என்னை பகிரங்கமாக அவமானப்படுத்த வாரீர் – நஜிப்புக்கு கிட் சியாங் மீண்டும் சவால்

 

1எம்டிபி விவகாரத்தில் தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்று நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழுவின் அறிக்கை தம்மை விடுவித்துள்ளது நஜிப் கூறிக்கொள்வது சம்பந்தமாக டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், பராமரிப்பு அரசாங்க பிரதமர் நஜிப்புக்கு மீண்டும் சவால் விட்டுள்ளார்.

“ஒரு பொது நிகழ்ச்சியில் பிஎசி அறிக்கையில் அவர் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டதாகக் கூறும் பாகத்தையும் வரியையும் அவர் வாசித்துக் காட்டி நான் பகிரங்கமாக அவமானப்படுத்தப்படுவதற்கான இடத்தையும் தேதியையும் நேரத்தையும் அறிவிக்குமாறு .நஜிப்புக்கு நான் விடுத்திருந்த கோரிக்கையை நான் மீண்டும் புதுப்பிக்கிறேன்.

“நஜிப் இதற்கு எதிர்வினையாற்றுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை ஏனென்றால் அவர் உருவாக்கிய பொய்ச் செய்தியை நான் அவருடனான பகிரங்க மோதலின் போது அம்பலமாக்கி விடுவேன் என்பதைத் தெரிந்துகொள்ள முடியாத மதி கெட்டவர் அல்ல நஜிப்”, என்று அவர் மேலும் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து தாம் மார்ச் 25 இல் நஜிப்புக்கு ஓர் இ-மெயில் அனுப்பியதாகவும் அதற்கு இன்று வரையில் பதில் ஏதும் இல்லை என்றும் கிட் சியாங் கூறினார்.

அவரைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தாக கூறப்படும் பிஎசி அறிக்கையின் பாகம் மற்றும் வரியை வாசித்து காட்டுவதற்கு இடம், தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிடும்படி நான் அனுப்பியிருந்த இ-மெயிலுக்கு ஏன் இந்த மௌனம் – அவரது கூற்று உண்மையற்றதாகவும் பொய்ச் செய்தியைத் தவிர வேறொன்றுமற்றதாக இருந்தாழொழிய? என்று கிட் சியாங் இன்று மதியம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கேட்கிறார்.

பிஎசி அறிக்கை குறித்து கெப்போங் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டான் செங் கியாவ் கூறியிருந்த கருத்தின் காரணமாக டிஎபி அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை என்று நஜிப் தெரிவித்திருந்த கருத்துக்கு கிட் சியாங் இவ்வாறு பதில் அளித்தார்.

எட்டு தவணைகளுக்கு கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த டான் செங் கியாவுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்காததற்கு இதுதான் காரணம் என்று எப்படி நஜிப் தெரிந்து கொண்டார் என்று கிட் சியாங் வினவினார்.