சுங்கை சிப்புட்டில் பி.எஸ்.எம். போட்டியிடுவது உறுதி

பிகேஆர் உட்பட பல தரப்பினருடன் போட்டியை எதிர்கொண்ட போதிலும், சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவது உறுதியென மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்) இன்று கூறியுள்ளது.

முன்னதாக, சுங்கை சிப்புட்டில் பி.எஸ்.எம். போட்டியிடுவது பாரிசானின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்பதால், போட்டியிடுவதிலிருந்து விலகிக்கொள்ள டாக்டர் ஜெயக்குமார் தயார் எனச் செய்திகள் வெளியாகி இருந்தன.

இரண்டு தவணைகள் சுங்கை சிப்புட் எம்பியாக இருந்த டாக்டர் மைக்கேல் ஜெயக்குமாருக்கு எதிராக, ஒரு வேட்பாளரை நிறுத்தும் எதிர்க்கட்சிதான் வாக்குகளை உடைக்கவிருக்கிறது, பி.எஸ்.எம். அல்ல என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம் தெரிவித்தார்.

“இதற்குக் காரணம் பிகேஆரின் ஆணவம், குமார் பி.கே.ஆர் சின்னத்தின் கீழ் போட்டியிட மறுத்துவிட்டதால், எதிர்க்கட்சிக்கான வாக்குகளை உடைக்க, அவர்கள் மிகவும் பிடிவாதமாக ஒரு வேட்பாளரைக் களமிறக்குகின்றனர்,” என்று ஓர் அறிக்கையில் சிவராஜன் குறிப்பிட்டார்.

“இருப்பினும், சுங்கை சிப்புட் தொகுதி மக்கள் வழங்கிவரும் ஆதரவை நாங்கள் உறுதியாக நம்புகிறோம், டாக்டர் ஜெயக்குமார், அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து பணியாற்றுவதைப் பார்க்க அவர்கள் விரும்புகிறார். நாங்கள் அவர்களின் விருப்பத்திற்கு செவிசாய்த்து, 14-வது பொதுத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.”

பாரிசான் நேசனல் வேட்பாளரான, மஇகாவின் எஸ்.கே. தேவமணியை, பிஎஸ்எம் சின்னத்திலேயே நின்று, டாக்டர் ஜெயக்குமார் வெற்றி கொள்வார் என்று பி.எஸ்.எம். உறுதியாக நம்புவதாக சிவராஜன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“சுங்கை சிப்புட் நாடாளுமன்றத்தில் மிகச் சிறப்பாக பணியாற்றிய ஓர் எம்.பி.-ஐ வீழ்த்த பக்காத்தான் ஹராப்பான் முடிவு செய்தால், அக்கூட்டணி மக்களின் மரியாதையை இழந்துவிடும்”, என்று அவர் மேலும் கூறினார்.

நேற்று, ஊத்தான் மெலிந்தாங்கின் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கேசவனை, சுங்கை சிப்புட் நாடாளுமன்ற வேட்பாளராக பிகேஆர் அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து, அந்த நாற்காலியை விட்டுவிடும்படி சில கட்சி உறுப்பினர்கள் தனக்கு ஆலோசனை வழங்கியதாக டாக்டர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.

2013-ஆம் ஆண்டில், டாக்டர் ஜெயக்குமார் பிகேஆர் சின்னத்தின் கீழ் தேவமணியை 2,793 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டார்.

அதேபோல், 2008-ல், சுங்கை சிப்புட் எம்பியாக 7 தவணைகள் இருந்த, அப்போதைய மஇகா தேசியத் தலைவர் சாமிவேலுவை, டாக்டர் ஜெயக்குமார் 1,821 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.