்னத்தில்   போட்டியிட  ஒப்புக்கொண்டுள்ளன. இதுவே   ஓரு  நல்ல   அறிகுறிதான்.  இனி,  ஹரப்பானுக்கு   நடப்பதெல்லாம்  நல்லதாகவே  இருக்கும்.

இனி,  வாக்காளர்களாகிய    நாம்   கருத்துவேறுபாடுகளையும்  தன்னலத்தையும்   ஒதுக்கிவைத்துவிட்டு   நாட்டின்  எதிர்காலத்துக்காக விவேகமான  முரையில்   வாக்களிக்க    வேண்டும்.

தொலு: இப்படி  இதற்குமுன்  நிகழ்ந்ததில்லை. தேர்தல்   பரப்புரைகளின்போது   டிஏபி  போன்ற   வலுவான   கட்சிகளின்   பழக்கப்பட்ட   கொடிகள்,  சின்னங்கள்  கம்பீரமாக  பட்டொளிவிட்டுக்  காற்றில்  படபடப்பதை  இனி  காண  முடியாது   என்பதை  ஏற்றுக்கொள்வது   சிரமமாகத்தான்  உள்ளது.

ஆனால்,   பிஎன்   தலைவர்     நஜிப்     அப்துல்  ரசாக்கின்   அரசியல்   கெடுபிடிகளைச்  சமாளிக்க      இப்படி  ஒரு  முடிவு  தவிர்க்க முடியாததுதான்.  உண்மையில்   இது  ஓர்   அருமையான   முடிவு.   பிஎன்னும்   நஜிப்பும்   அதிர்ச்சியும்   ஏமாற்றமும்  அடைந்திருப்பார்கள்.

ஹரப்பானுக்கு  வாழ்த்துகள்.

விஜய்47: கிட்டத்தட்ட  10  பொதுத்  தேர்தல்களில்  வாக்களித்த  அனுபவத்தில்  சொல்கிறேன்.  இம்முறை  வாக்களிப்புச்  சாவடியில்  வரவேற்க    சிவப்பு  ராக்கெட்   சின்னம்  இருக்காது   என்பதை  நினைப்பதற்கே   வருத்தமாகத்தான்  உள்ளது.

ஆனாலும்   காலமாறுதலில்   சூழ்நிலை  மாறி   புதிய  உறவுகள்,  பிணைப்புகள்   ஏற்பட்டுள்ளன.  இதை  நான்  முழு  மனத்துடன்  வரவேற்கிறேன்.

திறன்மிக்க  வாக்காளன்:  இது    வரவேற்கப்பட  வேண்டிய  ஒன்றுதான்.  ஒரு  புதிய  கூட்டணியின்  உருவாக்கம்   தெரிகிறது. பிகேஆர்  முன்னிலும்  வலுவான   சக்தியாக  உருமாறும்.

நன்மை  நிறைய  உண்டு.   ஆனால்,  நிறைய  பாடுபட    வேண்டியிருக்கும்.  வாக்கு   எண்ணிக்கையில்  ஏமாற்றுதல்   போன்ற   தில்லுமுள்ளுகள்  நிகழலாம்.  கவனம்  தேவை.

விஜிவி: நான்கு  உறுப்புக்  கட்சிகள்  பிகேஆர்   சின்னத்தில்   ஒன்றுபடுவதே   தேர்தலில்   வெற்றி  உறுதி   என்பதற்குக்    கட்டியம்  கூறுகிறது.  கருத்துவேறுபாடுகளை   ஒதுக்கிவைத்து  இப்போதைய   அரசைத்  தூக்கிவீசி   மக்களின்  அமைதிக்கும்  இணக்கத்துக்கும்   பாடுபடுவீர்.

மகாதிருக்கும்  மற்ற  கூட்டணித்    தலைவர்களுக்கும்  கூறிகொள்ள  விரும்புவது –   அரசாங்கத்தைச்   சரியான  தடத்தில்  கொண்டு  வந்து  நிறுத்தி  சரியான  திசையில்   கொண்டு   செல்லுங்கள். நாட்டை   மேன்மேலும்  உயர்ந்த  நிலைக்குக்  கொண்டு   செல்லுங்கள்.

நம்பிக்கை: சங்கப்  பதிவக(இசி)த்துக்கும்   தேர்தல்    ஆணையத்துக்கும்  நன்றி.  உங்கள்   கெடுபிடிகளின்றி   ஹரப்பான்   இப்படி   ஒன்றுபடல்    சிரமமாக  இருந்திருக்கும்.