சிங்கப்பூர் முதலாளி தனது மலேசிய ஊழியர் வாக்களிக்கச் செல்ல விடுமுறை அளித்துள்ளார்

மலேசியாவில் உள்ள முதலாளிகள் தங்கள் ஊழியர்கள் வாக்களிக்கச் செல்ல நேரம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், ஆனால் இந்தச் சட்டம் அதிகமான மலேசியத் தொழிலாளர்களைக் கொண்டுள்ள சிங்கப்பூர் முதலாளிகளுக்கு இல்லை.

இருப்பினும், சிங்கப்பூரின் நகை வியாபாரி, ஙோ ஹியா ஓங், தனது மலேசிய ஊழியர்கள் வாக்களிக்கும் கடமையை நிறைவேற்ற, 8-ம் , 9-ம் தேதிகளில் அவர்களுக்குச் சிறப்பு விடுமுறை அளித்துள்ளார்.

“கடந்த பொதுத் தேர்தலில் இருந்து, நாங்கள் எங்கள் ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறையும் போக்குவரத்து அலவன்சும் கொடுத்து வருகிறோம்.

“இது அவர்கள் தங்கள் வாக்களிக்கும் கடமையை, எந்தவொரு கவலையும் இன்றி நிறைவேற்ற உதவும் என நாங்கள் நம்புகிறோம்,” என்று மலேசியாகினியிடம் அவர் தெரிவித்தார்.

ஒரு மலேசிய குடிமகனான ஙோ, நான்காவது முறையாக வாக்களிக்க மலேசியா திரும்பவுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் தற்போதைய சட்டம், தென் தாய்லாந்து, சிங்கப்பூர், புருணை மற்றும் இந்தோனேசியாவில் உள்ள கலிமந்தான் ஆகிய இடங்களில் வசிக்கும் மலேசிய குடிமக்கள், அஞ்சல் வழி வாக்களிக்க அனுமதிக்கவில்லை, எனவே அவர்கள் வாக்களிக்க நாடு திரும்ப வேண்டும்.

சிங்கப்பூர் சீனாடவுனில், ஒரு பேரங்காடியில் கடை வைத்துள்ள ஙோ, அந்த இரண்டு நாள்களுக்கான நஷ்டத்தை ஏற்றுக்கொள்ள தான் தயார் எனக் கூறினார்.

“என்னுடைய ஒன்பது தொழிலாளர்களில் எழுவர் மலேசியர். அவர்களில் ஒருவர் ஜொகூரைச் சேர்ந்தவர், மற்றவர்கள் வாக்களிக்க பேராக் மற்றும் நெகிரி செம்பிலான் செல்ல வேண்டும்,” என்று 40 வயதான ஙோ தெரிவித்தார்.

கடந்த மாதம், சீனாய் சட்டமன்ற உறுப்பினர் வோங் ஷு கி, அதிகாரப்பூர்வமற்றப் புள்ளிவிவரங்களை மேற்கோளிட்டு கூறுகையில், 300,000 மலேசியத் தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் சிங்கப்பூருக்குப் பயணம் செய்கிறார்கள், 400,000 பேர் சிங்கப்பூரிலேயே தங்கி வேலை செய்கின்றனர் என்றார்.

சிங்கப்பூரில் வேலை செய்பவர்களில் பெரும்பான்மையினர் ஜொகூர்வாசிகள். இந்தத் தேர்தலில், ஜொகூர் கடுமையான போட்டியை எதிர்பார்க்கும் நிலையில், வெளிநாட்டில் வசிக்கும் வாக்காளர்களின் வாக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.