RM20 முதல் RM3.6 மில்லியன் வரை: பி.எஸ்.எம். வேட்பாளர்கள் சொத்து அறிவிப்பு

14-ம் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள, மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) வேட்பாளர்கள் 16 பேர், இன்று தங்கள் சொத்து விவரங்களைப் பொதுவில் வெளியிட்டனர்.

தீபகற்ப மலேசியாவில், 4 நாடாளுமன்றங்கள் மற்றும் 12 சட்டமன்றத் தொகுதிகளின் வேட்பாளர்கள், இன்று கோலாலம்பூர்-சிலாங்கூர் சீன மாநாட்டு மண்டபத்தில் தங்கள் பதவியேற்பு பிரகடனங்களைச் செய்ததோடு, கட்சியின் தேசியத் தலைவர் நசீர் ஹசிமிடமிருந்து அதிகாரப்பூர்வ வேட்பாளர் கடிதத்தையும் பெற்றுக்கொண்டனர்.

N33- துரோனோ சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடவிருக்கும் விவசாயி, சின் க்வாய் ஹெங், 52, தனது RM3,613,000 மொத்த நிகர சொத்துக்களை அறிவித்தார் – இதில் 15 ஹெக்டேர் விவசாய நிலம், ஒரு கடை, இரண்டு வணிக நிலங்கள், ஒரு வீடு, நான்கு காலி லோட்கள் (வீடு கட்டும் நிலம்) மற்றும் ஒரு யுனிட் பங்கு ஆகியவை அடங்கும்.

அவரின் தம்பி, க்வாய் லியோங், 45, அவரும் ஒரு விவசாயி, தான் தன் சகோதரரைப் போல் பணக்காரர் அல்ல என நகைச்சுவையாகக் கூறியதோடு; தனது சொத்து மதிப்பு RM30,000 என்றும் தான் N32 மெங்கிலம்பூ தொகுதியில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

“என்னிடம் அதிகமாக இல்லை, எனக்கு வெட்கமாக இருக்கிறது,” என்று அவர் கூறியபோது, பி.எஸ்.எம். ஆதரவாளர்களிடம் இருந்து சிரிப்பொலி வந்தது.

“பரவாயில்லை, இன்னும் பவானி இருக்கிறார்,” என்று ஒரு பி.எஸ்.எம். உறுப்பினர் பார்வையாளர்கள் பக்கமிருந்து கூறினார், N40 மாலிம் நவார் சட்டமன்றத்தில் கட்சியின் வேட்பாளராகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள கே.எஸ். பவானியைக் குறிப்பிட்டு.

2012-ஆம் ஆண்டில், ‘சுவாரா வனித்தா 1மலேசியா’ தலைவர், ஷரிஃபா ஷோரா ஜபீன் உடனான ‘லிசன்! லிசன்! லிசன்!’ என்ற சுலோகத்தின் வழி, ஒரு மாணவர் ஆர்வலராக புகழ் பெற்றவர்.

32 வயதான, வழக்கறிஞரான கே.எஸ்.பவாணி, பேராக் உயர்க்கல்வி நிதியிலிருந்து RM20,679.26 கல்விக் கடனுதவி பெற்றிருப்பதால், தான் இப்போது RM20,679.26 மதிப்புகொண்ட கடனாளி, தன்னிடம் வேறு சொத்துக்கள் ஏதும் இல்லை எனத் தெரிவித்தார்.

கம்பாரில், சட்ட நிறுவனம் ஒன்றில் பங்காளியாக இருப்பதாகவும், RM1,000-லிருந்து RM2,000 இடையேயான மாத வருமானத்தைப் பெறுவதாகவும் பவாணி அறிவித்தார்.

மற்ற குறிப்பிடத்தக்க அறிவிப்புகளில் ஒன்று, N02 ஜெலாய் சட்டமன்ற வேட்பாளர், ஒரு பூர்வக்குடியினரும் ரப்பர் மரம் சீவும் தொழிலாளியுமான மாட் நோர் ஆயாட், 45, ஒரு சிறிய வணிக வடிவில், தனது சொத்து மதிப்பு RM2000 என்று தெரிவித்தார்.

இவ்வாண்டு, ஏப்ரல் 5-ம் தேதி வரை, மாட் நோரின் மொத்த வங்கி வைப்புத் தொகை RM20, கையில் இருப்பது RM100 என அறிவித்தார்.

நிருபர்களிடம் பேசிய பி.எஸ்.எம். மத்திய செயற்குழு உறுப்பினர் எஸ்.அருட்செல்வன், சொத்துக்களைப் பொதுவில் அறிவிப்பது, மக்களுக்குக் கட்சியின் கடமைகளில் ஒரு பகுதியாக எப்போதும் இருப்பதாக வலியுறுத்தினார்.

“நாங்கள் இதில் மிகவும் திறந்த, வெளிப்படையான கொள்கையைக் கடைபிடிக்கிறோம். 1999-ம் ஆண்டு முதல், சொத்துக்களை அறிவிப்பதை ஒரு பாரம்பரியமாக செய்து வருகிறோம்,” என்று அவர் கூறினார்.

அருட்செல்வன், மூன்றாவது முறையாக மீண்டும் N24 – செமிஞ்சே சட்டமன்றத்தில் போட்டியிடவுள்ளார்.