மதிக – திசையற்றதா! அல்லது திறனற்றதா?

‘ஞாயிறு’ நக்கீரன் – கடந்த நூற்றாண்டில் அன்றைய மலாயாவில் இதேக் காலக் கட்டத்தில் சுய மரியாதை இயக்கம் அமைப்பு ரீதியாக செயல்படா விட்டாலும், நாடெங்கும் பகுத்தறிவுச் சிந்தனைகள் பரவிக் கொண்டிருந்தன.

அதற்குக் காரணம், சென்னை மாகாணத்தை நீதிக் கட்சி ஆண்டதும், பிராமணர் அல்லாதோரின் நலம் பலவகையாலும் பல தளங்களிலும் பேசப்பட்டதும்தான்.

குறிப்பாக, நீதிக் கட்சியின் சார்பில் சென்னை மாகாணத்தை ஆண்ட முதல்வர் பொப்பிலி அரசர் நல்ல நிருவாகியாகவும் சமதருமவாதியாகவும் விளங்கினார். அத்துடன் நடேசன், பி.டி. நாயர், சர். ஏ.டி. பன்னீர் செல்வம், பழனிவேல் போன்ற பெருந்தலைவர்கள் எல்லாம் சுயமரியாதை இயக்கத்தை  உயர்த்திப் பிடித்தனர். அதன் தாக்கம் இந்த மலாயா மண்ணிலும் பிரதிபலித்தது.

1918-ஆம் ஆண்டில், அண்ணல் காந்தி அடிகளுடன் இணைந்து கதராடை விற்பனை, கள்ளுக் கடை எதிர்ப்புப் போராட்டம் என்றெல்லாம் பெரியார் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருந்தாலும், சுயமரியாதைக் கொள்கையும் பிராமண எதிர்ப்பும் அவரின் உள்ளத்தில் ஓர் ஓரத்தில் கனன்று கொண்டுதான் இருந்தன.

காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லை சேரன்மாதேவி என்னும் சிறு பட்டணத்தில் நடத்தப்பட்ட குருகுலத்தில் பார்ப்பன மாணவர்களுக்கு என்று தனியாக ஒரு பந்தியும் பார்ப்பனர் அல்லாத முதலியார், தேவர், படையாச்சி, செட்டியார், வெள்ளாளர் உள்ளிட்ட இன்னும் பிற சாதி மாணவர்களுக்கு இன்னொரு பந்தியும் நடத்தப்பட்டன. தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு பந்தியில் இடமில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும்; குரு குலத்திலேயே இடமே இல்லை என்பதுதான் அப்போதைய உண்மை நிலை.

இதைக் கண்டு வெகுண்ட பெரியார் காந்தி, ராஜாஜி போன்றோருடன் முரண்பட்டு காங்கிரஸ் தேசிய இயக்கத்திலிருந்து வெளியேறினார். அந்த நேரத்தில் நீதிக் கட்சியின் பெருந்தூண்கள் எல்லாம் ஒவ்வொன்றாக சரியவும் ஒரு தலைமை இடைவெளி ஏற்பட்டது.

தென்னிந்திய நல உரிமைச் சங்கம், ‘ஜஸ்டிஸ்’ என்னும் ஆங்கில இதழை நடத்தியதால் ஜஸ்டிஸ் பார்ட்டி என்று அழைக்கப்பட்டு, அதுவே தமிழில் நீதிக் கட்சி என்றானது. அந்த இயக்கத்தை பெரியார் புதுப்பித்தபோது திராவிடர் கழகமாக மாற்றினார்.

அப்படி உருவான திராவிட இயக்கத்தின் சுயமரியாதை உணர்வை இந்த மண்ணில் அய்யாறு, கே.பி.சாமி போன்று தலைவர்கள் ஏற்படுத்தினர். அப்படி மெல்ல மெல்ல உருவான பகுத்தறிவு இயக்கம், ஒரு சமுதாய இயக்கமாக ம.இ.கா. தோன்றிய அதேக் காலகட்டத்தில், இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அதற்கு சற்று முன்னதாகவே உதயமான இயக்கம் மலேசிய திராவிடர் கழகம்.

இந்த நாட்டில் உருவான முதல் சமூக இயக்கம், இந்த சுயமரியாதை இயக்கம்தான். அப்படிப்பட்ட இயக்கத்திற்கு ‘திருச்சுடர்’ கே.ஆர்.இராமசாமி தலைவராக இருந்த காலம் பொற்காலம். மலேசிய நாடாளுமன்ற மேலவையில் திராவிடர் கழகத்திற்காக ஓர் இருக்கை கேட்கும் அளவிற்கு மலேசிய திராவிடர் கழகம்(மதிக) அப்போது வலுவாக இருந்தது.

தேசியப் பேராளர் மாநாடாக இருந்தாலும் சரி, மகளிர் கருத்தரங்கமாக இருந்தாலும் சரி தலைநகரே குலுங்கும் அளவிற்கு வலிமையாக இருந்த மதிக-விற்கு இரெ.சு. முத்தையா தலைவராக வந்தது முதல் சரிவு தொடங்கியது.

அன்று தொடங்கிய சரிவு இன்றளவிலும் தொடர்கிறது. அநேகமாக, அதன் நிறைவு அத்தியாயத்தை அந்த இயக்கம் தனக்குத் தானே எழுதிக் கொண்டிருப்பதைப் போலத்தான் தெரிகிறது.

இந்த நாட்டில் முதன்முதலில்  சொந்தக் கட்டடத்தைப் பெற்றிருந்த இந்தப் பகுத்தறிவு இயக்கத்திற்கு முத்தையா தலைவராக வந்ததும் கபிலன் மூலம் வழக்கு தொடர்ந்தார் இராமசாமி. ஏறக்குறைய இருபது ஆண்டுகள் அடுத்தடுத்து வழக்குகளை வரிசையாக சந்தித்து, நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் நின்றபடியே முத்தையாவின் பதவிக் காலம் ஓய்ந்தது.

முத்தையாவின் தலைமைத்துவத்தில், இராமசாமியின் ஆதரவாளர்கள் எல்லாம் ஒதுங்கிக் கொண்டனர்; ஒதுக்கவும் பட்டனர். அதைப்போல முத்தையாவிற்குப் பின், அந்தப் பகுத்தறிவு இயக்கத்தின் தலைமைப் பொறுப்பிற்கு வந்த பி.எஸ்.மணியம் தலைமையில் முத்தையாவின் ஆதரவாளர்கள் எல்லாம் ஓரங்கட்டப்பட்டனர். ஏராளமானோர் ஒதுங்கியும் கொண்டனர்.

சுயமரியாதை ரத்தம் ஊறிப்போன நாக.பஞ்சு, மதிக சிலாங்கூர் மாநிலத் தலைவராகத் தொடர முடியாத நிலையில் மலேசிய மாந்தநேய திராவிடர்க் கழகம் என்ற புதிய அமைப்பைத் தொடங்கினார். அப்படித் தொடங்கியவர், சென்னையில் இருந்து திராவிடர் கழகப் பேச்சாளரும் வழக்கறிஞருமான அருள்மொழியை மலேசியாவிற்கு வரவழைத்தார்.

இதை அறிந்த பி.எஸ். மணியம், சென்னை பெரியார் திடலுக்கு தொடர்பு கொண்டு, தமிழக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியிடம் சொல்லி, மலேசிய திராவிடர் கழக்த்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அருள் மொழியை அழைத்து திருமணம் நடத்தவும் கூட்டம் போடவும் முயற்சி மேற்கொண்டுள்ளனர் என்று பற்றவைத்து விட்டார்.

உடனே, அங்கிருந்த வீரமணி, இங்கிருந்த அருள்மொழியிடம் கண்டிப்பும் கராரும் காட்டியதால், 2014 டிசம்பர்த் திங்களில் பந்திங் பட்டணத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் மட்டும் கலந்து கொண்டுவிட்டு அடக்கமாக சென்னைக்குத் திரும்பிவிட்டார் அருள்மொழி.

அருள்மொழி எந்த மேடையில் பேசினாலும் எவர் ஏற்பாடு செய்த மேடையாக இருந்தாலும் பெரியாரைப் பற்றியும் சுயமரியாதை உணர்வைப் பற்றியும் பேசுவார். உண்மை நிலை அப்படி இருக்க, மணியம் ஏற்பாடு செய்தால் என்ன? நாகபஞ்சு ஏற்பாடு செய்தால் என்ன? மதிக தேசியத் தலைமையின் பரந்த நோக்கமும் கொள்கை வளர்க்கும் போக்கும் அப்போது அப்படித்தான் இருந்தது.

பி.எஸ். மணியத்திற்குப் பின் அவர் உருவாக்கிய எஃப்.காந்தராஜ் என்பவர் மதிக தலைவர் ஆனார்.

இவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் கையில் சிவப்பு வண்ணக் கயிறு கட்டி இருந்தார். ஆனால், கருப்புச் சட்டை அணிந்திருந்தார். அவரிடம் இது குறித்து விளக்கம் கேட்ட பொழுது, ‘தான் மலாக்காவைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பாக காந்தராஜ் கிளையைச் சேந்தவர் என்றும் கோயிலுக்கெல்லாம் செல்வேன் என்றும் இந்தக் கூட்டத்தைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது’ என்றும் அவர் சொன்னார்.

அத்துடன், காந்தராஜ் மதிக தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதியில் இருந்து, கூப்பிடு தூரத்தில்தான் மலேசிய வன்னியர் சங்க தேசிய மாநாடு நடைபெற்றது. அதுவும் பிரதமர் நஜிப் தலைமையில்.

இதைப் பற்றிய பிரதிபலிப்பு கொஞ்சம்கூட இன்றித்தான் அன்றைய மதிக தேசியப் பேராளர் மாநாடு நடைபெற்று முடிந்தது.

சுயமரியாதை இயக்கத்தின் கொள்கையில் சாதி எதிர்ப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, இன ஒற்றுமை, மொழி வளர்ச்சி ஆகியன வெல்லாம் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக, இந்து சமயத்தில் கையில் கயிறு கட்டுவதைப் பற்றி எந்த ஆகமத்திலும் சொல்லப்படவில்லை. ஆனாலும், சாதாரண மனிதர் முதல் அமைச்சர் வரை கையில் கயிறு கட்டிக் கொள்கின்றனர். இதைப்பற்றியோ,  அறிவியல் கண்டுபிடிப்பான தொலைக்காட்சியில் செவ்வாய் தோசம் பற்றியும் மனையடி(வாஸ்து) சாத்திரம் பற்றி பிரச்சாரம் மேற்கொள்வதைப் பற்றியோ, வானொலியில் சில கல் வியாபாரிகள் மூட நம்பிக்கையை விதைப்பதைப் பற்றியோ பெயருக்குக்கூட ஓர் அறிக்கையும் விடாத மதிக இந்த மண்ணில் நிலைத்து என்ன பயன்?

மலேசிய இந்து சங்கம் திருமுறையை வளர்த்து அதற்கு விழா எடுப்பதைப் போல மலேசிய திராவிடர் கழகம் திருக்குறளை வெகுவாக வளர்க்கவும் அதற்கு ஆண்டுதோறும் விழா எடுப்பது குறிப்பதும் சிந்திக்கக் கூடாதா?

அதுவும், திருச்சுடர் கே.ஆர். இராமசாமியின் நினைவு நாளான இன்று(ஏப்ரல் 10-ஆம் நாள்), இதைப் பற்றி யெல்லாம் சிந்திப்பார்களா?

ஆனால், காந்தராஜ் தலைமையில் தற்பொழுது கலை யெடுக்கும் பணிதான் வெகுவாக நடக்கிறது. திராவிடர் கழகக் கூட்டம் என்றால், ஐம்பது பேர்கூட கூடுவது கடினமான இந்த காலக்கட்டத்தில், மதிக தேசியப் பொறுப்பாளர்களே இப்போது அடித்துக் கொள்ளாத குறையாக மோதிக் கொள்கின்றனர்.

மக்கள் ஓசை நாளேட்டில், வியாழக்கிழமைதோறும் வெளியிடப்படும் சுயமரியாதை சிந்தனை கொண்ட செய்தியை நிறுத்துவதற்கு இந்து சங்கத்தினர் முயலவில்லை. மதிக-வினரே முயலுகின்றனர். காரணம், அது காந்தராஜ் பெயரில் வெளியிடப்படுவதால், அவரின் எதிரிகள் இப்படி முயலுகின்றனர்.

இந்த மண்ணில் பெரியார் கொள்கையும் சுயமரியாதை சிந்தனையும் வளரும் என்ற நம்பிக்கையை இவர்கள் கொடுக்க இவர்களிடம் போதுமான மரியாதையும் சுய சிந்தனையும் இருக்கிறது என்பதை இவர்கள் உணரவேண்டும்!