டாக்டர் பூ : ஸ்கூடாயிலிருந்து அகற்றப்பட்டபோது, என் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது

ஜொகூர் மாநில முன்னாள் டிஏபி தலைவர் டாக்டர் பூ செங் ஹாவ், தான் லாபிஸ் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்; அதன் விளைவாக, இம்முறை அவர் தேர்தலில் நிற்கப்போவதில்லை என்று தெரிகிறது.

“லாபிஸ் நாடாளுமன்றத்தில் போட்டியிட விரும்பவில்லை எனப் பல பலமுறை கூறியும், நான் ஸ்கூடாயிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டேன்,” என்று மலேசியாகினி தொடர்புகொண்ட போது அவர் தெரிவித்தார்.

நேற்று, டிஏபி தலைமையகம், மெங்கிபோல் சட்டமன்ற உறுப்பினர் தான் ஹோங் பின், இம்முறை ஸ்கூடாயில் போட்டியிடுவார் என்று அறிவித்தது.

“நான் பணிசெய்யாத இடத்தில் போட்டியிட போவதில்லை என முன்னமே லியூவிடம் (ஜொகூர் டிஏபி தலைவர்) தெரிவித்துவிட்டேன்,” என்றார் பூ.

கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதியின் முடிவை டிஏபி தலைமையகம் மதிக்க வேண்டும் என்றும் பூ கூறினார்.