எகிப்து ராணுவ முகாமை கைப்பற்றும் முயற்சி முறியடிப்பு – 22 பேர் பலி..

எகிப்தில் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபர் முகமது மோர்சி (64). முப்பதாண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருந்த ஹோஸ்னி முபாரக்கை கடந்த 2012-ம் ஆண்டில் பதவியிலிருந்து இறக்கிவிட்டு அதிபர் பதவியைப் பிடித்த மோர்சியால் ஓராண்டுக்கு மேல் அந்தப் பதவியில் நீடிக்க முடியவில்லை.

எகிப்தின் ராணுவத் தலைவராக இருந்த அப்டெல் சிசி என்பவர் மோர்சியை பதவியிலிருந்து இறக்கி கைது செய்து சிறையிலும் அடைத்தார். அவர்மீது பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து மோர்சியின் ஆதரவாளர்கள் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, நைல் நதியை ஒட்டியுள்ள சமவெளி பகுதியான வடக்கு மற்றும் மத்திய சினாய் பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்திவரும் கலகப்படையினரை பயங்கரவாதிகளாக அறிவித்துள்ள எகிப்து அரசு அவர்களை வேட்டையாடும் நடவடிக்கைகளை தீவிரமாக முடுக்கி விட்டுள்ளது.

இந்நிலையில், இன்று அதிகாலை சினாய் பிரதேசத்தின் மத்திய பகுதியில் உள்ள ராணுவ முகாமை கைப்பற்றும் நோக்கத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் அவர்களை தடுக்க எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இருதரப்பினருக்கும் இடையில் நடந்த மோதலில் தீவிரவாதிகளில் 14 பேரும் 8 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். காயமடைந்த 15 ராணுவ வீரர்கள் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.