’’நாங்கள் வன்முறைக்கும்பல் அல்ல; மிரட்டுவதை போலீஸ் நிறுத்திக்கொள்ள வேண்டும்’’ – சீமான் ஆவேசம்

காவிரி விவகாரத்தில் ஐபிஎல் போட்டிக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் போலீஸ் மற்றும் ரசிகர்கள் தாக்கப்பட்டனர்.  போராட்டக்காரர்களும் அதிகம் தாக்குதலுக்கு உள்ளாகினர். இதில், போலீசாரை தாக்கியது நாம் தமிழர் கட்சியைச்சேர்ந்தவர்தான் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் செய்தியாளர்கள் முன் விளக்கம் அளித்தார்.

அவர்,   ‘’தமிழ்நாடு முழுவதும் என் கட்சியினரை மிரட்டி மிரட்டி கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?  போலீசாரை தாக்கியது யார் என்று விசாரித்து நடவடிக்கை எடுங்கள்.  அதற்காக போராட்டத்தில் நான் நின்ற காரணத்தினால் அவர் நாம் தமிழர் கட்சிதான் என்று எப்படி முடிவெடுத்தீர்கள்.

காவலரை தாக்கியது தவறு.  அதை ஒத்துக்கொள்ள முடியாது.  அதைப்போலவே காவலர்களும் போராடுகிற எங்களை தாக்கியது ரொம்ப தவறு.  நாங்கள் சமூக பொறுப்பற்றவர்களா? பல ஆண்டுகளாக சமூக குற்றங்களை செய்துகொண்டிருக்கிறவர்களா?  நானும், பாரதிராஜா போன்றோர் எல்லாம் போராடியது எங்களுக்காகவா?

காவிரிக்காக எத்துனையோ போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறோம்.  என் தம்பி விக்னேஷ் தீக்குளித்து இறந்தான். யாரும் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால், எங்கள் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் என்று ஐபிஎல் போட்டியை தடுத்த செய்தி மட்டும் நியூயார்க டைம்ஸ் பத்திரிகையில் வருகிறது.   பெரும் முதலாளிகள் பாதிக்கப்படும்போதுதான் கவலை வருகிறது.   எங்கள் உணர்வை வெளிப்படுத்துவதற்கு போராட்ட வடிவத்தை தவிர வேறு வழியில்லை.   அதனால்தான் நாங்கள் அதைச்செய்கிறோம்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்ககோரி அரசே உண்ணாவிரதம் இருக்கிறது. அதற்கு ஆதரவான போராட்டத்தைத்தான் நாங்கள் முன்னெடுத்தோம்.      காவலரை அடிப்பதற்காகவே நாங்கள் கட்சி வைத்திருப்பது போலவும், போலீசாரை எதிர்த்து போராடுவதற்காக நாங்கள் கட்சியை நடத்துவது போலவும் காட்டுவது ரொம்ப தவறானது.   போராட்டத்தின் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது, அங்கே போலீசார் தாக்கப்பட்டபோது  விலக்கி விட்ட என் மேல் கொலை முயற்சி வழக்கு போட்டிருக்கிறீர்கள்.  என்னை கைது செய்யுங்கள். நான் தயாராக இருக்கிறேன்.  ஆனால், தேவையில்லாமல் என் கட்சியினரை மிரட்டுவது, தூக்கி உள்ளே போடுவது அவசியமற்றது.   இது அறம் சார்ந்த அனுகுமுறை அல்ல.

ஐபிஎல் விளையாட்டின்போது கொடிகளை காட்சிய என கட்சியினர் மீது வழக்கு போடுங்கள்.  நான் ஜாமீனில் எடுத்துக்கொள்கிறேன் என்று நானே முன்வந்து சொன்னேன்.  அதற்காக குற்றமே செய்யாத என் கட்சியினரை துரத்தி துரத்தி கைது செய்வது ஏன்?

நாங்கள் வன்முறைக்கும்பல் அல்ல; எங்களை ரவுடிக்கும்பல் போல, குற்றவாளி கட்சி போல காட்டுவதை எப்படி ஏற்பது.

தோனி ரசிகரை தாக்கியது என் கட்சிக்காரர் என்று போலீசார் முதலில் கூறினர்.  பின்னர் விசாரணையில் அவர் கருணாஸ் கட்சிக்காரர் என்று தெரியவந்தது.   காவலரை தாக்கிய அந்த நபரை கைது செய்து விசாரியுங்கள்.  உறுதியாக சொல்கிறேன் .  அவர் நாம் தமிழர் கட்சி அல்ல.  இருக்கவே முடியாது.  அப்படி நாம் தமிழர் கட்சியாக இருந்தால் நடவடிக்கை எடுத்துக்கொள்ளட்டும்.  நாம் தமிழர் கட்சியினரை மிரட்டுவதை போலீஸ் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

போராட்டத்தில் போலீசார் அடிக்க வேண்டிய அவசியம் என்ன? பெண்களையும் அடித்தார்கள். இயக்குநர் வெற்றிமாறனை கண்மூடித்தனமாக போலீசார் தாக்கினர்.  அதை தடுக்கப்போன இயக்குநர் களஞ்சியத்தின் மீது நெஞ்சிலேயே தாக்கியுள்ளனர்.

காவலரை ஒருவர் அடித்தது விபத்து. ஆனால், காவலர்கள் எங்களை தாக்கியது திட்டமிட்ட ஒன்றுதான்’’ என்று கூறினார்.

-nakkheeran.in

TAGS: