சிரியா “ரசாயன தாக்குதல்”: அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்குமென டிரம்ப் அறிவிப்பு

சிரியா பிரச்சனை தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி மேற்குலக தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகையில், அமெரிக்கா கடுமையான பதிலடி வழங்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

“ராணுவ ரீதியாக நாங்கள் அதிக தெரிவுகளை வைத்திருக்கிறோம்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்த டிரம்ப், “இதற்கான கடும் பதிலடி விரைவாக முடிவு செய்யப்படும்” என்று கூறியுள்ளார்.

சனிக்கிழமை சிரியாவின் கிழக்கு கூட்டாவிலுள்ள டுமாவில் நடத்தப்பட்ட ரசாயன தாக்குதல் தொடர்பாக “சரியான தெளிவுகளை” அமெரிக்கா பெற்று வருவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ரசாயன தாக்குதல் என்று கூறப்படும் இந்த தாக்குதலில் டஜன்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், சரியான எண்ணிக்கையை உறுதி செய்ய முடியவில்லை.

சிரியா: கொடூர தாக்குதல்களால் தொடர்ந்து வெளியேறும் மக்கள்

இந்த சம்பவம் பற்றி அதிபர் டிரம்பும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங்கும் கலந்துரையாடியுள்ளதாகவும், “உறுதியான நடவடிக்கை” எடுக்கப்பட வேண்டும் என்று இரு நாட்டு தலைவர்களும் கருத்துக்கள் தெரிவித்ததாகவும் பிரான்ஸ் அதிபர் மாளிகை தெரிவித்திருக்கிறது.

‘சிவப்பு நாடா’ எனக்கூறப்படும் போர் அறநெறிகளுக்கு அப்பாற்பட்ட தாக்குதலாக இந்த சம்பவம் இருக்குமானால், பதிலடி வழங்கப்படும்” என்று பிரன்ஸ் அரசு செய்தி தொடர்பாளர் பான்சாமாங் கிரிவோ செவ்வாய்க்கிழமை கூறியதை மேற்கோள்காட்டி ஏஃஎப்பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இரு நாட்டு தலைவர்களால் பகிரப்பட்ட உளவு தகவல்கள் “ரசாயன தாக்குதல் நடைபெற்றதை “கோட்பாடு அளவில் உறுதி செய்கிறது” என்று அது மேலும் தெரிவித்திருக்கிறது.

ரசாயன தாக்குதல் நடைபெறுவதாக நிரூபணமானால், சிரியா மீது தாக்குதல் தொடுக்கப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் பிரான்ஸ் அதிபர் மக்ரோங் தெரிவித்தார்.

“இந்த ரசாயன தாக்குதல் முற்றிலும் காட்டுமிரண்டித்தனமானது” என்று கண்டித்திருக்கும் பிரிட்டன் பிரதமர் தெரீசா மே “இதற்கு சிரியாவின் அதிபர் பஷார் அல்-அசாத்தின் ஆதரவாளர்கள் பொறுப்பேற்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் இந்த தாக்குதல் தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் கடுமையாக வார்த்தைகளால் அமெரிக்காவும், ரஷ்யாவும் மோதிக்கொண்டதை அடுத்து, மேற்குலக தலைவர்களின் இந்த கண்டனங்கள் வந்துள்ளன.

“ரசாயன தாக்குதல் என்று கூறப்படும் இந்த தாக்குதல், திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று” என்று கூறிய ஐநாவிலுள்ள ரஷ்ய தூதர் வாஸ்சிலி நேபென்சியா, “இது பதிலடியாக அமெரிக்கா மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்” என்று எச்சரித்துள்ளார்.

சிரியாவுக்கு ராணுவ ஆதரவு வழங்கும் ரஷ்யாவின் கைகளில் சிரியா நாட்டு குழந்தைகளின் ரத்தக் கறை படிந்துள்ளது என்றும், அதிபர் அசாத்தை அசுரனாக குறிப்பிட்டும் ஐநாவிலுள்ள அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கருத்து தெரிவித்திருக்கிறார்.

சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்பாடு பற்றிய புதியதொரு விசாரணையை தொடங்குவதற்கு முன்மொழிகின்ற வரைவு தீர்மானத்திற்கு வாக்கெடுப்பு நடத்த செவ்வாய்க்கிழமை ஹாலே அழைப்புவிடுத்தார்.

“ஏற்றுக்கொள்ள முடியாத அம்சங்கள் இதில் இருப்பதால், இந்த முன்மொழிவுக்கு ஆதரவு அளிக்க முடியாது என்று ரஷ்யா தெரிவித்திருக்கிறது. -BBC_Tamil