சிலாங்கூர் சுல்தான்: அரண்மனை யாருக்கு ஆதரவாகவும் செயல்படாது

சிலாங்கூர்  சுல்தான்   சுல்தான்   ஷரபுடின்  இட்ரிஸ்  ஷா,  எதிர்வரும்   பொதுத்  தேர்தலில்   சிலாங்கூர்    அரண்மனை   நடுநிலை  வகிக்கும்   என்று   அறிவித்துள்ளார்.

சுல்தான்  ஷரபுடினும்   அரண்மனையும்  மாநில  மற்றும்   நாட்டின்  அரசியலில்   தலையிட   மாட்டார்கள்   என்றும்  எந்தக்  கட்சிக்கும்    ஆதரவாக    நடந்துகொள்ள  மாட்டார்கள்  என்றும்     ஆட்சியாளர்    சார்பில்  இன்று     வெளியிட்ட    அறிக்கையில்     அவரின்   தனிச்  செயலர்  முகம்மட்  முனிர்  பானி  குறிப்பிட்டிருந்தார்.

“மேன்மை  தங்கிய  சுல்தான்,   அவரும்   சிலாங்கூர்  அரண்மனையும்   எப்போதும்  நடுநிலை  வகிப்பார்கள்  என்பதையும்   நாட்டில்  உள்ள   எந்தக்  கட்சிக்கும்   ஆதரவாக    செயல்பட    மாட்டார்கள்   என்பதையும்  வலியுறுத்த  விரும்புகிறார். மாநில   அளவிலோ   தேசிய   அளவிலோ   அரசியல்   விவகாரங்களில்   மேன்மை  தங்கிய  சுல்தான்  தலையிட  மாட்டார்”,  என   அவ்வறிக்கை  கூறியது.

தகுதியான   தலைவரைத்   தேர்ந்தெடுக்கும்   மக்களின்  சக்திமீது  தமக்கு  நம்பிக்கையும்   மதிப்பும்      உண்டு  என்று   சுல்தான்  ஷரபுடின்  குறிப்பிட்டார்.

பொதுத்  தேர்தல்  சுமூகவும்  அமைதியாகவும்   நடந்தேற  விருப்பம்  தெரிவித்த  சுல்தான்,  மக்கள்,  குறிப்பாக    சிலாங்கூர்  மக்கள்   தேர்தல்   காலத்தில்   சர்ச்சைக்குரிய,  கலகமூட்டக்கூடிய   செயல்களைத்   தவிர்க்க  வேண்டும்   என்றும்   அறிவுறுத்தினார்.