சிரியா உள்நாட்டுப்போர்: டமாஸ்கஸ் நகரில் இருந்து வெளியேற கிளர்ச்சியாளர்கள் சம்மதம்..

உள்நாட்டுப் போர் நடந்து வருகிற சிரியாவில், தலைநகர் டமாஸ்கஸ் நகரின் வடகிழக்கு பகுதியில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

அவர்கள் இப்போது அந்த இடத்தை அதிபர் பஷார் அல் ஆசாத் அரசிடம் ஒப்படைத்து விட்டு, வெளியேற சம்மதம் தெரிவித்து உள்ளதாக சிரிய அரசு டி.வி. நேற்று கூறியது.

அங்கு இருந்து வெளியேறுகிற கிளர்ச்சியாளர்கள், துருக்கி எல்லைப்பகுதிக்கு செல்வார்கள். அந்த வகையில் 3 ஆயிரத்து 200 கிளர்ச்சியாளர்கள், அவர்களது குடும்பத்தினர் துருக்கி எல்லைப்பகுதியில் உள்ள இத்லிப், ஜராப்ளஸ் பகுதிகளுக்கு செல்வதற்கான வாகன வசதிகளை சிரியா அரசு ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது கிழக்கு கூட்டாவின் பெரும்பான்மை பகுதியை மீட்டெடுத்து விட்ட பஷார் அல் ஆசாத் அரசுக்கு மேலும் ஒரு வெற்றியாக அமைகிறது.

-athirvu.com