ஆப்கன் வாக்காளர் பதிவு மையத்தில் தற்கொலை தாக்குதல், 57 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள வாக்காளர் பதிவு மையம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் குறைந்தது 57 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மையத்தின் நுழைவாயிலில் காத்திருந்த மக்கள் கூட்டத்தின் மீது நடத்தப்பட்ட, இந்த தற்கொலை தாக்குதலில் இறந்தவர்கள் தவிர, 119 பேர் காயமடைந்துள்ளனர்.

இஸ்லாமிய அரசு என்று தங்களை கூறிக்கொள்ளும் குழுவினர் தாங்களே இந்த தாக்குதலை நடத்தியதாக அவர்களின் அமாக் செய்தி நிறுவனம் வழியாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்களுக்கான வாக்காளர் பதிவு இந்த மாதம்தான் தொடங்கியது.

வாக்காளர் பதிவு தொடங்கியதில் இருந்து இதுபோன்ற வாக்காளர் பதிவு மையங்களில் குறைந்தது 4 தாக்குதல்கள் ஏற்கெனவே நடத்தப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பெரும் பிரச்சனையாக உள்ளது.

மக்களை அரசுக்கு எதிராக தூண்டிவிட்டு, குழப்பங்களை உருவாக்குவதற்கு தாலிபன்களும், இஸ்லாமிய அரசு என்று தங்களை கூறிகொள்ளும் குழுவினரும் மக்களை குறி வைத்து தாக்குவதாக ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு அமைச்சர் இந்த ஆண்டு தொடக்கத்தில் பிபிசியிடம் தெரிவித்தார். -BBC_Tamil