முள்ளிவாய்க்காலில் அரசியல் செய்து கதாநாயகனாகும் எண்ணங்களை கைவிடுங்கள்; யாழ். பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவர் வேண்டுகோள்!

“முள்ளிவாய்க்காலுக்கு அவர் வரக்கூடாது, இவர் வரக்கூடாது என்று கூறி அந்த நாளை கொச்சைப்படுத்தாதீர்கள். இந்த நிகழ்வில் அனைவரும் மக்களோடு மக்களாக கலந்துகொள்ளுங்கள். மற்றவர்களைக் குறைகூறி மக்களின் கண்ணீரில் அரசியல் செய்து கதாநாயகனாகும் எண்ணங்களை விட்டுவிடுங்கள்.” என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கி.கிருஷ்ணமேனன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைந்து ஒரே நிகழ்வாக தமிழ்த் தேசியத்தை மீளெழுச்சிகொள்ளச்செய்யும் நிகழ்வாகக் கடைப்பிடிக்கவேண்டும் என்று யாழ். பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் சில தினங்களுக்கு முன்னர் அறைகூவல் விடுத்திருந்தது.

ஒன்றியத்தின் அந்த அறைகூவலில் சந்தேகமிருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியிருந்தார். ஒன்றியத்தின் இந்த அழைப்பு பிழையானவர்களுக்கும் அவர்களின் பிழைகளுக்கும் வெள்ளையடிப்பதற்கான முயற்சியாக இருக்குமோ?, என்று அவர் சந்தேகம் எழுப்பியிருந்தார்.

இனப்படுகொலைக்கு இறுதிவரை துணைபோனவர்களும், இனப்படுகொலை விசாரணைகளை நிறுத்த நினைப்பவர்களும், அதே இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களும், அதன் சாட்சிகளும் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்பவர்களும் ஒன்றாக ஒரே இடத்தில் அஞ்சலி செலுத்துவது அபத்தம் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விமர்சித்திருந்தார்.

இது தொடர்பில் பதிலளித்துள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், “முள்ளிவாய்க்கால் நினைவிடத்துக்கோ அல்லது நினைவு நாளுக்கோ எவரும் உரிமை கோர முடியாது. அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி, பொது அமைப்புகளாக இருந்தாலும் சரி, ஏன் நாங்களேகூட அதற்கு உரிமை கோர முடியாது. இந்த நினைவு நாளை அரசியல் கட்சிகளோ, பொது அமைப்புகளோ தமது சுய இலாபத்துக்காகப் பயன்படுத்திக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. முள்ளிவாய்க்கால் நினைவு நாளைகூட நாம் ஒற்றுமையாகக் கடைப்பிடிக்காத தரப்பாக இருக்கக்கூடாது.

சர்வதேச சமூகம் எமக்கொரு தீர்வைப் பெற்றுத்தர முயலும்போது நாம் எமக்குள் பல பிரிவுகளாக இருப்பதை நாம் விரும்பவில்லை. அதனாலேயே நினைவு தினத்திலாவது ஒன்றுபடுமாறு அழைத்திருந்தோம். அதில் எவ்வித வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என வலியுறுத்தியிருந்தோம். அப்படிப்பட்டதொரு நிலையில், அந்த நினைவு நாளுக்கு இன்னார்தான் வரவேண்டும் என தீர்மானிக்க எவருக்கும் தகுதியில்லை.

தமிழ்க் குடிமகன் எவராக இருந்தாலும் கலந்துகொள்ள முடியும். அது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் நிகழ்வு. அங்கு வந்து அரசியல் கருத்துகளை ஊடகங்கள் வாயிலாகக் கூறுவது, நினைவிடத்தில் வைத்து அரசியல் செய்வது போன்றவற்றை எம்மால் ஏற்றுக்கொள்ள முயாது. ஏனெனில், சில அரசியல் தரப்புகள் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை வைத்து அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றன.

முள்ளிவாய்க்காலுக்கு அவர் வரக்கூடாது, இவர் வரக்கூடாது என்று கூறி அந்த நாளை கொச்சைப்படுத்தாதீர்கள். இந்த நிகழ்வில் அனைவரும் மக்களோடு மக்களாக கலந்துகொள்ளுங்கள். மற்றவர்களைக் குறைகூறி மக்களின் கண்ணீரில் அரசியல் செய்து கதாநாயகனாகும் எண்ணங்களை விட்டுவிடுங்கள்”என்றுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: