ஆன்மீக தலத்தில் நடந்த சீருடை போலீசின் அத்துமீறல்.. இப்போது ஏன் ரஜினிகாந்த் மவுனம்?

சென்னை: காஷ்மீரில் 8 வயது சிறுமி கொடுமையாக பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல நாட்கள் பட்டினி போட்டு, மயக்க மருந்து கொடுத்து 8 வயது சிறுமி தொடர்ந்து பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதில் போலீஸ் அதிகாரிகள் சிலருக்கும் தொடர்புள்ளது அம்பலமாகியுள்ளது.

இந்த பலாத்கார சம்பவத்திற்கு எதிராக நாடே கொந்தளித்துள்ளது. நீதிகேட்கும் ஹேஷ்டேக் நாடு முழுக்க இதுகுறித்த கருத்துக்களை பதிவு செய்ய உருவாக்கப்பட்டு டிரெண்ட் ஆகியுள்ளது.

நாடு கொதிக்கிறது

டெல்லி இந்தியா கேட் பகுதியில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் நேற்று நள்ளிரவில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலம் நடத்தினர். நடிகர் கமல்ஹாசன் இன்று வெளியிட்ட டுவிட்டில் சிறுமி பலாத்கார கொலை சம்பவம் குறித்து தனி நபராகவும் மிகுந்த வேதனை அடைவதாகவும், அவரை காப்பாற்ற தவறி விட்டதற்காக வருத்தப்படுவதாகவும் கூறியுள்ளார்.

கொள்கைகளுடன் தொடர்புள்ள சம்பவம்

இப்படி நாடு முழுக்க விவாதம் கிளப்பியுள்ள விவகாரத்தில் விரைவில் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் கருத்து கூறவில்லை. இதுவரை. கண்டிப்பாக ரஜினிகாந்த் கருத்து கூறித்தான் ஆக வேண்டுமா என்றால், ஆம் என்பதுதான் பதிலாக இருக்கும். ஏனெனில், ரஜினிகாந்த்தின் கொள்கை, கோட்பாடுகளோடு மிகுந்த தொடர்புள்ளதாக உள்ளது இந்த கோர சம்பவம்.

உச்சத்தின் உச்சம்

சீருடையில் உள்ள காவலரை தாக்குவது வன்முறையின் உச்சம் என சில நாட்கள் முன்பாக திடீரென சீறினார் ரஜினிகாந்த். சீருடையில் உள்ள காவலர் சிறுமியை சீரழித்துள்ள சம்பவம்தான் இந்த பலாத்காரமாகும். இது வன்முறையின் உச்சத்திற்கு எல்லாம் உச்சம் என்பதால், உச்ச நடிகரின் கருத்து இங்கே தேவைப்படுகிறது.

மத வெறி மோதல்

ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்துவிட்டார், ஆன்மீக அரசியல்தான் தனது பாணி என்று. அந்த வகையிலும், இந்த பலாத்கார சம்பவம் தொடர்புள்ளதாக உள்ளது. மத வெறி காரணமாகவே, சிறுமி இவ்வளவு சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அதுவும், ஆன்மீக தலம் ஒன்றில் வைத்து இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆன்மீக அரசியலை முன்னெடுக்க உள்ள ரஜினிகாந்த், ஆன்மீகத்தின் பெயரால் நடந்த இந்த மூர்க்கத்தை கண்டித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

கருத்து இதற்கே தேவை

பண மதிப்பிழப்பிற்கு புதிய இந்தியா பிறந்துவிட்டதாக டுவிட் செய்த ரஜினிகாந்த், புதிய இந்தியாவில் நடைபெற்ற இந்த மாபெரும் அவலத்திற்கு எதிராக குரல் கொடுத்திருக்க வேண்டாமா. யாருமே கேட்காமல் ஐபிஎல் போராட்டங்களில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை பெரிதுபடுத்திய ரஜினிகாந்த், நாடே பற்றி எறியும் பிரச்சினையில் மவுனம் கலைக்க வேண்டாமா? நடிகராகவோ, அரசியல்வாதியாகவோ கூட கருத்து கூற வேண்டாம். இரு பெண் குழந்தைகளின் தந்தை என்ற சாமானியனாக இந்த துக்கத்தில் அவர் பங்கெடுத்திருக்க வேண்டாமா? விசாரணையின் தீவிரத்தை அதிகரிக்க ரஜினிகாந்த் கருத்து உதவ கூடுமே! ஏன் செய்யவில்லை?

tamil.oneindia.com