வாழ வழிகேட்டால் சாவுக்கு வழிகாட்டும் போக்கு!

‘ஞாயிறு’ நக்கீரன் – அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாட்டை வழிநடத்திவரும் தேசிய முன்னணியின் இப்போதைய இடைக்கால அரசின் துணைப் பிரதமர், தாம் போட்டியிடும் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றால் இந்தியர்களுக்கு பிணப்பெட்டியை அன்பளிப்பு செய்வதாக அறிவித்துள்ளது, கடைந்தெடுத்த பிற்போக்குத்தனமாகும்.

அரசாங்க மட்டத்திலும் அரசியல் கூட்டணி என்ற வகையிலும் அம்னோ கட்சியிலும் என அனைத்து வகையாலும் நாட்டில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஒரு தலைவர், தான் தேர்தலில் வென்றால் இந்தியர்களுக்கு பிணப் பெட்டியை இலவசமாக அளிப்பதாக நேரடியாக சொல்லாவிட்டாலும் இந்தியர்களின் இறுதி சடங்கிற்கான செலவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்ததின் உள்ளீடான பொருள் பிணப்பெட்டியை இலவசமாக அளிப்பேன் என்பதுதான்.

அரசாங்க வேலை வாய்ப்பு, சொந்த வீடு, தொழில் கடன் வசதி, கல்வி வாய்ப்பு, அடையாள ஆவண சிக்கல், இளைஞர்களின் வன்போக்கு என்றெல்லாம் இந்திய சமுதாயம் எத்தனையோ பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும்  நிலையில் அவற்றில் இருந்து மீளவும் வாழும் வகைதேடியும் அல்லல்படும் இன்றைய சூழலில், இந்தியர் அனைவருக்கும் இறந்த பின் ஈமச் சடங்கு நடத்த உதவுவேன் என்பது அப்பட்டமான பிற்போக்குத்தனம்.

மொத்தத்தில் இந்திய சமுதாயத்தை சிறுமைப்படுத்தும் இத்தகையப் போக்கு குறித்து, அண்மைய நாட்களில் சமூக ஊடகங்களில் எதிர்மறையான கருத்துகள் பகிரப்பட்டு வரும் நிலையில், மஇகா சார்பில் எந்தக் கருத்தும் இதன் தொடர்பில் தெரிவிக்காமல் இருப்பது, இந்திய சமுதாயத்தின் மானமும் மரியாதையும் எந்த அளவுக்கு சீர்குலைந்தாலும் அதைப்பற்றி மஇகா-விற்கு கவலையில்லை என்ற எண்ணத்தைதான் பிரதிபலிக்கிறது.

மக்கள் எல்லாவற்றையும் அவதானித்துதான் வருகின்றனர் என்பதை மஇகா இன்னமும் உணராமல் இருப்பது, அதன் பாரம்பரியத்திற்கு இழுக்காகும்.