பி.எஸ்.எம்., தேசிய முன்னணியின் கைப்பாவையா? எங்கள் தரப்பு விளக்கம்

14-வது பொதுத் தேர்தலில், மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) போட்டியிடுவது குறித்து பலரும் பல கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஹராப்பானுக்கு ஆதரவு தெரிவித்தபோதும், 16 இடங்களில் தங்கள் வேட்பாளர்களை பி.எஸ்.எம். களமிறக்குவது, மும்முனைப் போட்டியை உருவாக்கி, வாக்குகளைச் சிதறடித்து, பாரிசானுக்கு வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என ‘ஆட்சி மாற்றத்தை’ விரும்பும் பலர் தங்கள் ஆதங்கத்தை வெளிபடுத்தி வரும்வேளையில், பி.எஸ்.எம். கட்சி தோற்றுநர்களில் ஒருவரான இராணி இராசையா அவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் தந்துள்ளார். ஜிஇ14-ல், பேராக் – புந்தோங் சட்டமன்றத்தில் அவர் போட்டியிடவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1.பி.எஸ்.எம். பி.என்.-னின் கைப்பாவையா?

பொதுமக்களைத் தவறாக வழிநடத்த, ஹராப்பான் அரசியல்வாதிகளால் சுமத்தப்படும் ஒரு குற்றச்சாட்டு இது. ஜிஇ14-இல், அரசாங்க மாற்றத்தை பி.எஸ்.எம். விரும்புகிறது. பி.என். தோற்கடிக்கப்படுவதை நாங்கள் காண விரும்புகிறோம்.

2.அப்படியென்றால், பல இடங்களில் பி.எஸ்.எம். ஏன் மும்முனை போட்டிகளை உருவாக்கியுள்ளது?

எதிர்வரும் பொதுத் தேர்தலில், ஹராப்பான் மற்றும் பாஸ்-க்கு இடையில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மும்முனைப் போட்டிகள் இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தத் துரதிருஷ்டவசமான நிலைமை உருவாக்கியது பி.எஸ்.எம். அல்ல, மாறாக ஹராப்பான் உறுப்புக் கட்சிகள் சிலவற்றால் இந்நிலை உருவாக்கப்பட்டது. பி.எஸ்.எம்.16 இடங்களில் மட்டுமே களமிறங்கவுள்ளது.

3.பி.எஸ்.எம்.-க்கு ஏன்  இந்தத் திமிர்? ஏன் ஹராப்பானுடன் சேர விரும்பவில்லை?

இது மற்றொரு பொய்யாகும். 2015-இல் ஹராப்பான் அமைக்கப்படும் போது, பல கட்சிகள் அக்கூட்டணியில் சேர அழைக்கப்பட்டன. ஆனால், பி.எஸ்.எம். அழைக்கப்படவில்லை. அம்பிகாவைக் கேளுங்கள், அவருக்கு உண்மை தெரியும்.

4.பி.எஸ்.எம். கேடு விளைவிக்கிறது – எதிர்கட்சியினர் வாக்குகளைச் சிதறடிக்கிறது.

தேர்தல் வழி அதிகாரத்தை வெல்வதற்காக, 1998-ல் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சி பி.எஸ்.எம். மற்றக் கட்சிகளைப் போலவே, தேர்தல்களில் போட்டியிடுவது எங்கள் ஜனநாயக உரிமை. ஆனால், பிரச்சனை என்னவென்றால், ஹராப்பான் கூட்டணிக் கட்சிகள், நாடாளுமன்றங்கள், சட்டமன்றங்கள் என, அனைத்து 809 இடங்களையும் எடுத்துக்கொண்டன. ஆக, பி.எஸ்.எம்.-க்குக் காலியாக எந்த இடமும் இல்லை. எனவே, எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் தேர்தலில் நிற்க வேண்டும் அல்லது கட்சியைக் கலைக்க வேண்டும்.

5.வாக்குகள் உடைந்தால், பாரிசான் வெல்வது உறுதி

நிச்சயமானது இல்லை! ஜெலப்பாங், புந்தோங், பத்து காஜா போன்ற எதிர்க்கட்சி வாக்குகள் பெரும்பான்மை கொண்ட இடங்களில் எதிர்க்கட்சிகளில் ஒன்று வெற்றி பெறும். உதாரணத்திற்கு, ஜிஇ13-ல், புந்தோங்கில் பி.என். 4000+ வாக்குகளைப் பெற்றது, டிஏபி 13,000 வாக்குகளைப் பெற்றது. ஆக, ஜிஇ14-ல், எதிர்க்கட்சியின் 13,000 வாக்குகள் டிஏபி மற்றும் பி.எஸ்.எம். இடையில் பிளவுப்படும். ஆனால், 13,000 வாக்குகளை நீங்கள் எப்படி பிரித்தாலும் (1000/12000, 2000/11000, 3000/10000, 4000/9000, 5000/8000, 6000/7000) டிஏபி அல்லது பி.எஸ்.எம் இரண்டில் ஓர் எதிர்க்கட்சி வெற்றிபெறும். பி.என். எதிர்ப்பு உணர்வு வலுவாக இருக்கும் வரை இந்த நிலை ஏற்படும்

6.ஒரு மும்முனைப் போட்டியிடத்தில், எப்படி வாக்களிப்பது?

பி.என்.-னுக்கு வாக்களிக்க வேண்டாம். சிறந்த எதிர்க்கட்சி வேட்பாளருக்கு வாக்களியுங்கள். அத்தொகுதியில், பல ஆண்டுகளாக, தொடர்ச்சியாக சேவையாற்றியவரே சிறந்த வேட்பாளர். அவரை நீங்கள் எளிதாகத் தொடர்பு கொள்ள முடியும். மக்கள் புகார்களுக்குத் தீர்வுகாண உடனடி நடவடிக்கை எடுப்பவராகவும், வாக்களித்த மக்களுக்குக் கடினமாக உழைக்கக்கூடிய ஒரு வேட்பாளராகவும் அவர் இருக்க வேண்டியது அவசியம். அவரைத் தேர்வு செய்து, வாக்களியுங்கள்.

7.ஹராப்பான் நாற்காலி பகிர்வுக்கு முன்னமே, பி.எஸ்.எம். ஏன் கலந்துபேசவில்லை?

சுங்கை சிப்புட்டின் பி.எஸ்.எம். எம்பி டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ், ஹராப்பானுடன் ஒரு வருடத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்து வந்துள்ளார், ஆனால் வெற்றி பெறவில்லை. பி.எஸ்.எம்.-ஐ கருத்தில் கொள்ளாமலேயே, ஹராப்பான் இடங்களை ஒதுக்கிவிட்டது. பி.எஸ்.எம்.-மிற்கு எந்த நாற்காலியும் இல்லை! சுங்கை சிப்புட்டில் பி.எஸ்.எம். பிகேஆர் சின்னத்தைப் பயன்படுத்தினால் மட்டும், நேரடி போட்டிக்கு இடமளிக்க அவர்கள் தயாராக இருந்தனர்!

8.இம்முறை ‘இனி கலிலா’ நிலை ஆயிற்றே, எனவே பி.எஸ்.எம். ஏன் இந்தத் தேர்தலில் பின்வாங்கக் கூடாது?

‘மாற்றத்தை’ விரும்பும் பெரும்பாலான மலேசியர்களைப் போல, நாங்களும் ‘இனி கலிலா’ –ஐ ஆதரிக்கிறோம். ஆனால், பிஎன்-னுக்குப் பதிலாக ஹராப்பானைத் தேர்ந்தெடுப்பது மட்டும் போதுமானதல்ல என்று நாங்கள் நினைக்கிறோம். மக்களின் வாழ்வில் உண்மையான மாற்றங்கள் ஏற்பட வேண்டும்: உயர்ந்தபட்ச ஊதியம், ஏழைகளுக்கு வரி விலக்கு, பொது மருத்துவமனைகள் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு, இலவசக் கல்வி, வாங்கும் வசதிக்குட்பட்ட தரமான வீடுகள், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் போன்றவை. இவற்றிற்காக பி.எஸ்.எம். தொடர்ந்து போராடி வருகிறது. மக்களின் குரலாக நாங்கள் நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் ஒலிக்க பி.எஸ்.எம். பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம்.

9.நாடாளுமன்றம் / மாநிலச் சட்டமன்றங்களில் பி.எஸ்.எம். எப்படி வாக்களிக்கும்?

அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யும் பிஎன்-ஐத் தடுத்து நிறுத்தவும், மக்கள் சார்பு கொண்ட மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கொள்கைகளை ஆதரிக்கும் அனைத்து திட்டங்களுக்கும் ஆதரவாக, பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து நாங்கள் வாக்களிப்போம்.