எப்போது உள்ளாட்சி தேர்தல் அறிவித்தாலும் போட்டியிடுவோம்.. கமல்ஹாசன் அதிரடி

சென்னை: தமிழகத்தில் எப்போது உள்ளாட்சி தேர்தல் அறிவித்தாலும் போட்டியிடுவோம் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார்.

சென்னையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மாதிரி கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அதன் தலைவர் கமல்ஹாசன் உட்பட பல்வேறு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். கமல்ஹாசன் இந்த கூட்டத்திற்கு பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசினார். அதில் உள்ளாட்சி தேர்தல் குறித்தும் பேசினார்.

அதில் ”மக்களுக்கான சிம்மாசனத்தை வடிவமைத்து கொண்டுள்ளோம்.நலமாக மக்கள் வாழும் பூமியை தயார் செய்து கொண்டுள்ளோம். கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அரசு புரிந்து கொள்ள வேண்டும். உள்ளாட்சிதான் நமது பலம். எப்போது உள்ளாட்சி தேர்தல் அறிவித்தாலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்.” என்றார்.

மேலும் ”ஊழலை ஒரே நாளில் ஒழிக்க முடியாது; முதலில் குறைக்க வேண்டும், அடுத்து தடுக்க வேண்டும், கடைசியாக ஒழிக்க வேண்டும். மக்கள் நீதி மய்யம் ஊழலுக்கு எதிராக களமாடும்” என்றார்.

அதேபோல் நிர்மலா தேவி விவகாரம் குறித்து பேசிய அவர் ”நிர்மலா தேவி விவகாரத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். யாராக இருந்தாலும் அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

tamil.oneindia.com