ஜோகூரில் பிகேஆர் பெருந் தலைகள் களமிறங்கவில்லை; பினாங்கு டிசிஎம் மட்டும் பத்து பகாட்டில் போட்டியிடுவார்

பக்கத்தான்   ஹரப்பான்  கட்சிகள்   அவற்றின்   வேட்பாளர்  பட்டியல்களை   இறுதி   செய்துவரும்   வேளையில்  பிகேஆர்   ஜோகூருக்கான   அதன்  எட்டு   நாடாளுமன்ற   வேட்பாளர்கள்   12  சட்டமன்ற   வேட்பாளர்களின்  பெயர்களை  இன்று   வெளியிட்டது.

14வது  பொதுத்   தேர்தலுக்கான  முக்கிய  போர்க்களமாக   திகழப்  போவது   ஜோகூர்தான்  என்று   அறிவிக்கப்பட்டது    தெரிந்ததே.  ஆனால்,   பிகேஆர்    தலைவர்   டாக்டர்   வான்  அசிசா   வான்  இஸ்மாயில்   வெளியிட்டுள்ள   அறிக்கையைப்   பார்த்தால்   அக்கட்சியின்  முக்கிய   புள்ளிகள்    எவரும்   அங்கு   போட்டியிடுவதாக   தெரியவில்லை.

இதற்குமுன்னர்       வெளிவந்த     செய்திகள்     பிகேஆர்     உதவித்     தலைவர்கள்   நூருல்   இஸ்ஸா   அன்வார்,    தியான்    சுவா,   ஷம்சுல்  இஸ்கண்டர்   உள்பட,  பல  பெரும்  புள்ளிகள்    ஜோகூர்   போர்க்களத்தில்  குதிக்கப்போவதாகக்  கூறியிருந்தன.

பினாங்கு  பராமரிப்பு   துணை   முதலமைச்சர்(டிசிஎம்)  ரஷிட்   ஹஸ்னோன்   மட்டும்    பந்தாய்   ஜெரெஜாக்    சட்டமன்ற  இடத்தைவிட்டு   அகன்று    தெற்கே   ஜோகூர்  சென்று   பத்து   பாகாட்டில்    போட்டியிடுகிறார். 2013  பொதுத்   தேர்தலில்   பிகேஆர்   ஜோகூரில்  வென்ற  ஒரே    நாடாளுமன்றத்   தொகுதி   இந்த  பத்து  பாகாட்   என்பது   குறிப்பிடத்தக்கது.

மூவரில்  பிறந்திருந்தாலும்  ரஷிட்   தம்   அரசியல்   வாழ்க்கையைத்    தொடங்கியது   பினாங்கில்தான்.  13வது  பொதுத்   தேர்தலில்   ஏற்கனவே  பிகேஆர்  வசமிருந்த   பந்தாய்   ஜெரெஜாக்   சட்டமன்றத்   தொகுதியில்    அவர்  போட்டியிட்டு  வெற்றி   பெற்றார்.  தொடர்ந்து   பினாங்கு   துணை  முதல்வராகவும்   நியமிக்கப்பட்டார்.

வான்  அசிசாவின்   அறிவிப்பின்படி     பத்து  பகாட்டில்   ஏற்கனவே  வென்றவரான  இட்ருஸ்   ஜூஸி   கழட்டி  விடப்பட்டிருக்கிறார்    என்றாகிறது. பத்து  பாகாட்    மலாய்க்காரர்கள்   பெரும்பான்மையாக   உள்ள  ஓர்   இடம்.  அங்கு  மலாய்   வாக்காளர்கள்  54  விழுக்காட்டினர்.  சீனர்கள்   43  விழுக்காடு,  இந்தியர்கள்   1.3  விழுக்காடு.