‘தாமான் யூனிவர்சிட்டியில் வேண்டும் தமிழ்ப்பள்ளி’, நடவடிக்கை குழு கோரிக்கை மனு கொடுத்தது

ஸ்கூடாய், தாமான் யூனிவர்சிட்டியில் தமிழ்ப்பள்ளி கோரும் நடவடிக்கைக் குழுவினர், எதிர்வரும் 14-ம் பொதுத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பான் சார்பில், கோத்தா இஸ்கண்டார் சட்டமன்றத்தில் (பழைய பெயர் – நூசாஜெயா) போட்டியிடவிருக்கும் சுல்கிப்ளி அஹ்மட்டிடம் தங்களின் கோரிக்கை மனுவைக் கையளித்தனர்.

நேற்றிரவு, ஸ்கூடாய் தாமான் யூனிவர்சிட்டியில் நடந்த, ‘ஜெலாஜா பாசுகான் ஹராப்பான்’ செராமாவில் அக்குழுவினர் கோரிக்கை மனுவை அவரிடம் சமர்பித்தனர்.

தாமான் யூனிவர்சிட்டி மற்றும் அதன் அருகில் அமைந்திருக்கும் மற்றக் குடியிருப்புப் பகுதிகளில் (தாமான் பூலாய் உத்தாமா, தாமான் பூலாய் ஃபுளோரா, தாமான் ஸ்கூடாய் இண்டா, தாமான் ஸ்கூடாய் ரியா) சுமார் 3200 இந்தியக் குடும்பங்கள் வசித்துவரும் நிலையில், இங்கு ஒரு தமிழ்ப்பள்ளி இருக்க வேண்டியது அவசியமாகிறது என்று அக்குழுவின் தலைவர் சந்திரமோகன் சிதம்பரம் செம்பருத்தி.கோம்-இடம் தெரிவித்தார்.

“ஸ்கூடாய் சட்டமன்றம், கோத்தா இஸ்கண்டார் சட்டமன்றம் மற்றும் இஸ்கண்டார் புத்ரி நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடவிருக்கும் அனைத்து வேட்பாளர்களிடமும் நாங்கள் இந்தக் கோரிக்கை மனுவைக் கொடுக்கவுள்ளோம்.

“அவர்கள் ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியோ அல்லது சுயேட்சை வேட்பாளரோ, அவர்கள் யாராக இருந்தாலும் எங்களுக்குப் பிரச்சனை இல்லை, ஆனால் அவர்கள் எங்கள் பிரச்சனைக்குக் குரல் கொடுக்க வேண்டும்…. நாளை மக்கள் பிரதிநிதியாக பதவியேற்றால்,” என்று அவர் மேலும் கூறினார்.

தாமான் யூனிவர்சிட்டியில் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, ஆனால் அவர்களின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்ய அங்கு ஒரு தமிழ்ப்பள்ளி இல்லை என்பது அவ்வட்டாரக் குடியிருப்பாளர்களின் நீண்ட நாள் ஏக்கம்.

அவ்வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 1000 மாணவர்கள் அருகில் இருக்கும், கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி (10 கிமீ தூரம்), தாமான் துன் அமீனா தமிழ்ப்பள்ளி (8 கிமீ தூரம்) மற்றும் ரினி தமிழ்ப்பள்ளி (6 கிமீ தூரம்) ஆகியவற்றையே நாடிச் செல்ல வேண்டியதாக உள்ளது. இன்றைய விலைவாசியில் பெற்றோர்கள் பள்ளிப் பேருந்து கட்டணம் செலுத்த சிரமப்படுவதாகவும் அக்குழுவினர் தெரிவித்தனர்.

“அம்மாணவர்களின் பெற்றோர், ரிம 80-லிருந்து ரிம110 வரை பள்ளி பேருந்து கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. ஒரு குடும்பத்தில் இரண்டு, மூன்று பிள்ளைகள் இருக்கும் நடுத்தர, ஏழைக் குடும்பங்களுக்கு அது ஒரு பெரும் சுமையாக உள்ளது,” என்று அக்குழுவில் இருக்கும் பள்ளி பேருந்து ஓட்டுநரான திரு சாமி தெரிவித்தார்.

இதனால், பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தாமான் யூனிவர்சிட்டியில் இருக்கும் தேசியப் பள்ளிகளுக்கு அனுப்பிவிடுகின்றனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

“இந்தத் தாமானில் 4 தேசியப் பள்ளிகள் இருக்கின்றன, வசதி குறைந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் தேசியப் பள்ளிகளுக்கு அனுப்பிவிடுகின்றனர். இவர்கள் மட்டும் சுமார் 700 பேர் இருக்கும். பலருக்குத் தமிழ்ப்பள்ளியில் சேர்க்க ஆசை இருக்கிறது, ஆனால் வசதி இல்லை,” என்று அவர் மேலும் சொன்னார்.

“எனவே, எப்பாடுபட்டாவது இந்த வட்டாரத்தில் ஒரு தமிழ்ப்பள்ளியை அமைக்க வேண்டும். அதற்கு அடுத்து ஆட்சி அமைக்கவிருக்கும் அரசாங்கம் உதவ வேண்டும்,” என்று அக்குழுவின் தலைவர் நம்மிடம் தெரிவித்தார்.

தாமான் யூனிவர்சிட்டி உருவாவதற்கு முன்னர் அங்கு பல தோட்டங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. 1950-களில் இங்கு இயங்கி வந்த தமிழ்ப்பள்ளிகள், தோட்டத் துண்டாடலுக்குப் பின்னர், ‘லிண்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி’, தாமான் துன் அமீனா தமிழ்ப்பள்ளியாக உருவாக்கம் கண்டவேளை; ‘புவான் யெங் தோட்டத் தமிழ்ப்பள்ளி’ 90-ம் ஆண்டுகளில் காணாமல் போனது.

ஆக, தாங்கள் கேட்பது ஒரு புதியத் தமிழ்ப்பள்ளியை அல்ல, மாறாக தொலைந்து போன ஒரு தமிழ்ப்பள்ளியைத் தான் என்று அக்குழுவினர் மேலும் கூறினர்.

நேற்று, டிஏபி-யைச் சேர்ந்த லிம் கிட் சியாங், பேராசிரியர் பி.இராமசாமி, டாக்டர் பூ செங் ஹாவ், பிகேஆர் ஜிம்மி புவா மற்றும் அமானா சலாஹூடின் யாக்கோப் போன்ற தலைவர்கள் முன்னிலையில் அம்மனு சுல்கிப்ளியிடம் கொடுக்கப்பட்டது.

ஜொகூர் மாநில அமானா துணைத் தலைவரான சுல்கிப்ளி அஹ்மாட், அவர்களின் கோரிக்கைக்கு முழு ஆதரவு வழங்குவதாகக் கூறியுள்ளார்.