திருப்பதி தேவஸ்தான புதிய அறங்காவலர் குழுவில் தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லை!

அமராவதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கான புதிய அறங்காவலர் குழு பட்டியலை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளர். அதில், தமிழகத்திற்கான பிரதிநிதித்துவம் தரப்படாததால், தமிழக பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலை நிர்வகிக்க 1933ம் ஆண்டு ஆந்திர அரசு அறங்காவலர் குழுவை ஏற்படுத்தியது. இதில் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் மட்டுமில்லாது, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டுக்கான அறங்காவலர் குழுவின் பதவிக்காலம் 2017ம் ஆண்டு பிப்ரவரியோடு நிறைவடைந்த நிலையில், கடந்த ஓராண்டாக நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, 15 பேர் அடங்கிய புதிய அறங்காவலர் குழுவை நியமித்தார்.

ஆந்திரா கடப்பாவைச் சேர்ந்த தொழிலதிபர் புட்ட சுதாகர் யாதவ் அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆந்திர மாநில நிதியமைச்சர் யானமலா ராமகிருஷ்னுடுவின் நெருங்கிய உறவினர் ஆவார்.

இந்தக் குழு தான் இனி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு திருப்பதி கோவிலின் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். இந்தப் பட்டியலில் 2015ம் ஆண்டில் இருந்து தமிழகத்திற்கு கொடுக்கப்பட்ட பிரதிநிதித்துவம் இந்த ஆண்டு மறுக்கப்பட்டுள்ளது.

ஆனால், கர்நாடகா சார்பாக இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா நாராயணமூர்த்தியும், மகாராஷ்ட்ரா சார்பாக ஸ்வப்னா என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

திருப்பதிக்கு வரும் 48% பக்தர்கள் தமிழர்களாக உள்ள நிலையில், தமிழகத்திற்கான பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டுள்ளது தமிழக பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த முறை அறிவிக்கப்பட்ட பட்டியலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சேகர் ரெட்டிக்கு குழுவில் இடம் வழங்கப்பட்டு இருந்த நிலையில், ஜெயலலிதா அரசு அவர் மீது எடுத்த கைது நடவடிக்கையால் அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com

TAGS: