மசீச : வங்சா மாஜூ பிஎன் ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும்

தேர்தல் நாற்காலி பகிர்வில், பிஎன் கூட்டணியின் உடன்பாட்டைக் காப்பாற்றவும் மதிக்கவும் வேண்டுமென, மசீச தேசியத் தலைவர், லியோ தியோங் லாய் வங்சா மாஜூ நாடாளுமன்றப் பாரிசான் ஆதரவாளர்களைக் கேட்டுக்கொண்டார்.

14-வது பொதுத் தேர்தலில், அத்தொகுதியில் போட்டியிட மசீசாவைப் பாரிசான் தலைத்துவம் முன்மொழிந்துள்ளதை நாம் மதிக்க வேண்டும். பாரிசானின் அனைத்து உறுப்புக்கட்சிகளும் ஒத்துழைத்தால், வங்சா மாஜூ நாற்காலியை எதிர்க்கட்சியிடம் இருந்து கைப்பற்றும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று அவர் சொன்னார்.

“அவர்கள் (ஆதரவாளர்கள்) அமைதி காக்க வேண்டும், அவர்களின் உணர்வை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது, ஆனால், பிஎன் உணர்வு முக்கியம்……… நம்மிடம் ஒருமித்த கருத்து உள்ளது, பி.என். வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறோம்,” என்று இன்று, ஷா ஆலாம் மாநில அம்னோ தலைமையகத்தில் ஜிஇ14-இன் சிலாங்கூர் பிஎன் வேட்பாளர்களை அறிவித்த பின்னர் நிருபர்களிடம் அவர் கூறினார்.

வங்சா மாஜூவில் 60 விழுக்காடு மலாய் வாக்காளர்கள் இருப்பதால், அத்தொகுதியை அம்னோவுக்குக் கொடுக்க வேண்டுமென்ற அம்னோ ஆதரவாளர்களின் கோரிக்கை  குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.

14-வது பொதுத் தேர்தலில், மசீச-வின் 22 பேர் சிலாங்கூர் பாரிசானைப் பிரதிநிதித்து களமிறங்கவுள்ளதாகவும் சிலாங்கூர் மசீச தேசியத் தலைவருமான லியோ தெரிவித்தார்.

-பெர்னாமா