தமிழ் சினிமாவின் எதிர்காலம் இதுதான்! – ‘டுலெட்’ நாயகன் சந்தோஷ் நம்பிராஜன் பேட்டி

இன்று அறிவிக்கப்பட்டிருக்கும் தேசிய விருதுகளில் சிறந்த தமிழ் படமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது ‘டுலெட்’. கேள்விப்பட்டதே இல்லை என்கிறீர்களா? ஆம், இன்னும் திரைக்கே வரவில்லை. ஆனால், உலக அளவில் பல விருதுகளை வென்றுவிட்டு, இப்பொழுது இந்தியாவின் தேசிய விருதையும் வென்றிருக்கிறது டுலெட். படத்தை இயக்கியவர் ‘கல்லூரி’, ‘பரதேசி’ உட்பட பல படங்களின் ஒளிப்பதிவாளரும் உலக சினிமா பற்றிய புத்தகங்கள் எழுதியவருமான செழியன். படத்தில் நடித்திருப்பவரும் ஒரு ஒளிப்பதிவாளர் தான். ‘கத்துக்குட்டி’ படத்தின் ஒளிப்பதிவாளரான இவர் எழுத்தாளர் விக்கிரமாதித்யனின் மகன்.

‘டுலெட்’ திரைப்படம், செழியன், நடிப்பு என்று சந்தோஷ் நம்பிராஜன் நம்மிடம் பேசியது…

ஒளிப்பதிவிலிருந்து நடிப்பு… முதல் படத்திலேயே உலக அங்கீகாரம் பெரும் வாய்ப்பு… எப்படி இது?

போன வருஷம் வரை நான் நடிப்பேன் என்பது எனக்கே தெரியாது. நான் சிங்கப்பூரிலிருந்த போது திடீரென்று ஃபோன் செய்த செழியன் சார், ‘ஒரு படம் பண்ணப் போறேன், நீதான் நடிக்கிற’ என்று கூப்பிட்டார். உடனே கெளம்பி வந்துட்டேன். வந்ததுக்கு அப்புறம் தான் தெரியும், நான் தான் ஹீரோனு… ‘என்ன சார்?’னு கேட்டப்போ, ‘இந்த கதாபாத்திரத்துக்கு உன் முகமும், உன் கண்ணும் தேவை. நீதான் இதை செய்ய வேண்டு’மென்று சொன்னார். அவர் என் அண்ணன் மாதிரி. அவர் சொன்னதை செய்தேன்.

டுலெட் – சென்னையில் வாடகை வீடு பிரச்சனை பற்றிய கதையா?

ஹா…ஹா… எளிதில் கணிக்கக் கூடிய வகையில் தான்  டைட்டில் வச்சிருக்கார். ஆனால், அந்த பிரச்சனையில் பேசியிருக்கும் விஷயமும், கோணமும் வேறு. லட்சக்கணக்கான வெளியூர் மக்களுக்கு வாழ்வளிக்கும் சென்னையில் இன்னும்  எத்தனையோ பேர் தங்க வசதியில்லாமல் ‘சென்னைக்கு மிக அருகில்’ என்று ரியல் எஸ்டேட்காரர்களால் சொல்லப்படும் வேறு மாவட்டங்களில் இருந்து வந்து போகிறார்கள். அது சம்மந்தமான ஒரு கதையைத் தான் பேசியிருக்கிறார் செழியன் சார். பின்னணி இசை, பாடல்கள் உள்பட வணிக திரைப்படங்களுக்கான எந்த அம்சமும் இல்லாத மிக இயல்பான படமா இதை உருவாக்கியிருக்கார்.

கேமராவுக்குப் பின்னாடியிருந்து முன்னாடி வந்த அனுபவம்…?

‘கல்லூரி’யில் ஆரம்பித்து செழியன் சார் கூட சில படங்கள் அசிஸ்டண்டாகவும், கருப்பம்பட்டி, கத்துக்குட்டி படங்களில் ஒளிப்பதிவாளராகவும் வேலை செய்திருந்தாலும் ஒரு சீன்ல கூட கேமரா முன்னாடி வந்ததில்லை. அந்த எண்ணமே இருந்ததில்லை. ‘நீயா மட்டும் இரு’னு சொல்லி சார் கூப்பிட்டதால வந்தேன். ஒரு சின்ன பையனுக்கு அப்பாவா நடிச்சிருக்கேன். ஷாட்டுக்கு முன்னாடி வரைக்கும் ‘அங்கிள்’னு கூப்பிட்டுட்டு, ஷாட்ல ‘அப்பா’னு கூப்பிடனும் அவன். படத்தில் அப்பா-மகன் நெருக்கம் தெரிய வேண்டுமென்பதற்காக ரெண்டு பேரும் சேர்ந்து ஊர் சுற்றினோம். இப்படி, நடிப்பு எனக்கு சவாலாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. இனி வாய்ப்பு வந்தால் நடிக்கலாம்னு தான் தோனுது.

‘டுலெட்’ ஒரு ‘இண்டிபெண்டண்ட் மூவி’ என்கிறார்கள்… மனைவியின் நகையை அடகு வைத்து எடுத்தேன் என்று செழியன் கூறியுள்ளார். இது போன்ற படங்களுக்கு இன்னும் அந்த நிலை தான் இருக்கா?

ஆமா… இப்பவும் சிறிய படங்களை தயாரிக்க பலரும் தயாராக இல்லை. இத்தனைக்கும் இப்போதெல்லாம் பெருசா, பொழுதுபோக்கா, மசாலாவா எடுக்கப்படுகின்ற பல படங்கள் தோல்வி அடைகின்றன. அதுல அவர்களுக்கு நஷ்டமும் பெரியது. ஒரு படம் அப்படி எடுக்குற  பணத்தில் ரெண்டு, மூன்று சிறிய படங்களை எடுக்கலாம். வியாபாரமும் நன்றாகத்தான் இருக்கும், நஷ்டமானாலும் பெரிதாக இருக்காது, நல்ல படமெடுத்த பெயரும் காலம் காலமா இருக்கும். ‘சேது’ எடுத்த கந்தசாமி பெயர் இப்பவும் நமக்குத் தெரியும். மசாலா படங்களை மட்டும் எடுத்தவர்கள் பெயர் யாருக்குத் தெரியும்? இப்போ,  இண்டிபெண்டண்ட் படங்களுக்கு உலக திரைப்பட விழாக்கள், மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் என்று வியாபார ரீதியாகவும் ஓரளவு வாய்ப்புகள் இருக்கு. தமிழ் சினிமாவின் எதிர்கால வடிவம் இதுவாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.