ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஒப்புதலுடன் ’தமிழ்நாடு’ என்ற சொல்லை அழிக்க மோடி திட்டம்: வேல்முருகன்

’தமிழ்நாடு’ என்ற சொல்லையே அடித்துவிடுவதென்ற மோடியின் திட்டம் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஒப்புதலுடன்தான் செயல்படுத்தப்படுகிறது! உயர்கல்வியிலிருந்தே தமிழரை அகற்றிவிடுவதற்கான ’நீட்’ போன்ற தகிடுதத்த தில்லுமுல்லுகளை அனுமதித்திருப்பதே இதற்குச் சான்று! எனவே இந்த அரசை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க செய்திட அணி திரளுமாறு தமிழ்மக்களை அழைக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 தமிழ்நாட்டை அழித்தொழிக்கும் தனது திட்டத்தின்படி ஒரே நேரத்தில் அனைத்து நிலைகளிலும் தாக்குதலைத் தொடுத்திருக்கிறார் மோடி.

மாநில உரிமைகள் நலன்கள் பறிப்பு, நிலங்கள் நீராதாரங்கள் கெடுப்பு, பேரழிவுத் திட்டங்கள் திணிப்பு, இயற்கை வளங்கள் அபகரிப்பு, சமஸ்கிருத இந்துத்துவ பாசிச பண்பாட்டுப் படையெடுப்பு, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உயர் படிப்புகள் தமிழர்க்கு மறுப்பு!

இதனால் எங்கெங்கும் போராட்டங்கள்! தொடர் போராட்டங்கள்!

யாரும் எந்த வேலைக்கும் சென்றுவிடக் கூடாது. மீனவர்கள் கடலுக்குச் செல்லக் கூடாது. மாணவர்கள் கல்வி பயிலக் கூடாது. பொதுமக்கள் அமைதியாக இருக்கக் கூடாது.

விவசாயி தண்ணீர் இல்லாமல் என்ன செய்ய முடியும்; போராடி, கத்தி தொண்டைத் தண்ணியும் போகட்டும்.

படித்துவிட்டு வேலை தேடி ஓய்ந்துபோன இளைஞன் என்ன செய்வான் செய்வதைச் செய்யட்டும்.

இதுதான் மோடி! நீங்கள் தலைகீழாக நின்றாலும் சட்டைசெய்யமாட்டார்! எதுவுமே உறைக்காது!

ஏனென்றால் அவர் கார்ப்பொரேட்களுக்காக ஆட்சி நடத்துகிறார்; கஞ்சிக்குச் செத்தவர்களுக்காக அல்ல!

அவருக்கு கடமைப்பட்டவர்களாக இங்கே தமிழக ஆட்சியாளர்கள்!

ஊழலைத் தவிர வேறெதுவும் செய்யாத, தெரியாத ஆட்சியாளர்கள்!

இத்தனைக்கும் சட்டமன்ற பெரும்பான்மை இல்லாமல் சட்டத்துக்குப் புறம்பாக பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பவர்கள்!

இவர்களை சட்டத்துக்குப் புறம்பாகவே விட்டுவைத்து, தனது “ஆளுநர்” மூலமாக ஆட்சியைத் தொடர்கிறார் மோடி!

ஆக தமிழ்நாட்டில் தற்போது உள்ளது நூற்றுக்கு நூறு மோடி அரசுதான்; அப்படியென்றால், ஈபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையில் உள்ளது? சந்தேகமென்ன, போலி அரசு!

அதனால்தான் தமிழகத்திற்கெதிரான மோடியின் திட்டத்தினை செயல்படுத்தும் அரசாக இருக்கிறது இன்றைய அதிமுக அரசு!

உயர்கல்வியிலிருந்தே தமிழரை அகற்றிவிடுவதற்கான ’நீட்’ போன்ற தகிடுதத்த தில்லுமுல்லுகளை அனுமதித்திருப்பது ஒன்று போதும், இந்த அரசின் இரண்டகத்தை எடுத்துச் சொல்ல.

நேற்று சென்னை வந்திருந்த மத்திய நலவாழ்வுத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் செளபே, “நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வாய்ப்பே இல்லை” என்று உறுதிபடக் கூறுகிறார்.

இதற்கு இங்கு தமிழக அமைச்சர்கள் எவரும் மறுமொழி பேசவில்லை.

நலவாழ்வுத்துறை அமைச்சர் எங்கே?

எதற்கெடுத்தாலும் நீட்டி முழக்கும் அமைச்சர் ஜெயக்குமார் என்ன ஆனார்?

ஓபிஎஸ் முந்தாநாள்தான் டெல்லி சென்று வந்தார்.

அமைச்சர் செங்கோட்டையன் தேய்ந்த ரிக்கார்டாக “தமிழக மாணவர்களுக்கு நீட் பயிற்சி மையங்கள் தயார்” என்றே சொல்லிக்கொண்டிருக்கிறார்.

ஆனால் குதிரை கீழே தள்ளியதல்லாமல் குழியும் பறித்த கதையாக நடந்துகொள்கிறது மோடி அரசு இந்த நீட் விவகாரத்தில்!

ஏற்கனவே கடந்த ஆண்டில் நீட்டில் நடந்த தகிடுதத்தங்கள், தில்லுமுல்லுகள், ஏன் மனித உரிமை மீறல்கள் நாடறியும்.

மாணவிகளின் உள்ளாடைகளையே அப்புறப்படுத்திய சம்பங்கள் வரை அரங்கேறின.

ஆனால் அதற்கெல்லாம் எந்த நடவடிக்கையும் கிடையாது.

இந்த ஆண்டு இன்னும் கொடூர சம்பவங்கள் நடக்கக்கூடும்; அதற்கு அறிகுறியாக விதிகள் என்ற பெயரில் புதிய கெடுபிடிகள் கடைசி நேரத்தில் பார்த்து புகுத்தப்பட்டுள்ளன.

இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத்தில், இளநிலை மருத்துவப் படிப்புக்கான ஒழுங்குமுறை விதிகள் மீண்டும் திருத்தப்பட்டுள்ளன. அவற்றில் நீட் தேர்வு குறித்த புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை “இளநிலை மருத்துவ படிப்புக்கான ஒழுங்குமுறைகள் – 2017” என்ற பெயரில் அழைக்கப்படும் என மத்திய நலவாழ்வுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

பார்லிமென்டில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி, ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்ட விதிகளின்படி, இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர, தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வான, நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேரும் ஆண்டின் டிசம்பர் 31ல், 17 வயது நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். தேர்வு நடக்கும் நாளில் 25 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க கூடாது. இதில் பொது பிரிவு தவிர, மற்ற இனத்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வயதில் 5 ஆண்டுகள் கூடுதல் சலுகை வழங்கப்படும்.

பத்தாம் வகுப்பு முடித்து, பிளஸ் 1, பிளஸ் 2 என பள்ளிகளில் படித்திருக்க வேண்டும். மத்திய அரசு நடத்தும் தொலைநிலை கல்வியான, திறந்தநிலை பள்ளியில் படித்தவர்கள் மற்றும் பள்ளிக்கு செல்லாத தனித்தேர்வர்கள், நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பவியலான ‘பயோ டெக்னாலஜி’ பாடப்பிரிவுகளில் படித்திருக்க வேண்டும். பிளஸ் 2வில் வேறு பிரிவுகளில் படித்து, உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பவியல் படிப்புகளை கூடுதலாக எடுத்திருந்தால் தேர்வு எழுத அனுமதி கிடையாது.

பொது பிரிவு மாணவர்கள், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது உயிரியல் ஆகிய பாடங்களில், பிளஸ் 2 தேர்வில், ஒட்டுமொத்தமாக குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட இனத்தவர், குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். மாற்று திறனாளி மாணவர்களுக்கு 5 சதவீத இடங்கள் தனியாக ஒதுக்கப்படும்.

முதலில், பார்லிமென்டில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி, ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்ட விதிகளின்படி இந்த  நீட் தேர்வு என்பதே அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.

எப்படியெனில், பொதுப்பட்டியலில் உள்ள கல்வியில் அரசமைப்புச் சட்டம் வழங்கும் மாநில அரசுக்குள்ள உரிமையை புறந்தள்ளியே இந்த நீட் திணிக்கப்படுகிறது.

அதிர்ச்சிகரமான இன்னொரு விடயம், தனித் தேர்வர்கள், தொலைநிலை படித்தவர்கள் நீட் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதாகும்.

அடுத்து, எந்த அளவுக்கு மாணவர்களை மருத்துவப் படிப்பில் சேரவிடாமல் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு இன்னின்ன பாடங்கள் படித்திருந்தால் நீட் எழுத முடியாது என்று வடிகட்டப்பட்டிருக்கிறது.

மேலும் நலவாழ்வுத்துறை அமைச்சகம் நேரடியாக அறிவிக்காமல் சிபிஎஸ்இ-ன் விதிமுறைகளில் தேர்வு மையங்களைப் பற்றி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி, விண்ணப்பதாரர் கேட்கும் தேர்வு மையத்தை ஒதுக்க வேண்டிய கட்டாயமில்லை; இதில் சிபிஎஸ்இ-ன் முடிவே இறுதியானது.

அப்படியென்றால் இது மேலும் மாணவர்களை வடிகட்டவும் பின்வாங்கச் செய்யவுமான சதி அன்றி வேறென்ன?

மாணவர்கள் இவ்வளவு தூரம் தாக்குதல்களுக்கு உள்ளானாலும் அதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டேன் என்று மோடிக்கு சத்தியம் செய்து கொடுத்தாற்போல் உள்ளது ஓபிஎஸ்-ஈபிஎஸ் அரசு.

-nakkheeran.in

TAGS: