ஜெலுபுவில் அம்னோ களமிறங்குவது உறுதி, கேவியஸ் ஓரங்கட்டப்பட்டார்

தனது பாரம்பரிய தொகுதியான ஜெலுபுவை, ம.இ.கா.-விடம் விட்டு, அதற்குப் பதிலாக போர்ட்டிக்சன் (முன்னர் தெலுக் கெமாங்) தொகுதியை மாற்றிக்கொள்ளும் அம்னோவின் ஆலோசனையானது, அத்தொகுதியில் அடிமட்ட வேலைகள் செய்துவந்த தலைவர்கள் தேர்தல் நடவடிக்கைகளைப் புறக்கணிப்போம் என அச்சுறுத்தியதால் கைவிடப்பட்டது.

இதற்கிடையே, கேமரன் மலை நாடாளுமன்றத்தில் ம.இ.கா. போட்டியிடுவது உறுதியானதால், மைபிபிபி தேசியத் தலைவர் எம்.கேவியஸ் ஓரங்கட்டப்பட்டார்.

இன்று வெளியிடப்பட்ட 14-வது பொதுத் தேர்தலுக்கான ம.இ.கா. வேட்பாளர்கள் பட்டியலில் அதிகம் எதிர்பார்ப்புடன் இருந்த இடங்கள் இவைகளாகும்.

அதன் அடிப்படையில், ம.இ.கா. தகவல் பிரிவுத் தலைவர் வி.எஸ்.மோகன் போர்ட்டிக்சனில் போட்டியிடவுள்ளார்.

முன்னதாக, முகமட் இசா அப்துல் சமாட்டின் அரசியல் கோட்டையாக விளங்கும் போர்ட்டிக்சனில் அவர் போட்டியிட்டு, எளிதாக வெற்றியடையச் செய்ய முடியும் எனும் ஊகத்தின் அடிப்படையில், அவர் போட்டியிட்ட அத்தொகுதியை ம.இ.கா.-விடம் விட்டுக்கொடுக்க, முன்னாள் அமைச்சர் ராய்ஸ் யாத்திம் அனுமதிக்கவில்லை.

ஆனால், இன்று வெளியிடப்பட்ட ம.இ.கா.-வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் அந்த ஊகத்தில் உண்மையில்லை என்பதை நிரூபித்துள்ளது.

பலரின் கவனத்தை ஈர்த்து வந்த மற்றொரு இடம், கேமரன் மலை நாடாளுமன்றம், கேவியஸ் குறிவைத்திருந்த அத்தொகுதியில், ம.இ.கா. இளைஞர் பிரிவுத் தலைவர் சி.சிவராஜ் போட்டியிடவுள்ளதும் உறுதியாகிவிட்டது.

இதற்கு முன்னர், கேமரன் மலை நாற்காலியைத் தனக்குக் கொடுக்கவில்லை என்றால், மைபிபிபி பாரிசானில் இருந்து வெளியேறி விடும் என்று கேவியஸ் கூறியிருந்தார்.

மேலும், தனக்கு வழங்கப்பட்ட சிகாம்புட் நாடாளுமன்றத் தொகுதியை, தான் மறுத்துவிட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

இதற்கிடையே இன்று, மைபிபிபியின் உதவித் தலைவர் லோக பாலா மோகன் சிகாம்புட் தொகுதி வேட்பாளர் என்று கூட்டரசுப் பிரதேசப் பாரிசான் அறிவித்தது.

இம்முறை பொதுத் தேர்தலில், மைபிபிபி போட்டியிடவுள்ள ஒரே நாற்காலி சிகாம்புட் என லோகா மலேசியகினியிடம் உறுதிபடுத்தினார்.

இதன்வழி, எந்தவொரு நாற்காலியும் கொடுக்கப்படாமல் கேவியஸ் ஓரங்கட்டப்பட்டுள்ளார் என்று தெரிகிறது.

ம.இ.கா. தேசியத் தலைவர், டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தனது சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியைத் தற்காத்துகொள்ள போட்டியிடும் வேளை, கட்சியின் தேசியத் துணைத் தலைவர் எஸ்.கே. தேவமணி, கடந்தமுறை வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட சுங்கை சிப்புட்டில் களமிறங்கவுள்ளார்.