சுமந்திரனின் பந்தை ‘சிக்ஸராக’ மாற்றிய விக்கி

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்தியாவுக்குப் புறப்பட்டுச் செல்வதற்கு முன்னதாக, தனது அரசியல் எதிர்காலம் பற்றிய கேள்விகளுக்கு, சில தெளிவான விடைகளைக் கூறி விட்டுப் போயிருக்கிறார்.

கூட்டமைப்பின் சார்பில் போட்டியில் நிறுத்தப்படாவிடின், விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து விலகி விடுவாரா, அல்லது வேறொரு கட்சி அல்லது கூட்டணியில் போட்டியில் குதிப்பாரா என்ற கேள்விகள் இருந்து கொண்டிருந்தன.

அந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில், முதலமைச்சரின் அறிக்கை அமைந்திருக்கிறது. முழுமையாக இல்லாவிடினும், அவரது சில தெளிவான நிலைப்பாடுகளை, இந்த அறிக்கையின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

தனக்கு எதிராக, தமிழரசுக் கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குப் பின்னர், முதலமைச்சர் விக்னேஸ்வரன், வாராந்தம் கேள்வி- பதில் அறிக்கைகளைத் தானே, ஊடகங்களுக்கு அனுப்பி வந்தார்.

வாரம் ஒரு கேள்வி – பதில் என்ற தலைப்பில் வெளியான அவரது அறிக்கையில், இம்முறை மூன்று கேள்விகளும் பதில்களும் இடம்பெற்றிருந்தன.

முதலாவது கேள்வி, புதுவருடம் சார்ந்தது; அது சம்பிரதாயத்துக்கானது.

இரண்டாவது கேள்வி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அடுத்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில், உங்களை நிறுத்த முன்வந்தால், அதனை ஏற்றுக் கொள்வீர்களா? என்பது.

சில நாட்களுக்கு முன்னர்தான், யாழ்ப்பாணத்தில், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீண்டும் கூட்டமைப்பின் வேட்பாளராகப் போட்டியில் நிறுத்தப்படமாட்டார் என்று கூறியிருந்தார்.

“2013இல் அவரைப் போட்டியிட அழைத்தபோதே, இரண்டு ஆண்டுகளுக்கு மாத்திரம் பதவியில் இருப்போம் என்றே கூறியிருந்தார். ஐந்து ஆண்டுகள் அவர் பதவியில் இருந்து விட்டார். எனவே, அவரை மீண்டும் நாங்கள் கஷ்டப்படுத்த விரும்பவில்லை” என்று சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.

சுமந்திரனின் இந்தக் கருத்து ஒட்டுமொத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்து அல்ல என்று சிவாஜிலிங்கம் போன்றவர்கள் கூறியிருந்தாலும், முதலமைச்சர் வேட்பாளர் குறித்து இப்போது பேச வேண்டியதில்லை; நேரம் வரும் போது அறிவிக்கப்படும் என்று இரா.சம்பந்தன் குறிப்பிட்டிருந்தாலும், முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்குத் தனது நிலையை வெளிப்படுத்த, இதைவிடப் பொருத்தமான நேரம் வேறு இல்லை என்றே கூறலாம்.

வடக்கு மாகாணசபையின் ஆயுள் காலம் முடிய இன்னும், ஆறு மாதங்கள் தான் இருக்கின்றன. அதற்குள் தனது முடிவை அறிவித்துவிட வேண்டிய தேவை, விக்னேஸ்வரனுக்கு இருந்தது.

தாமாக முன்வந்து, கூட்டமைப்பின் கொள்கைகள் சரியில்லை. அதனால் வேறொரு கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறேன்; அல்லது புதியதொரு கூட்டணியை அமைக்கிறேன் என்று கூறினால், கூட்டமைப்பைப் பிளவுபடுத்தி விட்டுப் போய் விட்டார் என்ற பழி வந்து சேரும்.

அதனால்தான் விக்னேஸ்வரன் பொறுமையாகக் காத்திருந்தார். அவருக்கான நேரம் வந்தபோது, சுமந்திரன் கொடுத்த பந்தைச் சரியாகத் தூக்கி அடித்து, ‘சிக்ஸர்’ ஆக மாற்றியிருக்கிறார்.

அரசியலில் இராஜதந்திரம் என்பது முக்கியமானது. விக்னேஸ்வரன் விடயத்தில், சுமந்திரன் அவ்வாறு நடந்து கொள்கிறாரா என்ற கேள்வி நிறையவே இருக்கிறது.

கடைசி நேரம் வரையில், விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவாரா, இல்லையா என்ற பரபரப்பை ஏற்படுத்தி வைத்து விட்டு, கடைசி நேரத்தில் அவரை வெட்டி விட்டிருந்தால், அது இராஜதந்திரமாக இருந்திருக்கும். அவராலும், அதற்கேற்ப காய்களை நகர்த்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கும்.

முன்கூட்டியே விக்னேஸ்வரனிடம் பொல்லைக் கொடுத்து விட்டார் சுமந்திரன். இதனால் அவர், அடுத்துள்ள ஆறு மாதங்களுக்குள் தன்னைப் பலப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.

அதை முன்னிறுத்தித் தான், முதலாவது கேள்வியையும் பதிலையும் கொடுத்திருக்கிறார் விக்னேஸ்வரன்.
அந்தக் கேள்வியின் ஊடாக, அவர், தான் போட்டியிட்ட போது இருந்த கூட்டமைப்பும் அதன் கொள்கையும் இப்போது இல்லை என்று நிறுவ முற்பட்டிருக்கிறார்.

கூட்டமைப்பை உருவாக்கிய எத்தனை கட்சிகள், இப்போது அதில் இருக்கின்றன என்ற கேள்வியை எழுப்ப முனைந்திருக்கிறார்.

அப்படி ஓர் அமைப்பே இல்லாதவிடத்து, தனக்கு எப்படி அழைப்பு வரும் என்ற முடிவையும், தானே கூறியிருக்கிறார்.

அதாவது, முன்பு தான் போட்டியிட்ட போது இருந்த கூட்டமைப்பு, இப்போது இல்லை என்பதும், எனவே, தனக்குப் போட்டியிடும் வாய்ப்பு வராது என்றும் திடமான நம்பிக்கையை ஊட்ட முனைந்திருக்கிறார்.
இரண்டாவது கேள்வி, சுமந்திரனின் அறிவிப்புக்குப் பதிலளிக்கும் வகையிலானது. அடுத்த கட்டம் பற்றிய கேள்விகளுக்கு, விடையளிக்கும் வகையில் அது அமைக்கப்பட்டிருந்தது.

அரசியலுக்கு வருவதில்லை என்ற திடமான முடிவில் இருந்த தன்னைச் சமாதானப்படுத்தி, அழைத்து வருவதற்கு கூறப்பட்ட மாற்று யோசனைகளில் ஒன்றே, இரண்டு வருட முதலமைச்சர் பதவி என்று, தனது பதிலில் கூறியுள்ள முதலமைச்சர், தான் அவ்வாறு கூறியதாக ஒப்புக்கொள்ளவுமில்லை; நிராகரிக்கவுமில்லை.

ஆனால், அவ்வாறு கூறப்பட்ட யோசனைகளைப் பசப்பு வார்த்தைகளை “குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு” என்று கூறியிருக்கிறார். ஒரு வகையில் அது தனக்கும் பொருந்துமோ என்பதை, அவர் மறந்து விட்டார் போலும்.

கூட்டமைப்புத் தலைமை, சர்வாதிகாரத்தனத்துடன் நடப்பதாக குற்றம்சாட்டியிருக்கிறார்; தான் கூட்டமைப்பைச் சிதைக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். தனக்கு எதிராக, குழிபறிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

போர்க்குற்றங்கள், உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் தான், தனித்து நின்று போராடியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

தான் மீண்டும் போட்டியிட வேண்டும் என்று, மக்கள் விரும்புவதாகவும், அதுவே இறைவனின் விருப்பம் என்பது போலவும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

தமிழரசுக் கட்சியில் இருந்து, போட்டியிட மீண்டும் அழைப்பு வரப் போவதில்லை என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன், தனது எதிர்கால அரசியல் பயணத்துக்கான இரண்டு வாய்ப்புகளையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

முதலாவது, கொள்கை ரீதியாக உடன்படும், வேறு ஒரு கட்சிக்கு ஊடாகத் தேர்தலில் நிற்கலாம் என்பது.
ஆனால், கடந்தகால அனுபவங்கள், நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொள்ளும் போது, அதில் பிரச்சினைகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே, முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையை ஏற்கவிருப்பதாகவும், அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக அவர் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஆனால், அது சரிப்பட்டு வராது என்பது, முதலமைச்சரின் அறிக்கையில் இருந்து தெளிவாகியிருக்கிறது.
இரண்டாவது வாய்ப்பு பற்றியும் அவர் கூறியிருக்கிறார். புதிய கட்சி ஒன்றை தொடங்குமாறு, பலரும் ஆலோசனை வழங்கி வருகின்றார்கள். கொள்கை ரீதியாக உடன்படும் அனைவருடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம் என்கின்றார்கள். இதுதான் அது.

ஆனால், இந்த இடத்தில் அவர் முடிவை அறிவிக்கவில்லை. ‘அதற்குரிய காலம் கனிந்து விட்டதோ நான் அறியேன்’ என்று தொக்கி நிற்க விட்டிருக்கிறார்.

புதிய கட்சி, புதிய கூட்டணி; இந்த இரண்டில், புதிய கூட்டணி அமைக்கும் முடிவையே அவர் பெரும்பாலும் முன்னெடுக்கலாம். ஏற்கெனவே, தம்முடன் இணைந்து செயற்படும் கட்சிகள், அமைப்புகளை ஒருங்கிணைத்து, அவர் மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கும் வாய்ப்புகள் உள்ளன.
இதை அவர் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தியிருக்கிறார் என்றே கூற வேண்டும்.

அதாவது, போட்டியிட கூட்டமைப்பு, வாய்ப்புக் கொடுக்க மறுத்தால், முதலமைச்சர் விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து ஒதுங்கிப் போய் விடக்கூடும் என்று சில தரப்பினரால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கப் போவதில்லை என்று உறுதிப்படுத்தியிருக்கிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், அடுத்த மாகாணசபைத் தேர்தலில் ‘மல்லுக்கட்ட’ப் போவதாகவும் அவர் உறுதி செய்திருக்கிறார்.

அதற்காக, அவர் தனிக்கட்சி, புதிய கூட்டணி அமைக்கின்ற வாய்ப்புகள் பற்றிப் பேசியிருக்கின்றார். முதலமைச்சரின் இந்த அறிக்கை, ஏற்கெனவே மாற்று அணியைப் பற்றி, நீண்டகாலமாகப் பேசிக் கொண்டிருந்த தரப்புகளை உற்சாகமடைய வைத்திருக்கிறது.

நிறுவன மயப்படுத்தப்பட்ட அரசியல் ஒன்றை முன்னெடுக்கும் முனைப்பு, முதலமைச்சரிடம் தோன்றியிருப்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அதன் பங்காளிக் கட்சிகளுக்கும் சாதகமான ஒன்றல்ல. இது கூட்டமைப்புக்கு மாத்திரமல்ல; தமிழ்த் தேசிய அரசியலுக்கும் ஏற்படப் போகின்ற சவால்தான்.

-tamilmirror.lk

TAGS: