புத்ராஜெயாவின் வண்ணம் நீலம்!

ஞாயிறு’ நக்கீரன் ஏப்ரல் 20, 2018 – மலேசிய அரசியல் வானை தற்பொழுது நீல வண்ணம் வெகுவாக சூழ்ந்துள்ளது. குறிப்பாக, புத்ராஜெயாவை இந்த நீல வண்ணம் முற்றும் முழுவதுமாக ஆட்கொண்டுள்ளது.

வான வெளியையும் கடல் வெளியையும் நீல நிறம் பேரளவில் சூழ்ந்துள்ளதற்குக் காரணம், சூரிய ஒளியில் இடம்பெற்றுள்ள ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய ஏழு வண்ணங்களும் வெவ்வேறு கோணங்களில் பல்வேறு பொருள்களில் பட்டும் ஊடுறுவியும் ஒளிச்சிதறல் அல்லது நிறம் பிரிதல் என்னும் வேதியில் வினைக்கு ஆட்படுவதுதான். ஆனாலும், கடலும் வானமும் நீல நிறமாகத் தோன்றுவது ஒரு மாயத் தோற்றம்தான். கடல் நீரை கையில் அள்ளினால் நீலமாக இராது.அதைப் போலத்தான் வானத்தின் வண்ணமும்.

இதுவொருபுறமிருக்க, மலேசிய அரசியல் வானை உண்மையாகவே நீல வண்ணம் சூழ்ந்துள்ளது.

தேசிய முன்னணி அரசின் பல்வேறு தடைக்கற்கலாலும் சங்கப் பதிவகத்தின் மாற்றாந்தாய் மனப்பான்மையாலும் நம்பிக்கைக் கூட்டணிக் கட்சிகளின் மற்ற வண்ணங்கள் யாவும் ஒதுக்கப்பட்டு மக்கள் நீதிக் கட்சியின் இள நீல வண்ணக் கொடியும் சின்னமும் அக் கூட்டணியின் ஒருமித்த சின்னமாகவும் கொடியாகவும் தற்பொழுது ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது.

இன்னும் 19 நாட்கள் கழித்து நடைபெற விருக்கும் 14-ஆவது பொதுத் தேர்தலின் மூலம் புதராஜெயாவில் தேசிய முன்னணியின் கருநீல வண்ணக் கொடியே பட்டொளி வீசு படபடக்குமா அல்லது நம்பிக்கைக் கூட்டணியின் இள நீலக் கொடிக்கு புது வசந்தம் தோன்றுமா என்பது தெரியவரும்.

அப்படி கருநீலக் கொடியே புத்ராஜெயாவில் தொடர்ந்து பறக்கும் சூழல் அமைந்தால், இந்த உலக அரசியல் வரலாற்றில் ஒரேக் கூட்டணி தொடர்ந்து அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நாட்டை ஆண்டுவரும் வரலாறு புதுப்பிக்கப்படும்; தொடரும். ஒருவேளை, இளநீலக் கொடிக்கு அந்த வாய்ப்பு கிட்டினால், மலேசிய அரசியல், புதுப்பாங்கில் புதுப் பொலிவு பெறும்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், தேசிய முன்னணியின் பெருந்தூண்களாக இருந்த இருவர்தான், இப்பொழுது நம்பிக்கைக் கூட்டணியிலும் பெருந்தூண்களாகத் திகழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் வினோதமும் வேடிக்கையும் என்ன வென்றால், 1998-ஆம் ஆண்டு, செப்டம்பர் 2-ஆம் நாளில், டத்தோஸ்ரீ அன்வாரை துணைப் பிரதமர் பதவியில் இருந்தும் அம்னோவின் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்தும் மகாதீர் விலக்கியபோது, இனி அன்வார் கிள்ளுக் கீரைக்கு சமம் என்றுதான் கருதினார். அதைவிட எதிர்பாராதது, அப்போது அன்வாரின் கட்சியை அங்கீகரிக்க தடைபோட்ட மகாதீர், அதே அன்வாரின் கட்சி சின்னத்தில் இப்போது தேர்தல் களம் காண்பதுதான்.

எதிர் காலத்தில் அவருடன் சேர்ந்து அரசியல் களம் காண்போம் என்று கடுகளவும் எண்ணிப் பார்த்திருக்க மாட்டார். குறிப்பாக, அன்வார் கண்ட சின்னமான இரு இளம்பிறை  வடிவங்களை இடப்புறமாகவும் வலப்புறமாகவும் நிற்கவைத்து ஒற்றை விழி வடிவத்தை இள நீலக் கொடியில் பொறித்து உருவாக்கிய சின்னத்திலேயே தேர்தல் களம் காண்போம் என்பதை கணப்பொழுதேனும் கருதி இருக்க மாட்டார்.

கடந்த நூற்றாண்டின் நிறைவுப் பகுதியில் மகதீரால் வீழ்த்தப்பட்ட அன்வாரின் ஆதரவாளர்கள் மறுமலர்ச்சி இயக்கம் என்ற பெயரில் இயங்க ஆரம்பித்து நாடு முழுவதும் அன்வாரின் குரலாக ஒலித்தனர். பின்னர் அவர்கள், அன்வாரின் துணைவியார் டத்திஸ்ரீ டாக்டர் வான் அசிசா தலைமையில் ஓர் அரசியல் இயக்கமாக உருவாக நினைத்து, மறுமலர்ச்சி இயக்கத்தை ‘சமூக நீதி இயக்கம்’ என்ற பெயரில் பதிவுசெய்ய முனைந்தபோது, இதே மகாதீர் தலைமையிலான சங்கப் பதிவகம் அப்போது மறுப்பு தெரிவித்துவிட்டது.

இதனால் சற்று தேங்கி நின்ற மறுமலர்ச்சி இயக்கத்தினர், மாற்று வழியைக் கட்டனர். அந்த நேரத்தில்  சவலைப் பிள்ளையைப் போல செயல்படாமல் இருந்த மலேசிய இஸ்லாமிய மக்கள் சங்கம் என்னும் இளம் அரசியல் கட்சியைக் கைப்பற்றி அதன் அடித்தளத்தில் புதிய அரசியல் பாதையை வகுத்தனர்.

பின்னர், தேசிய நீதிக் கட்சி என்று பெயரை மாற்றிக் கொண்ட அன்வாரின் ஆதரவாளர்கள் தொடர்ந்து 2003 ஆகஸ்ட் 3-ஆம் நாளில் மலேசிய மக்கள் கட்சியை இணைத்துக் கொண்டு மக்கள் நீதிக் கட்சி என்ற புதுப் பெயருடன் செயல்பட ஆரம்பித்தனர். அந்தக் காலக்கட்டத்தில்தான் இளநீல வண்ணத்தில் இரு வெண்ணிற பிறை உருவங்களை நிற்க வைத்து கண் வடிவில் உருவாக்கப்பட்டதுதான் இன்றைய தேசிய அரசியலில் தேசிய முன்னணியின் சின்னத்திற்கு மாற்றுச் சின்னமாக உருவெடுத்துள்ளது.

இந்தச் சின்னம் உருவாக்கப்பட்டு அடுத்த ஓராண்டு காலத்தில் நடைபெற்ற பதினோராவது பொதுத் தேர்தலில் மக்கள் நீதிக் கட்சி வென்ற இடம் ஒரேவோர் இடம்தான். துன் அப்துல்லா படாவி பிரதமாராக பொறுப்பேற்று 2004இல் எதிர்கொண்ட முதல் தேர்தல் அது.

அதன்பிறகு நடைபெற்றுவரும் அரசியல் மாற்றங்கள் யாவும் நாம் அறிந்தது. தற்பொழுது, மலேசிய அரசியல் போக்கு முற்றிலும் மாறுபட்டுள்ள இன்றைய நிலையில் நீல வண்ணங்கள் ஒன்றையொன்று எதிர்கொண்டு நிற்கின்றன.

கருநீல நிறம் தன் வலிய இரும்புக் கரங்களால் புத்ராஜெயாவை தொடர்ந்து இறுகப் பற்றிக் கொள்ளுமா அல்லது அதை விலக்கிவிட்டு, இள நீல வண்ணம் புத்ராஜெயாவை ஆட்கொள்ளுமா என்பதை அடுத்த மாதம் 9-ஆம் நாள் முன்னிரவில் வெளியாகும் தேர்தல் முடிவின் வெளிச்சம் நமக்கெல்லாம் சுட்டிக் காட்டும்.