போராட்டத்தை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டு தமிழர்களுக்கு வாழ்த்தா.. ரஜினியை புரிஞ்சுக்க முடியலையே!

சென்னை: அதிகார வர்க்கத்துக்கு ஆதரவாக கருத்தை தெரிவித்துவிட்டு தற்போது விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை ரஜினிகாந்த் கூறியுள்ளது முரண்பாடாக உள்ளது.

கடந்த 10-ஆம் தேதி சென்னை அண்ணா சாலையில் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக மெகா போராட்டம் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சியினர், தமிழ், விவசாய அமைப்பினர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தின்போது மைதானத்துக்குள் விட மறுத்த 3 போலீஸ்காரர்களை ஒரு தரப்பு தாக்கிய வீடியோ வைரலானது.

வன்முறையின் உச்சமாம்

ரஜினி பெரும்பாலும் வாழ்த்துகளை கூறுவதற்கு மட்டுமே டுவிட்டர் பக்கத்தில் தலைகாட்டுவார். மக்கள் தொடர்பான விவகாரங்களில் தலையிட மாட்டார் என்ற கருத்து நிலவி வருகிறது. அதை உறுதிப்படுத்துவது போல, போராட்டத்தின்போது சீருடையில் இருந்த போலீஸாரை தாக்கியது வன்முறையின் உச்சம் என்று டுவிட்டரில் ரஜினி வீடியோவுடன் டிவீட் போட்டிருந்தார். இதற்கு மக்களிடையே மிகப் பெரிய கொந்தளிப்பு எழுந்தது.

அஸ்வினி கொலை

சீருடையில் இருந்த காவலர்களை தாக்கியதற்காக இத்தனை கொதித்த ரஜினி திருச்சியில் உஷா என்பவர் போலீஸார் எட்டி உதைத்ததால் உயிரிழந்த சம்பவம், திருப்பூரில் சீருடையில் இருந்த டிஎஸ்பி, டாஸ்மாக் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் கன்னத்தில் அறைந்த சம்பவம், பிரகாஷின் தாய் மீதான தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்களில் போலீஸாருக்கு ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லையே என்ற ஆதங்கம் இருந்தது.

சிறுமி குறித்தும் டுவீட் இல்லை

காஷ்மீரில் கத்துவாவில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ரஜினி டுவிட்டர் பக்கம் வரவில்லை. இந்த சம்பவத்தில் போலீஸ் சீருடையில் ஒரு காவலர் அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இது வன்முறையின் உச்சமில்லையா என கேட்டு சமூகவலைதளங்கள் கொதித்தன.

இப்போது வாழ்த்து

போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் அதிகார வர்க்கத்துக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டு போராட்டத்தையே ரஜினிகாந்த் கொச்சைப்படுத்தினார். அந்த டுவிட்டரில் மத்திய அரசுக்கு எதிராகவோ அறவழி போராட்டத்துக்கு அனுமதி தராத மாநில அரசுக்கோ எவ்வித கண்டனத்தையும் பதிவு செய்யவில்லை.

முரண்பாடான ரஜினி

போலீஸார் மீது பொதுமக்கள் தாக்குதல் வன்முறையின் உச்சம் என்றால் பொதுமக்கள் மீது உயிரிழப்பு ஏற்படும் அளவுக்கு நடந்து கொள்ளும் போலீஸாரின் செயல்பாடு என்னவென்று கூறலாம் என ரஜினி விளக்கினால்தான் புரியும். இத்தனை களேபரங்களுக்கு மத்தியில், வாழ்க்கையே போராட்டமாகிவிட்டது என்று தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தில் கூறியுள்ளார். அந்தப் போராட்டம்தான் நாட்டில் தற்போது நடந்து வருகிறது. அதை ஆதரிக்காமல், தமிழ்ப் புத்தாண்டுக்கு வாழ்த்து மட்டும் கூறியுள்ளார் ரஜினி.. என்னே நகை முரண்!

tamil.oneindia.com