நஜிப் : வாக்களிக்கச் செல்ல, நேரத்தைத் திட்டமிடுங்கள்

எதிர்வரும் மே 9-ம் திகதி, 14-ம் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஏதுவாக, தங்கள் நேரத்தைத் திட்டமிடுமாறு அனைத்து வாக்காளர்களுக்கும் பிரதமர் நஜிப் ரசாக் அழைப்பு விடுத்துள்ளார்.

பொதுத் தேர்தலில் வாக்களிப்பது, ஒவ்வொரு மலேசியரின் உரிமை மற்றும் பொறுப்பு என்றும் தேசிய முன்னணியின் (பிஎன்) தலைவருமான நஜிப் தெரிவித்தார்.

“சகோதர, சகோதரிகளே, உங்கள் வாக்குகள் ஒவ்வொன்றும் தேசத்தின் மற்றும் அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதாகும்,” என்று அவர்  நஜிப்ரசாக்.கோம் வலைப்பதிவின் மூலம் நேற்று இரவு, ‘நாட்டிற்கான கடமை’ என்ற தலைப்பில் கூறியுள்ளார்.

நேரம் கிடைத்தால், வாக்கெடுப்பு நாள்களின் நடைமுறை மற்றும் தேவைகளைப் பற்றியும், வாக்களித்த பின்னர் உள்ள விவகாரங்கள் பற்றியும் வாக்காளர்கள் வாசித்து அறிந்துகொள்ள ஊக்குவித்தார்.

“இவற்றைப் பற்றி மேலும் படிக்க, ‘உண்டிநெகாராக்கூ’ (UndiNegaraku) எனும் எங்கள் வாக்களிப்புப் பக்கத்தைப் பார்வையிடவும், தேர்தலில் எழக்கூடிய பல பொதுவான கேள்விகளுக்கும் அங்கு பதிலளிக்கப்படும்,” என்றார் அவர்.

அதே நேரத்தில், பி.என். தேர்தல் அறிக்கையைப் பரிசீலிப்பதற்கும், நாட்டின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்கும், நாட்டின் பல்வேறு வெற்றிகளைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கும், பல்வேறு விஷயங்களை உறுதிப்படுத்தவும், மக்கள் தனது வலைப்பதிவைப் பின்தொடர முடியும் என்றும் அவர் கூறினார்.

-பெர்னாமா