இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கியமை மற்றும், சில வாரங்களுக்கு முன்னர் கூட்டு எதிர்க்கட்சியால் பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு ஆதரவளித்தமை தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர், கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்பட்ட பேரணியின் போது காவற்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, நாடாளுமன்றில் கருத்துரைத்த போது, எதிர்க்கட்சித் தலைவர்  ஆர்.சம்பந்தன் தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இனத்தின் தலைவராக அல்லாமல் பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்புத் தொடர்பாக கருத்துரைப்பதானது இவர் நாட்டின் தலைவர் போல் பேசுவதாகவும் ரணில் விக்கிரமசிங்க கிண்டலடித்திருந்தார்.

பிரதமர் இவ்வாறு சம்பந்தனை கிண்டலடித்த போது, நாடாளுமன்றில் தனக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்ட போது தனக்கு ஆதரவாக சம்பந்தன் உரையாற்றியிருந்தார் என்பதைக் கூட நினைக்கவில்லை.

1977ல் ஆர்.சம்பந்தன் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட போது, இவர் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு போன்றவற்றிற்கு தொடர்ந்தும் ஆதரவளித்த அதேவேளையில், தனது மக்களுக்காகக் குரல் கொடுக்கக் கூடிய அனுபவம் மிக்க அரசியல்வாதிகளில் ஒருவராக விபரிக்கப்பட்டிருந்தார்.

1980 ஒக்ரோபரில் அதாவது சிறிலங்காவில் நிறைவேற்று அதிபர் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளின் பின்னர், மறைந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையை இரத்துச் செய்வதற்கான தீர்மானத்தை அப்போதைய ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அரசாங்கம் நாடாளுமன்றில் முன்வைத்த போது, அதனை அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மறைந்த அ.அமிர்தலிங்கம் மிகவும் வன்மையாக எதிர்த்திருந்தார்.

சிறிமாவோவிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் நகர்வானது இந்த நாட்டின் ஜனநாயக விழுமியங்களை அழிக்கின்ற ஒரு அரசியல் படுகொலை என அமிர்தலிங்கம் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தச் சம்பவம் இடம்பெற்று 38 ஆண்டுகளின் பின்னர், அமிர்தலிங்கத்தின் அரசியல் வாரிசான தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியால் நாடாளுமன்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்ட போது அதனை எதிர்த்திருந்திருந்தார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், இந்த நாட்டில் நல்லாட்சியை நிலைநிறுத்துவதாகவும் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தைப் பலப்படுத்துவதாகவும் வாக்குறுதி வழங்கியதை அடுத்தே தற்போதைய அரசாங்கத்திற்கு சிறுபான்மை மக்கள் தமது வாக்குகளை வழங்கியிருந்தனர்.

நாடாளுமன்றின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் பொறுப்புள்ள ஒரு அரசியல்வாதியான சம்பந்தன் கூட்டு எதிர்க்கட்சியால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தனது எதிர்ப்பை வழங்கியதன் மூலம் தன்னை ஒரு ஜனநாயகத்தின் பாதுகாவலன் என்பதை நிரூபித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு கூட்டு எதிர்க்கட்சியினர் முயற்சிப்பதானது நாட்டின் அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு நகர்வாகவே நோக்கப்படுகிறது.

கூட்டு எதிர்க்கட்சியானது சம்பந்தனிற்கு எதிராக தனது நகர்வை முன்னெடுப்பதன் மூலம் நாட்டின் இனவாத உணர்வுகள் மூலம் தேசிய அரசியலில் தனக்கான இருப்பைப் பலப்படுத்திக் கொள்வதற்கு முயற்சிக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

சம்பந்தன், வடக்கு கிழக்கின் வல்லமை மிக்க அரசியல்வாதி மட்டுமல்லாது, தேசிய அரசியலை சாணக்கியம் மிக்க வழிகளில் தீர்ப்பதன் ஊடாக இவர் அமைதியை நேசிக்கும் பெரும்பான்மை மக்களால் சரியான சிந்தனை மிக்க ஒரு அரசியல்வாதியாகவும் கருதப்படுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆகிய இரு பதவிகளையும் வகிக்கும் சம்பந்தனின் உணர்வுமிக்க இரட்டைப் பங்களிப்புக்கள் அனைத்துலக சமூகத்தாலும் பாராட்டப்பட்டுள்ளது.

ஆகவே, ஒரு சில வாரங்களின் முன்னர் கூட்டு எதிர்க்கட்சியானது பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்து அதில் தோல்வியுற்றதன் மூலம் தன்னை ‘கோமாளி’ என நிரூபித்திருந்த நிலையில் தற்போது சம்பந்தனிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைக்க முயற்சிப்பதன் மூலம் இந்த நாட்டின் அமைதி மற்றும் சமாதான சூழலுக்கு கூட்டு எதிர்க்கட்சி குந்தகம் விளைவிக்க முயற்சிக்கின்றது.

பிரித்தானியா தென்னிலங்கை அரசியல் தலைவர்களிற்கு ஆதரவளித்த போது, சேர் பொன்னம்பலம் இராமநாதன் உட்பட்ட தமிழ் அரசியல் தலைவர்கள் இந்த நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக தம்மை எவ்வாறு அர்ப்பணித்தார்கள் என்பதை இந்த இடத்தில் அனைவரும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

பிரித்தானியா கொலனித்துவ காலத்தில், ஆளுநரால் வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட சேர் பொன்னம்பலம் இராமநாதன், பிரித்தானிய ஆளுநர் மற்றும் பிரித்தானிய இராணுவத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்வதற்கு உந்துதல் வழங்கினார்.

அதாவது பிரித்தானிய ஏகாதிபத்தியத்தால் இந்த நாட்டில் சிங்களவர்களுக்கு எதிராக இடம்பெற்ற கைதுகள், தடுப்புக்கள் மற்றும் படுகொலைகளை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்வதற்கு சேர்.பொன்.இராமநாதன் உதவினார்.

இவ்வாறு பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதற்கு உதவுவதன் மூலம் தனக்கான சலுகைகள் மற்றும் வெகுமதிகளைத் தான் இழந்து விடுவேன் என்பதைக் கூட சேர்.பொன்.இராமநாதன் கருத்திலெடுக்கவில்லை.

பிரித்தானியரின் ஏகாதிபத்தியத்தின் போது பல ஆயிரக்கணக்கான அப்பாவி மனிதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ‘சிங்கள நாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த இனத்திற்காக நான் எனது வாழ்நாள் முழுவதிலும் சேவையாற்றியுள்ளேன். எனது இருபத்தெட்டாவது வயதில் நான் சட்டசபையில் நுழைந்தேன். அன்றிலிருந்து   நான் தமிழ் சமூகத்தின் உறுப்பினர் மட்டும் என ஒருபோதும் நினைக்கவில்லை.

நான் சிங்களவர்களினதும் இந்த நாட்டில் வாழும் அனைவரினதும் நலன்களுக்காக ஆதரவளித்தேன். நான் எல்லா விடயங்களையும் ஒரே விதமான அனுதாபத்துடன் அணுகினேன். அத்துடன் அனைத்து சமூகங்களுக்காகவும் என்னாலான வரை பணியாற்றியுள்ளேன்’ என எழுதியிருந்தார்.

இந்த நாட்டின் அனைத்து சமூகங்களும் ஒற்றுமையுடனும் ஒருமைப்பாட்டுடனும் வாழவேண்டும் என்கின்ற சேர்.பொன் இராமநாதனின் எண்ணக் கருத்துக்களே தற்போதைய நாட்டின் அரசியலிலும் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனின் செயற்பாடுகள் எண்ணங்களும் பிரதிபலிக்கின்றன.

ஆங்கிலத்தில்  – Manekshaw
வழிமூலம்        – Ceylon today
மொழியாக்கம் – நித்தியபாரதி

TAGS: