மகாதிர் நன்றாகவே செயல்பட்டு வருகிறார், ஆனால் ‘கிளிங்’ என்று சொல்வதை நிறுத்த வேண்டும்: இராமசாமி அறிவுறுத்து

கிளிங் என்ற    சொல்லை  ஓர்  இழிவுச்  சொல்லாக  இந்தியர்களும்  மற்றவர்களும்   கருதுவதால்   பக்கத்தான்  ஹரப்பான்  தலைவர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்   அச்சொல்லைப்  பயன்படுத்தாமல்  இருப்பதே  நல்லது   என   பினாங்கு  துணை   முதலமைச்சர்   பி.இராமசாமி   கூறினார்.

மகாதிருக்கு  இந்தியர்களை  இழிவுபடுத்தும்   நோக்கம்   இல்லாதிருக்கலாம்   ஆனால்  அவர்  அச்சொல்லைப்   பயன்படுத்துவது   சில   தரப்பினருக்குச்  சாதமாக  அமைந்து  விடும்.  அவர்கள்   அதன்  மூலமாக   அரசியல்   ஆதாயம்   தேட   முனைவார்கள்  என்றாரவர்.

“மகாதிர்   மலேசியாவைக்  காப்போம்  என்ற  எங்கள்  போராட்டத்தில்   இணைந்து  கொண்டதிலிருந்து   நன்றாகவே   செயலாற்றி   வருகிறார்.   எங்கள்  போராட்டத்துக்கு  மலாய்க்காரர்    ஆதரவைக்  கொண்டு  வந்துள்ளார்.  ஆனால்,   இழிவுபடுத்தும்  சொல்களை,    இந்திய  சமூகத்தினர்  மட்டுமல்ல   மற்றவர்களும்  இழிவு   எனக்  கருதும்  சொற்களைப்  பயன்படுத்தாமலிருப்பதே   நல்லது”,  என  இராமசாமி   மலேசியாகினியிடம்   தெரிவித்தார்.

‘கிளிங்’  என்ற  சொல்லை  ஓர் இழிவுச்  சொல்லாக   தாம்  கருதவில்லை   என்றாலும்  இந்திய  சமூகத்தை   இழித்துரைக்க   அச்சொல்   அடிக்கடி   பயன்படுத்தப்படுவதை  டிஏபி   மத்திய   செயல்குழு    உறுப்பினராக  அவர்  சுட்டிக்காட்டினார்.

ஜிஇ  14   நெருங்கி   வரும்   வேளையில்   இப்படிப்பட்ட   சர்ச்சைகள்   வேண்டாமே  என்றாரவர்.