அசீஸ் பாரி டிஏபி-இன் பேராக் எம்பி-யா?

14வது  பொதுத்   தேர்தலில்  பேராக்கை     பக்கத்தான்  ஹரப்பான்  கைப்பற்றினால்   கல்வியாளர்   அசீஸ்  பாரி    டிஏபி  கட்சியின்   பேராக்     மந்திரி  புசாராக்கப்படுவார்   என்று  ஊகங்கள்  வலம்    வந்து  கொண்டிருக்கின்றன.

மலேசியாகினி  நேர்காணலில்   அப்துல்   அசீஸ்    அந்த  ஊகங்களுக்கு  முக்கியத்துவம்  அளிக்கவில்லை,   அதே  வேளை  அவர்   அவற்றை  ஒரேயடியாக  மறுக்கவுமில்லை.

அப்துல்  அசீஸ்,   தெபிங்   திங்கி   தொகுதியில்   போட்டியிடுவார்   என்று  கூறப்பட்டுள்ளது.  டிஏபிக்கு  இது   ஒரு  பத்திரமான  தொகுதி.

அப்பகுதியில்  தாம்  பணி  புரிந்து  கொண்டிருப்பதாகக்  கூறிய   அவர்  தம்  தலைவிதியைக்    கட்சித்   தலைமையே  தீர்மானிக்க   வேண்டும்   என்றார்.

“பேராக்கில்  ஒரு  பத்திரமான  இடத்தில்  ஒரு  மலாய்   வேட்பாளரை   டிஏபி  களமிறக்குவது   2008-இல்  ஏற்பட்டதுபோன்ற  ஒரு  நிலை  மீண்டும்  நிகழாமல்  தடுக்கும்   ஒரு   உத்தி  என்று  கூறப்படுகிறது. அப்போது  டிஏபி   மாநிலச்  சட்டமன்றத்தில்  அதிகமான   இடங்களைப்   பெற்றிருந்தாலும்    மந்திரி  புசாரை  நியமிக்க   முடியவில்லை.

“ஏனென்றால்  மாநில   அரசமைப்பு   ஒரு  மலாய்க்காரர்தான்   மந்திரி  புசார்   ஆக  முடியும்   என்கிறது.  முடிவில்,  பாஸின்  முகம்மட்  நிஜார்   ஜமாலுடின்  மந்திரி  புசாரானார்.

“ஆனால்,  அந்தப்  பக்கத்தான்  ரக்யாட்  அரசு  நீண்ட  நாள்  நிலைக்கவில்லை.  மூன்று  சட்டமண்ற  உறுப்பினர்கள்   கட்சி  தாவியதால்   அது  கவிழ்ந்தது”,  என்றார்.

இப்படி  ஊகங்கள்  கூறப்படுவதே  இயல்பே  என்பதை  ஒப்புக்கொண்ட  அப்துல்  அசீஸ்,  கடந்த  இரண்டு   தேர்தல்களிலும்    பேராக்   சட்டமன்றத்தில்  கூடுதல்    இடங்களைப்  பெற்றிருந்த  கட்சி   டிஏபிதான் என்பதைச்  சுட்டிக்காட்டினார்.

59  உறுப்பினர்களைக்  கொண்ட      பேராக்     சட்டமன்றத்தில்   இப்போது  டிஏபிக்கு  18  இடங்கள், பிகேஆருக்கு   ஐந்து,  அமனாவுக்கு  ஒன்று.  பாஸுக்கு  4.  பிஎன்  31  இடங்களை  வைத்துள்ளது.

“மக்கள்  எதை  வேண்டுமானாலும்  பேசலாம்,   ஆருடம்   கூறலாம்.  நான்  முதன்முதலில்   டிஏபி-இல்   சேர்ந்தபோதுகூட   இதே  போன்றுதான்  ஊகங்கள்   தெரிவிக்கப்பட்டன. அப்போது  நான்  சிலாங்கூரில்   டிஏபி  மந்திரி  புசாராக   நியமிக்கப்படுவேன்  என்றனர்”,  என  அப்துல்   அசீஸ்  கூறினார்.