அண்ணா சாலை புரட்சி வெற்றி.. சென்னை ஐபிஎல் போட்டிகள் புனேக்கு மாற்றம்!

டெல்லி: காவிரி வாரியம் அமைக்கக் கோரியும் ஐபிஎல்லுக்கு எதிராகவும் தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வருவதால் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

காவிரி மேலாண்மை வாரியத்துக்காக தமிழகமே கொழுந்துவிட்டு எரியும் நிலையில் சோறுக்கு பதில் ஸ்கோர் தேவையா என கேட்டு ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்த எதிர்ப்பு வலுத்தது.

இந்நிலையில் நேற்று அண்ணா சாலையே ஸ்தம்பித்துவிட்டதால் வீரர்களும், ரசிகர்களும் மைதானத்தை வந்தடைவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகத்திற்கு இடையில் சேப்பாக்கம் மைதானத்தில் போட்டிகள் நடைபெற்றன.

நடக்கவிடமாட்டோம்

மைதானத்தில் நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்டோர் காலணிகளை வீசியதாக கூறப்படுகிறது. இதனிடையே வரும் 20-ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றொரு அணியுடன் நடைபெறும் போட்டி நடைபெறாது, நடக்கவிடமாட்டோம் என்று தமிழ் அமைப்புகளும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

போட்டி நடைபெறுமா

20-ஆம் தேதி நடைபெற போட்டிக்கான டிக்கெட் விற்பனைகள் நாளை நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் ஐபிஎல்லுக்கு பலத்த எதிர்ப்பு இருப்பதால் அந்த போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் இருந்தது.

மொத்தம் 7 போட்டிகள்

இந்நிலையில் டெல்லியில் பிசிசிஐ மற்று்ம ஐபிஎல் நிர்வாகம் ஆலோசனை நடத்தியது. இதில் ஐபிஎல் போட்டிகளை சென்னையிலிருந்து வேறு மாநிலத்துக்கு மாற்றலாம் என முடிவு எடுக்கப்பட்டது. எனவே சென்னையில் நடத்த திட்டமிட்ட மொத்தம் 7 போட்டிகளில் நேற்று ஒன்று நடந்துவிட்டது.

எந்த மாநிலத்தில்…

மீதமுள்ள 6 போட்டிகள் வேறு மாநிலத்துக்கு மாற்றுவது என்று ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. புனேயில் போட்டியை நடத்தத் தயாராக உள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் கூறியுள்ளது. இதற்கு சிஎஸ்கே அணியும் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது

tamil.oneindia.com

TAGS: