பாஸ்: பாயா ஜராஸ் பிரதிநிதி கட்சி தாவியதில் பிரச்னை ஹரப்பானுக்குத்தான் பாஸுக்கு அல்ல

பாயா  ஜராஸ்   சட்டமன்ற  உறுப்பினர்  கைருடின்  ஒத்மான்   பிகேஆருக்குத்   தாவியிருப்பதை   பாஸ்   பெரிதாகக்  கருதவில்லை.  அது  சிலாங்கூரில்  உள்ள  பாஸின்   மற்ற     தொகுதிகளை   எந்த   வகையிலும்   பாதிக்காது
என்கிறார்   பாஸ்    உதவித்   தலைவர்   இஸ்கண்டர்   அப்துல்   சமட்.

பாஸ்  கட்சியின்   மற்ற   சட்டமன்ற   உறுப்பினர்களும்   கைருடினைப்  பின்பற்றுவார்கள்   என்று   கூறப்படுவதையும்   அவர்  மறுத்தார்.

“சிலாங்கூரில்   பாஸ்  சட்டமன்ற   உறுப்பினர்கள்   வேறு   எவரும்   பிகேஆருக்கோ  மற்ற   கட்சிகளுக்கோ   மாறப்போவதில்லை.

“எனவே  மற்ற  சட்டமன்ற  உறுப்பினர்களும்  கட்சியிலிருந்து  வெளியேறுவார்கள்   என்று  கூறப்படுவதில்  உண்மையில்லை”,  என்றாரவர்.

இந்தக்   கட்சித்தாவலால்  பக்கத்தான்  ஹரப்பானுக்குத்தான்  நெருக்கடி என்றவர்  சொன்னார்.

“பாயா  ஜராஸ்   பிரதிநிதியே   அந்தத்   தொகுதியில்   திரும்பவும்   களமிறக்கப்பட்டால்     ஏற்கனவே   அங்கு   போட்டியிடத்  தயாராகவுள்ள  அமனாவுக்கு   அது   மிகப்  பெரிய  ஏமாற்றமாக   அமையும்.

“அதன்  விளைவாக  பக்கத்தானில்  ஒரு  நெருக்கடி  வெடிக்கும்.  மற்ற  இடங்களுக்கும்  அது  பரவும்”,  என்று   இஸ்கண்டர்  அப்துல்  சமட்  கூறினார்.

ஹரப்பான்   சிலாங்கூரில்   அதன்    தொகுதிப்  பங்கீட்டுப்  பேச்சுகளை  இன்னும்  இறுதி   செய்யவில்லை.  ஆனாலும்,  கைருடின்    கட்சிதாவலுக்கு   முன்பே,  பாயா  ஜராஸ்  அமனாவுக்குத்தான்   என்று  உடன்பாடு  காணப்பட்டிருக்கிறது.