புதன்கிழமை தேர்தலுக்குக் கடும் கண்டனம்

தேர்தல்  ஆணையம்(இசி)   மே  9  வாக்களிப்பு   நாள்   என்று    அறிவித்திருப்பது  பரவலான   கண்டனத்துக்கு  இலக்கானது.

எதிரணியினரும்  சமூக    ஆரவலர்களும்   வலைமக்களும்  புதன்கிழமையிலா  தேர்தலை  வைப்பது   என்று   கேள்வி   எழுப்பியுள்ளனர்.

வேலைநாளில்   தேர்தலை  வைப்பது   என்ன  நியாயம்  என்று   பிகேஆர்  உதவித்   தலைவர்   நூருல்  இஸ்ஸா   வினவினார்.

“பராமரிப்புப்  பிரதமரே,   உங்கள்  இசி   தலைவரிடம்   பேசுங்கள்”,  என்றவர் டிவிட்   செய்திருந்தார்.

பெர்சத்து   இளைஞர்  தலைவர்    சைட்     சாதிக்  அப்துல்  ரஹ்மான்   அன்றைய  தினம்   மக்கள்  விடுப்பு   எடுத்துக்கொள்ள  வேண்டும்    எனக்  கேட்டுக்கொண்டார்.

“வாக்களிப்பு    வார  மத்தியில்-    வேலைநாளில்    என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.  இது  வெளியூர்  வாக்காளர்கள்   வாக்களிக்க  திரும்பிச்  செல்வதைத்  தடுக்கும்  பிஎன்  தந்திரம்.

“ஒவ்வொரு  வாக்கும்  விலை  மதிப்பற்றது”,  என்றாரவர்.

“அமனா  வியூக  இயக்குனர்    டாக்டர்   சுல்கிப்ளி    அஹமட்  இசி  அறிவிப்பு   தேர்தல்  “நியாயமாக  நடப்பதைத்   தடுக்கும்    சதி”  என்று   சாடினார்.

“வாக்களிப்பு   மே 9-இல்,  ஒரு  புதன்கிழமையில். ….   வேலைநாளில்.  எனவே,  பராமரிப்பு   அரசாங்கம்   மே 9-ஐ  பொது  விடுமுறையாக   அறிவிக்க   வேண்டும்”,  என்றாரவர்.

சமூக    ஆர்வலர்  மரினா  மகாதிரும்   கருத்து   சொல்லியிருந்தார்.

“தோற்கப்போவது   தெரிந்து  விட்டதால்   வாக்காளர்களுக்குச்   சிரமம்  கொடுக்க  முயல்கிறீர்களா?  பரப்புரைகளுக்கு  11  நாள்,  வாக்களிப்பு   ஒரு   வேலைநாளில்?”,  என்றவர்   டிவிட்டரில்  பதிவிட்டிருந்தார்.

இதனால்  வாக்காளர்களுக்குத்தான்  “பல  பிரச்னைகள்”    என்று  முன்னாள்  அமைச்சர்   ரபிடா   அசீஸ்  மலேசியாகினியிடம்     தெரிவித்தார்.  குறிப்பாக,  வெளியூர்  வாக்காளர்களுக்கு.

“சாபா,  சரவாக்கிலிருந்து   இங்கு   வந்திருப்போரும்   இங்கிருந்து  சாபா,  சரவாக்   சென்றவர்களும்   சிரமத்தை     எதிர்நோக்குவார்கள்.  அவர்கள்  வாக்களிக்க  முடியாமல்கூட  போகலாம்.

“அவர்கள்   சொந்த  செலவில்   திரும்பிச்  செல்ல  வேண்டும்.  அதன்பின்   வாக்களிப்பு    மையங்களுக்குச்   செல்ல    வேண்டும்.  வாக்களித்தவுடன்  அவசரமவசரமாக  திரும்பிச்  செல்ல  வேண்டும்.

“இதற்கு  ஒரு   நாளுக்குமேல்   தேவைப்படும்.  கூடுதல்  விடுப்பு   எடுக்க  வேண்டியிருக்கும்.  அது  வேலைநாள்   என்பதால்  வர்த்தகமும்   தொழிலும்  பாதிப்புறும்”,  என்றார்.

ஏன்  இப்படி?  வாக்காளர்கள்  பெரும்   எண்ணிக்கையில்  திரண்டு  வந்து  வாக்களிப்பதைத்   தடுப்பதுதான்  இதன்  நோக்கமோ    என்று    ரபிடா  ஐயுறுகிறார்.