மணிவண்ணன் : ஊத்தான் மெலிந்தாங் தொகுதி, இன்னும் முடிவெடுக்கவில்லை

எதிர்வரும் பொதுத் தேர்தலில், பேராக் ஊத்தான் மெலிந்தாங்கில் போட்டியிட கட்சி விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதை, காப்பார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.மணிவண்ணன் இன்னும் தீர்மானிக்கவில்லை.

அந்த அழைப்பு பற்றி யோசித்து, நாளை தனது முடிவைத் தெரிவிக்க உள்ளதாக மணிவண்ணன் ‘பெரித்தா டெய்லி’யிடம் கூறியுள்ளார்.

“எனக்கு ஊத்தான் மெலிந்தாங் சீட் வழங்கப்பட்டது உண்மைதான், அதுபற்றி நான் யோசிக்க வேண்டும், இன்னும் நான் முடிவு செய்யவில்லை. நாளை என் முடிவைத் தெரிவிப்பேன்,” என்று தொடர்புகொண்டபோது அவர் கூறியுள்ளார்.

காப்பாரில் மலாய் வாக்காளர்களின் எண்ணிக்கை 70 விழுக்காட்டுக்கு உயர்ந்துள்ளதால், அத்தொகுதியை முன்னாள் கோலா லங்காட் பிரதிநிதி அப்துல்லா சானியிடம் கொடுத்துவிட்டு, மணிவண்ணனை ஊத்தான் மெலிந்தாங்கிற்கு அனுப்ப பிகேஆர் தலைமைத்துவம் முடிவெடித்துள்ளது.

நேற்று, பெரித்தா டெய்லியுடனான ஒரு நேர்காணலில், காப்பாரில் பிஎன், பாஸ் மற்றும் பிஆர்எம் வேட்பாளர்களோடு களமிறங்க, கட்சி தன்னை முன்மொழியும் என்று மணிவண்ணன் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

மணிவண்ணனின் இந்த தொகுதி மாற்றத்திற்கு, கட்சியில் சிலரின் செயல்தான் காரணம் என்று அவருக்கு நெருக்கமான ஒரு தரப்பு கூறியுள்ளது.