பி.எஸ்.எம். : வேலை நாளில் வாக்களிப்பா? தேர்தல் ஆணையத்தின் முடிவு கண்டணத்துக்குரியது

நாட்டின் 14-வது பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் நாளினைப்   பெரும் ஆவலாக எதிர்ப்பார்த்து காத்திருந்த வாக்காளர்களுக்கு, தேர்தல் ஆணையம் அறிவித்த நாள் பெரும் ஏமாற்றமாக அமைந்துவிட்டது என மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) தேசியத் துணைத் தலைவர் சரஸ்வதி முத்து கூறினார்.

தேர்தல் ஆணையம் நிர்ணயித்த மே 9-ம் தேதி, வேலை நாள், இது வாக்காளர்களின் சுதந்திரத்திற்கு எதிராக அமைந்திருப்பதாக அவர் கண்டனம் தெரிவித்தார்.

“வேலை நாளில் வாக்களிக்கும் இந்த முடிவானது, வெளியூர்களில் வேலை பார்க்கும் மலேசியர்களின் அரசியல் உரிமைக்குப் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும்.

“நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர், பொதுத் தேர்தலை நடத்த அறுபது நாட்கள் அவகாசம் அரசியல் சட்டத்தில் இருக்கும் போது, ஏன் தேர்தல் ஆணையம் வாக்களிப்பதற்கு ஒரு வேலை நாளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?” என சரஸ் கேள்வி எழுப்பினார்.

இது ஒருதலைபட்ச முடிவு, கடந்த பொதுத் தேர்தல்களைப் போல், 14-வது பொதுத் தேர்தலையும் ஞாயிற்றுக் கிழமையிலேயே தேர்தல் ஆணையம் நிர்ணயித்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவானது, வாக்களிப்போரின் எண்ணிக்கையைக் குறைக்க வாய்ப்புள்ளது.

இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது என்பதால், வெளியூர்களில் வேலை செய்யும் வாக்காளர்கள் இப்பொழுதே விடுமுறைக்கு விண்ணப்பம் செய்வது நல்லது எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

தேர்தல் சட்டம் 1958, பிரிவு 25-ல், வாக்களிக்கச் செல்லும் தனது பணியாளர்களுக்கு, அதற்கான கால அவகாசத்தை நிர்வாகம் வழங்க வேண்டும் எனவும் சம்பளத்தில் எந்தவொரு பிடித்தமும் செய்யக்கூடாது எனவும் கூறப்பட்டிருப்பதாகவும் ஜெலப்பாங் சட்டமன்றத்தின் பி.எஸ்.எம். வேட்பாளருமான சரஸ்வதி தெரிவித்தார்.