இந்து அமைப்புகளால் உயிருக்கு அச்சுறுத்தல்… பாடகர் கோவன் குற்றச்சாட்டு!

சென்னை : இந்து அமைப்புகளால் தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சமூக செயற்பாட்டாளரும் பாடகருமான கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருச்சியில் உள்ள வீட்டில் வைத்து பாடகர் கோவன் நேற்று கைது செய்யப்பட்டார். பிரதமர், முதல்வரை விமர்சித்து ராமராஜ்ய ரதயாத்திரை பாடல் பாடியதாக குற்றம்சாட்டி வீட்டின் கதவை உடைத்து கோவனை போலீசார் கைது செய்தனர். எனினும் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நிபந்தனை ஜாமினில் கோவன் வெளிவந்தார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கோவன் கூறியதாவது : காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காத ஆத்திரத்தில் “எலே எங்கு வந்து நடத்துற ரதயாத்திரை, ராமராஜ்ஜியத்துக்கு இங்கு தான்டா இறுதி யாத்திரை. ராமராஜ்யம் அது மோடி ராஜ்யம் நீ ஆரியக் கூத்தாடினாலும் அழிவு நிச்சயம்” என்று பாடினேன். இதுதான் அந்தப் பாடலின் பல்லவி.

மஃப்டியில் வந்த போலீசார்

நான் கைது செய்யப்பட்டதே எனக்கு தெரியாது, வழக்கமாக என்னை சந்திக்க வீட்டிற்கு பல தோழர்கள் வந்து செல்வார்கள். அது போல ஒரு நபர் என்னுடைய வீட்டின் பின்புறம் வந்தார், அவரை நான் ஏன் பின்பக்கம் வருகிறீர்கள், முன்னாடி வாங்க என்று சொன்னேன்.

ஏன் மஃப்டியிலேயே வருகிறார்கள்

அதற்கு அவர் இல்லை நான் உங்களை கைது செய்ய வருகிறேன் என்று சொன்னார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, இப்படித்தான் டாஸ்மாக் பாடல் பாடிய போது நள்ளிரவில் வந்து என்னை கைது செய்வதாகச் சொன்னார்கள். அப்போதும் காவலர்கள் யாரும் சீருடையில் வரவில்லை, அதனால் அவர்களை நண்பர்கள் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

போலீசாரா இந்துத்துவா அமைப்பினரா?

இந்த முறை அதனால் தான் நான் சுதாரித்துக் கொண்டு அவர்களை வெளியே போகச் சொன்னேன். எனக்கு இன்னொரு சந்தேகமும் இருந்தது, உண்மையில் அவர்கள் காவலர்கள் தானா அல்லது அரசியல் படுகொலை செய்வதற்காக வந்த இந்துத்துவா அமைப்புகளா என்பது தெரியவில்லை. கவுரிலங்கேஷ் கொலையிலும் இந்துத்துவா அமைப்பினரின் பெயர் தான் சொல்லப்படுகிறது. எனவே எனக்கும் அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுவிடுமோ என்று அச்சப்படுகிறேன்.

இந்துத்துவா அமைப்பால் அச்சுறுத்தல்

நான் உயிருக்கு பயந்து இருப்பதற்கு காரணம் நாடு ஜனநாயக முறையில் நடக்கவில்லை, பாசிச ஆட்சி தான் நடக்கிறது. மக்களைக் கூட போராட விடாமல் வழக்கு போடுவீர்கள், அவர்களை அழைத்து சென்று என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் அதிகாரத்தில் இருப்பவர்கள். எனக்கு ஒரு அச்சுறுத்தல் இருப்பதாக நான் கருதுகிறேன், அந்த அச்சுறுத்தல் தேசத்திற்கும், மக்களுக்குமே இருப்பதாகத் தான் நான் நினைக்கிறேன் என்றும் கோவன் தெரிவித்தார்.

tamil.oneindia.com

TAGS: