கேரள சிறுமிக்கு தவறாக செலுத்தப்பட்ட ரத்தத்தால் எச்.ஐ.வி. பாதிப்பு..

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிப்பாடு பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமிக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

சிறுமியின் பெற்றோர் அவரை ஆலப்புழாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமிக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து சிறுமியை பெற்றோர் கேரளாவில் உள்ள மண்டல புற்றுநோய் சிகிச்சை மையத்தில் சேர்த்தனர். அங்கு பல மாதங்களாக சிறுமி சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிறுமிக்கு திடீரென சுவாச கோளாறு ஏற்பட்டது. உடனே பெற்றோர் சிறுமியை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக இறந்தார்.

சிறுமியின் சாவுக்கு அவரது ரத்தத்தில் எச்.ஐ.வி. பாதிப்பு இருந்ததே காரணம் என்று கூறப்பட்டது. இது சிறுமியின் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே அவர்கள் கேரள ஐகோர்ட்டில் இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்தனர். அதில் சிறுமிக்கு சிகிச்சை அளித்த மண்டல புற்றுநோய் சிகிச்சை மையத்தில் செலுத்தப்பட்ட ரத்தத்தால் அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் இது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தனர்.

இதையடுத்து பலியான சிறுமியின் ரத்த மாதிரிகள் உள்ளிட்ட உடல் கூறுகளை சேகரித்து பாதுகாப்பாக வைக்க மண்டல புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தொடர்ந்து சிறுமியின் ரத்த மாதிரிகள் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. அதோடு சிறுமிக்கு ரத்தம் கொடுத்தவர்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டது.

இது தொடர்பான அறிக்கையை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகம் நேற்று வெளியிட்டது. அதில் சிறுமிக்கு ஆஸ்பத்திரியில் செலுத்தப்பட்ட ரத்தத்தில் எச்.ஐ.வி. பாதிப்பு இருந்துள்ளது என்று கூறியுள்ளது.

மண்டல புற்றுநோய் சிகிச்சை மையத்தில் சிறுமிக்கு சிகிச்சை அளித்த போது 48 பேரிடம் இருந்து ரத்தம் நன்கொடையாக பெறப்பட்டு சிறுமிக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் ரத்தம் கொடுத்த நபர் ஒருவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருந்துள்ளது. இதன் காரணமாகவே சிறுமிக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகம் தெரிவித்துள்ளது. இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-athirvu.com

TAGS: