இந்தியர்கள் வாழ வழிவகுக்க வேண்டிய பாரிசான் இந்தியர்களுக்கு   இலவசச் சவப் பெட்டி வழங்க தேர்தல் வாக்குறுதி அளிப்பதா?

 

தனது தொகுதியில் தான் வெற்றி பெற்றால் இந்தியர்களுக்கு இலவசச் சவப் பெட்டி கொடுக்கப்படும் என்ற பராமரிப்பு அரசின் துணைப் பிரதமர் சைட் ஹமிடி மற்றும் பாரிசானின் போக்கு இந்தியர்களை அவமதிப்பதாகும். அப்போக்கை வன்மையாகக் கண்டிப்பதாக பக்காத்தான் ஹராப்பான் கோல லங்காட் நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளரும், கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறினார்.

 

மலேசிய இந்தியர்கள் உழைப்பில் உயிர் வாழும் இனம். அவர்களின்  உழைப்புக்கும், உரிமைக்கும் மதிப்பளிக்காது, இந்நாட்டில் இந்தியர்களை ஊனமுற்றவர்களாக ஆக்கிய பெருமைக்கு உரியது 60 ஆண்டுகால பாரிசான் ஆட்சியே! குறைந்த வருமானம் பெறுபவர்களாக  இந்தியர்கள் விளங்குவதற்கு  மூலகாரணம் துணைப் பிரதமரின் உள்துறை அமைச்சு, பாரிசான் அரசு, அன்னியத் தொழிலாளர்களை இந்நாட்டுக்குத் தருவிப்பதில் காட்டும் தாராளமே ஆகும்.

 

குறைந்த வருமானத்தில் காலங்காலமாக வாழ்ந்த தோட்டப்புறங்களை விட்டு வெளியேறிப் பட்டணப் புறம்போக்கு நிலங்களில் குடியேறிய இந்தியர்களின் உரிமைக்கு மதிப்பளிக்காமல், பூஜியம் குடிசை கொள்கை என்று கூவிக்கொண்டு அவர்கள் வாழ்ந்த நிலங்களையும் அபகரித்து, ஆண்டிகளாக இன்று நடுவீதியில் நிற்க வைத்துள்ளதே பாரிசான்  ஆட்சிதான் என்பதை நாம் அனைவரும் அறிவோம் என்றாரவர்.

 

தனது தொகுதியில் தான் வெற்றி பெற்றால் இந்தியர்களுக்கு இலவசச் சவப் பெட்டி என்று கூறியதின் வழி இந்தியர்களை அவமதிக்கும் துணைப்பிரதமர் சைட் ஹமிடியின் மற்றும் பாரிசானின் போக்கை வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறினார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

துணைப்பிரதமர் சைட் ஹமிடி, அவர் பதவி வகிக்கும் உள்துறை அமைச்சின் பொறுப்பில் இருக்கும் தேசியப் பதிவு இலாகாவில் தேங்கிக்கிடக்கும் இந்தியர்களின் எத்தனைக் குடியுரிமை விண்ணப்பங்களுக்கு இவர் அவரது பதவிக்காலத்தில் தீர்வுகண்டுள்ளார் என்று சேவியர் வினவினார்.

 

தேசியப் பதிவு இலாகா இந்தியர்களின் அடையாளப் பத்திரங்கள் விவகாரத்துக்குத் தீர்வுக்கான நடவடிக்கை எடுப்பதை விட்டு, இந்தியர்களுக்கு அடையாளப்பத்திரங்கள் வழங்காமல் இருப்பதற்கான காரணங்களைத் தேடித்திரிகிறது.

 

இந்நாட்டின் சுதந்திரத்துக்குப் பின் மேற்கு மலேசியாவின் கடலோரப் பகுதிகளில் கள்ளத்தனமாகக் குடியேறிய எத்தனையே அன்னியர்கள் குடியுரிமை பெற்றுச் சகலச் சௌகரியங்களுடன் வாழ்கின்றனர். தான் யார், எப்படி, எப்போது இங்குக் குடியேறினார் என்று துணைப் பிரதமருக்கு நன்கு தெரியும்.

 

அப்படியிருக்க இந்தியர்கள் எதிர்நோக்கும் அடையாளப் பத்திர விவகாரம் மீது கரிசனமாக நடந்துகொள்ள வேண்டியவர், இந்தியர்களை ஏளனம் செய்யும் விதமாக  இந்தியர்களின் அடையாளப்பத்திர விவகாரத்திற்குச் சலுகைகள் காட்டப் படாது என ஏற்கனவே அறிக்கை விட்டு,  அவர்களைப் புண்படுத்தியதை இந்தியச் சமுதாயம் மறக்கவில்லை என்பதை சேவியர் நினைவுப்படுத்தினார்.

 

இந்தியர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு சவப் பெட்டிகூட வாங்க கதியற்றவர்களா? மீண்டும்- மீண்டும் இந்தியர்களை அவமதிக்கும் துணைப்பிரதமர் சைட் ஹமிடி மற்றும் பாரிசானின் போக்கை வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறினார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.