சிரிய ராணுவத்துடன் இணைந்து ஐ.எஸ்க்கு எதிரான போரில் ஈராக் குண்டு மழை பொழிந்தது

டமாஸ்கஸ், அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா, இஸ்ரேலை தொடர்ந்து சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளின் இடத்தை அழிக்க குண்டுமழை பொழிந்துள்ளது ஈராக்.  ரசாயன ஆயுதங்கள் வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டி அமெரிக்கா தலைமையில் கூட்டுத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டதையடுத்து இஸ்ரேலும் சிரியா மீது வான் வழித்தாக்குதல்களில் ஈடுபட்டது. இதைத் தொடர்ந்து ஈரானும் வான் வழித் தாக்குதல்களில் ஈடுபட உள்ளதாக செய்திகள் வந்துள்ள நிலையில், ஈராக் தாக்குதல் நிகழ்த்தியே விட்டது.

இதற்கான ஆதாரங்கள் வரிசையாக வந்து கொண்டே இருக்கின்றன. முதலாவதாக ஈராக் பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் ராணுவத் தளபதி டாக்டர் ஹைதர் அபதியின் உத்தரவின் பேரில் நமது விமானப்படைகள் சிரியா எல்லையில் தீவிரவாதக் குழுக்கள் முகாமிட்டுள்ள இடங்கள் மீது  வான் வெளித்தாக்குதல் நிகழ்த்தின என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக ஈராக் விமானப்படை வீடியோ மற்றும் புகைப்படங்களில் போர் விமானங்கள் குண்டுகளை சுமந்து கொண்டு செல்வதும் குண்டு வீசப்பட்டதற்கு ஆதாரமாக, திரும்பி வரும் விமானங்களில் சில குண்டுகள் இல்லாமலிருப்பதும் காட்டப்பட்டுள்ளது. ஊடகங்கள் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்திகளும் குண்டு வீசப்பட்டதை உறுதி செய்கின்றன.

ஈராக் விமானப்படை வெளியிட்டுள்ள இரண்டாவது வீடியோவில், ஐ.எஸ் தீவிரவாத குழுக்கள் பயன்படுத்துவதாகக் கருதப்படும் ஒரு கட்டிடம் வெடி குண்டுத்தாக்குதலில் சிதைந்து சின்னாபின்னமாகும் காட்சி பதிவாகியுள்ளது. இதற்கிடையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சிரிய அதிபருக்கு எதிராக களமிறங்கியுள்ள நிலையில், ஈராக் மட்டும் தான் சிரிய ராணுவத்துடன் இணைந்து ஐ.எஸ்க்கு எதிரான போரில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

-dailythanthi.com