‘சிரியா ரசாயன தாக்குதலுக்கு ஆதாரம் இல்லை‘: ரஷ்யா

சிரியாவில் முன்னதாக கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்த டூமாவில் ரசாயன ஆயுதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் கூறியுள்ளார்.

சனிக்கிழமை நடந்ததாக குற்றம் சாட்டப்படும் அந்த தாக்குதலில் டஜன் கணக்கானோர் இறந்ததாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சரியான எண்ணிக்கையை உறுதிப்படுத்துவது சாத்தியமற்றது. லாவ்ரோவ் கூறுகையில் ரஷ்ய நிபுணர்கள் மற்றும் உதவிக் குழு சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டதாக கூறுகிறார்.

அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் கூட்டாக வலிமையான பதிலடி தரவுள்ளதாக முன்னதாக அச்சுறுத்தியிருந்தன.

நிலவரம் குறித்து கூர்ந்து கவனிக்கப்பட்டு வருவதாகவும், மிக முக்கியமான முடிவுகள் அடுத்த 48 மணிநேரத்துக்குள் எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமையன்று மீட்புக்குழுவினரால் எடுக்கப்பட்ட காணொளியில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் வாயில் நுரையுடன் சடலமாக இருந்தனர். அந்த காணொளி வந்தபிறகு ரஷ்யா முதன்முறையாக இந்த பதிலை தெரிவித்துள்ளது. சிரியாவுக்கு ரஷ்யா ராணுவ ரீதியில் ஆதரவை தெரிவித்துவரும் நாடாகும்.

சிரியா மற்றும் அமெரிக்க மருத்துவ சங்கம் கூறுகையில் தலைநகரம் டமாஸ்கஸ் அருகே கிழக்கு கூட்டா பிராந்தியத்தில் இருக்கும் டவுமாவில் ஐநூறுக்கும் அதிகமான மக்கள் மருத்துவ மையத்துக்கு கொண்டு வரப்பட்டனர் என்றது. நச்சு ரசாயனத்துக்கு இவர்களது உடல் ஆளானது குறித்த அடையாளங்கள் இருந்தன. சுவாசிப்பதில் சிரமம், நீல நிறமான தோல், வாயில் நுரை, தீக்காயங்கள் ஆகியவை இருந்தன என்கிறது அந்த சங்கம்.

42 முதல் 60 வரையிலானோர் இறந்திருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. ஆனால் இந்த எண்ணிக்கை இன்னமும் அதிகரிக்கலாம் என மீட்புக் குழு தெரிவித்துள்ளது.

திங்கள் கிழமையன்று ஐக்கிய பாதுகாப்பு அமைப்பு சிரியா மீது சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டு குறித்து விவாதிக்கவுள்ளது.

சிரியாவில் ராணுவ விமானதளம் ஒன்றில் ஏவுகணை தாக்குதல் நடந்த சிலமணிநேரங்களில் லாவ்ரோவ் பேசுகையில் ”எங்களது இராணுவ சிறப்பு அதிகாரிகள், சிரியன் ரெட் கிரெசென்ட் என்ற அமைப்பின் பிரதிநிகளுடன் டவுமாவுக்கு சென்றனர். அங்கே குளோரின் அல்லது வேறு ஏதேனும் ரசாயன பொருட்கள் அங்குள்ள மக்கள் மீது பிரயோகிக்கப்பட்டதற்கான எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.

மாஸ்கோ இது போன்ற நிகழ்வுகளில் நேர்மையான விசாரணையை விரும்புவதாகவும் ஆனால் எந்தவித ஆதாரமும் இன்றி தங்கள் மீது குற்றம் சாட்டப்படுவதை எதிர்ப்பதாகவும் கூறியுள்ளார். -BBC_Tamil