தியன் சுவா எங்கே போட்டியிடப் போகிறார்?

 

இரண்டு தவணைக்களுக்கு பத்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவா எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட தேர்வு செய்யப்படுவாரா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பை கட்சியில் தலைமைத்துவத்திடம் விட்டு விட்டதாக கூறுகிறார்.

சில தலைவர்கள் பத்து இருக்கையின் மீது கண் வைத்துள்ளனர். அது பாதுகாப்பானது என்று அவர்கள் கருதுகிறார்கள். ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்பு அது ஒரு பாதுகாப்பான தொகுதி அல்ல. அது பிஎன்னின் கோட்டையாக இருந்தது. பிகேஆர் பத்து தொகுதி கடுமையாக உழைத்து பத்து மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றது இத்தொகுதியை பிகேஆருக்கு தக்கவைக்க முடியும் என்று நம்புகிறேன் என்று பத்துமலையில் இன்று மாலை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தியன் கூறினார்.

பத்து தொகுதியில் யார் நிறுத்தப்பட்டாலும் அவர் இந்த பல்லினத் தொகுதி மக்களின் ஆதரவைப் பெறக்கூடியவராக இருக்க வேண்டும் என்று தியன் மேலும் கூறினர்.

தம்மை ஜோகூரில் போட்டியிட அனுப்புவதில் அர்த்தம் ஏதுமில்லை. அங்கு முக்கியமானவர் போக வேண்டியதில்லை. அங்கு நமது இரு வேட்பாளர்களும் திறமையாகச் செயல்பட்டு வருகின்றனர். அவர்களின் சிறப்பான உழைப்பால் பிகேஆர் வெற்றி பெற முடியும் என்று தியன் கூறினார்.

பத்துவில் போட்டியிட நான் தேர்வு செய்யப்படாவிட்டால், இத்தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது எனக்கு ஓகே என்றாரவர்.

தாம் தேர்வு செய்யப்படா விட்டாலும் தாம் தொடர்ந்து பக்கத்தான் ஹரப்பானை ஆதரிக்கப் போவதாக தியன் சுவா மேலும் கூறினார்.