‘பிஎன்-னில் இருந்து வெளியேறுவோம்’ மைபிபிபி அச்சுறுத்தல்: நஜிப்பிடம் சூத்திரம் உள்ளது, ஜாஹிட் கூறுகிறார்

பராமரிப்பு அரசாங்கத்தின் துணைப் பிரதமர், அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, கேமரன் மலை நாடாளுமன்றத்தைக் கொடுக்காவிட்டால், ‘பிஎன்-னில் இருந்து வெளியேறுவோம்’ என்று அச்சுறுத்தும் மைபிபிபி தலைவர் எம்.கேவியஸ்-ஐ, தனது தலைவர், நஜிப் இரசாக் சமாளித்துக்கொள்வார் எனக் கூறியுள்ளார்.

கேவியஸின் செயலைத் தன்னால் ‘புரிந்துகொள்ள முடிகிறது’ என்றும், தனிப்பட்ட முறையில் அவர் ஒரு நல்ல மனிதர், ஆனால், அவருடைய கட்சி சார்ந்த நண்பர்களையும் கட்சியையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் அவர் இருப்பதைத் தன்னால் உணர முடிகிறது என்றும் அவர் கூறியுள்ளதாக, பெர்னாமா செய்திகள் வெளியிட்டுள்ளது.

“நான் அவரைச் சந்தித்தேன், எல்லாவற்றுக்கும் ஒரு தீர்வு இருக்கிறது, (மற்றும்) ஒரு வேட்பாளராக ஆவது மட்டும் இறுதி தீர்வு அல்ல.

“மலேசிய அரசாங்கத்தில், நிர்வாக மற்றும் பிற துறைகளில் கட்சிக்கு ஒரு வாய்ப்பை வழங்கலாம், இன்னும் பல வழிகள் உள்ளன,” என்று இன்று சுங்கை சுமூன், பாகான் டத்தோவில், மாவட்டத் தேர்தல் மையத்தைப் பார்வையிட்ட பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

கடந்த செவ்வாயன்று, பி.என். தலைவர் நஜிப்பைச் சந்தித்தப் பின்னர், அக்கூட்டணியில் உறுப்பியம் பெற்றிருப்பது பற்றி மறுபரிசீலனை செய்யப்படும் என்று கேவியஸ் கூறியிருந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக அவரும் மைபிபிபியும், கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் பணியாற்றி வந்துள்ளபோதும், அத்தொகுதி மஇகா-விற்கு வழங்கப்பட்டதில் அவர் அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிகிறது,

அதேசமயம், மைபிபிபி-க்குப் பி.என். வழங்கிய சிகாம்புட் நாடாளுமன்றத் தொகுதியைக் கேவியஸ் புறக்கணித்துள்ளதாகவும் தெரிகிறது.

முன்னதாக, அந்த நிகழ்ச்சியில், பெயர் குறிப்பிடாமல், பி.என். உறுப்புக் கட்சிகளின் எந்த வகையிலான மிரட்டல்களையும் நாம் வரவேற்கப் போவதில்லை எனக் குறிப்பிட்டார்.

இது கட்சியின் இணக்கத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என்றார் அவர்.

பாரிசான் உறுப்புக் கட்சியின் தலைவர் என்ற வகையில், அவர்கள் ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும், பி.என்.னின் கொள்கைகளை மதிக்க வேண்டும் என்றார் அவர்.