பினாங்கு பிஎன்: தெங் தஞ்சோங் பூங்காவில் போட்டி, ஜஹாருக்கு இடமில்லை, வேட்பாளர்களில் 60விழுக்காட்டினர் புதுமுகங்கள்

பினாங்கு   பிஎன்  14வது  பொதுத்  தேர்தலுக்கான    அதன்  வேட்பாளர்களை   ஜாலான்   மெக்கலிஸ்டரில்    உள்ள   மாநில   கெராக்கான்   தலைமையகத்தில்  இன்று   அறிவித்தது.

அந்நிகழ்வில்   கலந்துகொண்ட   மாநில    பிஎன்  தலைவர்  தெங்  சாங்   இயோ,  பினாங்கில்   13   நாடாளுமன்றத்   தொகுதிகளுக்கும்  40  சட்டமன்ற   இடங்களுக்கும்  போட்டியிடும்    வேட்பாளர்களுக்கு  ‘சூராட்  வாதிகா’(அதிகாரத்துவ   கடிதங்கள்)-வை   வழங்கினார்.

“53  வேட்பாளர்களில்  60விழுக்காட்டினர்(31) புதியவர்கள்,  முதல்முறையாக   தேர்தலில்   போட்டியிடுகிறார்கள். அவர்களில்   ஆக  இளையவரின்   வயது  31”,  என்று     தெங்   அறிவிக்கக்  கூட்டத்தினர்  கைதட்டி  ஆரவாரம்   செய்தனர்.

“உங்களுக்குப்  பிடித்தவர்களோ  இல்லையோ   வாருங்கள்,  எங்கள்   வேட்பாளர்கள்   வெற்றிபெறுவதை   உறுதிப்படுத்துங்கள். நாம்  புத்ரா ஜெயாவைத்  தக்கவைத்துக்கொள்ள   வேண்டும்.  பினாங்கில்    அவர்களை    வெற்றிகொள்ள  முடியாது  போனாலும்  வலுவான   எதிர்க்கட்சியாகவாவது   திகழ   வேண்டும்”,  என்றவர்   சொன்னார்.

மாநில    கெராக்கான்   தலைவரான   தெங்   தஞ்சோங்  பூங்கா    சட்டமன்றத்   தொகுதியில்   களமிறங்குகிறார்.

அம்னோ  சட்டமன்ற   உறுப்பினர்கள்  பதின்மரில்   எண்மர்  இம்முறையும்   போட்டியிடுகின்றனர். முன்னாள்   சட்டமன்ற  எதிர்க்கட்சித்   தலைவராக  இருந்த   ஜஹாரா  ஹமிட்  அவரது    தெலோக்   ஆயர்   தாவார்  சட்டமன்றத்   தொகுதியில்   போட்டியிடவில்லை.

ஜஹாராவுக்குப்  பதிலாக   புதியவர்  ஜம்ரி   சே  ரோஸ்   களமிறக்கப்படுகிறார். 2013-இல்  நாடாளுமன்றத்  தொகுதிகளில்  வெற்றிபெற்ற   மூவரையும்  அம்னோ   தக்கவைத்துக்  கொண்டிருக்கிறது.

மசீச  நான்கு   நாடாளுமன்றத்   தொகுதிகளிலும்   கெராக்கான்   மூன்றிலும்   மஇகா  ஒன்றிலும்   அம்னோ  ஐந்திலும்   போட்டியிடுகின்றன.

40  சட்டமன்ற  இடங்களில்   மசீச  10   இடங்களிலும்   கெராக்கான்   13  இடங்களிலும்,  மஇகா  ஒரே  ஓர்  இடத்திலும்   அம்னோ  ஐந்திலும்   போட்டியிடும்.