மக்கள் போராட்டத்தில் மலர்ந்த கட்சி பி.எஸ்.எம்.

1998-ஆம் ஆண்டு, மலேசிய மக்களின் நலனுக்காகப் போராடிய சில போராட்டவாதிகளால் மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்) தோற்றுவிக்கப்பட்டது.

தோட்டப்புற மக்களின் நலனுக்காக, பல ஆண்டுகள் போராட்டம் நடத்திய ‘சுவாரா வர்கா பெர்திவி’ (எஸ்.டபள்யூ.பி. -SWP), அலைகள் மற்றும் மக்கள் மேம்பாட்டு மையம் (சிடிசி-CDC) ஆகிய இயக்கங்கள் ஒன்றிணைந்து, 1994-ம் ஆண்டு முன்னெடுத்த தொழிலாளர்கள் தினக் கொண்டாட்டம், மலேசியத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பிறகு, அம்மூன்று இயக்கங்களும் ஒன்றிணைந்து பி.எஸ்.எம். கட்சியைத் தோற்றுவித்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, ஏழை தொழிலாளர் வர்க்கத்திற்காக போராட முடிவு செய்தனர்.

பதிவு பெற 10 வருட போராட்டம்

1998-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட போதும், மலேசியச் சங்கங்களின் பதிவு இலாக்காவால் ஒரு முறையான அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படாமல், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 10 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டது பி.எஸ்.எம். இறுப்பினும், சற்றும் அசராமல் 10 வருட இடைவிடாத, மக்கள் சேவைகளின் மூலமும் விடா முயற்சியாலும் இறுதியில் வெற்றிகரமாக கட்சி பதிவு பெற்றது. மலேசிய வரலாற்றில், உள்துறை அமைச்சை நீதிமன்றதில் நிறுத்தி, கட்சியின் பதிவு நிராகரிக்கப்படுவதற்கான காரணத்தைக் கேட்ட ஒரேக் கட்சி என்ற பெறுமை பி.எஸ்.எம்.-ஐ மட்டுமே சாறும்.

மக்களுக்கான பி.எஸ்.எம்.-இன் போராட்டங்கள்

1998-ல் தோற்றுவிக்கப்பட்ட நாள் முதல், வட்டார, தேசிய அளவில் மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தி, அதில் பல சோதனைகளையும், வேதனைகளையும், இறுதியில்  வெற்றிகளையும் பி.எஸ்.எம். சந்தித்து உள்ளது. அவற்றில் சில:-

–      கட்டாய வசிப்பிட வெளியேற்றத்திற்கு எதிரான போராட்டங்கள்.

–      வீட்டுரிமை போராட்டம்.

–      குறைந்த பட்ச சம்பளக் கோரிக்கை.

–      ஜி.எஸ்.டி. பொருட்சேவை வரி ஒழிப்பு போராட்டம்.

–      அரசாங்க மருத்துவமனைகள் தனியார் மயமாவதை எதிர்த்து போராட்டம்.

–      வேழை இழப்பு நிதி உருவாக்க கோரிக்கை.

–      நியாயமான தேர்தல் முறை அமலாக்க கோரிக்கை.

–      விவசாயிகளின் நல்வாழ்வு போராட்டம்.

–      நகர்ப்புற மக்களின் வாழ்வாதாரப் போராட்டம்.

–      பூர்வீகக்குடியினரின் நில உரிமை போராட்டம்.

சொத்து விவரங்கள் பிரகடனம்

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தலுக்கு முன்னரும் அதன் பிறகு ஒவ்வோரு ஆண்டும் தொடர்ச்சியாக தங்களது சொத்து விவரங்களையும், சேவை அறிக்கைகளையும் பொதுவில் அறிவிக்க வேண்டும் என்பது பி.எஸ்.எம்.-இன் தலையாய விதிமுறைகளில் ஒன்றாகும். இவ்வாறு செய்வதன் மூலம், மக்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளின் உண்மையான சேவை தரத்தை மதிப்பீடு செய்து கொள்வதோடு, அரசியல் தலைவர்கள் சொத்துக்கள் குவிப்பதையும் கணிசமாக தடுக்க முடியும்.

2008-ல் சுங்கை சிப்புட்டில் வெற்றி பெற்ற நாள் முதல், இன்று வரை டாக்டர் ஜெயக்குமார் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் தமது சொத்து விவரங்களைப் பொதுவில் அறிவிப்பது யாவரும் அறிந்த ஒன்றே. இவ்வாறு செயற்பட்டு வரும் ஒரேக் கட்சி பி.எஸ்.எம். மட்டுமே ஆகும்.

ஏழை எளிய மக்களுக்கான ஒரேக் கட்சி

பி.எஸ்.எம்., இன, மதப் பேதமின்றி மலேசிய மக்களின் எல்லா வித இடர்களிலும் பங்கெடுக்கும், பாட்டாளிகளின் உரிமைக்குரலாக விளங்குகிறது. நாட்டு மக்களின் அவதிகளைக் களைவதில் முக்கிய முட்டுக்கட்டைகளாக செயற்படும் பெரும்பணக்காரர்கள், முதலாளிகள், முறைகேடான அரசாங்க நிர்வாகம், மக்களின் துயரத்தைக் கண்டு கொள்ளாத தலைவர்கள் போன்ற சூழ்நிலைகளிலிருந்து பொது மக்களைக் காப்பாற்றும் நோக்கத்தை நிறைவேற்ற பி.எஸ்.எம். அயராது உழைத்து வருகிறது.

அடிதட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னாலில் அதே மக்களின் வாழ்க்கையை நசுக்கி சுகவாழ்வு காணும் மக்கள் தலைவர்களிடம் இருந்து மாறுபட்டு செயலாற்றிவரும் மலேசியாவின் ஒரே கட்சி பி.எஸ்.எம். என்பதிலும் மிகை இல்லை.

துணிந்து போராடினால் வெற்றி நிச்சயம்

மிக நீண்ட வேலை நேரம், மிகவும் குறைந்த சம்பளம், நாட்டின் தவறான பொருளாதார அமலாக்க முறையால் தொழிலாளர்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றி, வெளிநாடுகளில் சொத்துக்களைக் குவிக்கும் முதலாளி வர்க்கம், அதைக் கண்டும் காணாதது போல, ஒவ்வொரு முறையும் பணவீக்கத்தைச் சரி செய்வதாக கூறி, மேலும் மேலும் கீழ்த்தட்டு தொழிலாளர்களின் முதுகில் ஜி.எஸ்.டி. போன்ற சுமைகளைக் கட்டாயமாக திணிக்கும் அநீதிகள் போன்றவற்றை, மக்கள் போராட்டங்கள் வாயிலாகவே தீர்வு காணமுடியும், தங்கள் உரிமைகளை நிலைநிறுத்த முடியும் என்பதை மக்கள் உணர பி.எஸ்.எம். பாடுபட்டு வருகிறது.

சம உரிமை கொள்கை

மேல்தட்டு மக்களுக்கும், சாமான்ய மக்களுக்கும் இடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பல சமுதாய சீர்கேடுகளுக்கு வித்திடுகின்றன என்பதை எவரும் மறுக்க இயலாது. பெரும்பணக்காரர்களுக்குச் சாதகமாகவும், சாமான்யர்களுக்குப் பாரமாகவும் இருக்கும் தவறான வரி விதிப்பு கொள்கைகளைச் சீரமைப்பு செய்யவேண்டிய கட்டாயமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். ஆக்கப்பூர்வமான வரி சீரமைப்புகளை அமல்படுத்துவதும், சமசீர் பொருளாதார முறை அமலாக்கத்தின் மூலமும், நாட்டு மக்களின் தனிநபர் சராசரி வருடாந்திர வருமானத்தை ரிங்கிட் மலேசியா 1 மில்லியனாக உயர்த்துவதும் பி.எஸ்.எம்.-இன் மாறாத கொள்கைகளில் ஒன்றாகும். இதன் ஒரு அம்சமாகவே பி.எஸ்.எம். ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு எதிராக விடாது போராடி வருகிறது.

தனியார்மயக் கொள்கைகளுக்கு தடைவிதித்தல்

அடிப்படை வசதிகள் மற்றும் பொதுச் சேவைகள் (கல்வி, சுகாதாரம், பொது போக்குவரத்து போன்றவை) அனைத்து குடிமக்களுக்கும் அடிப்படை உரிமைகள் ஆகும். இவற்றைப் பொது மக்களுக்கு வழங்குவதில் முன்னுரிமை கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு ஆகும்.

இருப்பினும், தடையற்ற சந்தைகள் மற்றும் பெருநிறுவன அமைப்புக்கள் அனைத்து விஷயங்களிலும் திறமையானவை என்று கருதும், புதிய தாராளமயப் பொருளாதார நம்பிக்கைகளின் தூண்டுதலால், அரசாங்கம் தனியார் நிறுவனங்களுக்குப் பொதுச் சேவை துறைகளைத் தாரைவார்த்து கொடுத்து வருகிறது. மலேசியாவில் தனியார்மயமாக்கல் என்பது மாநிலத் தலைவர்களுடனோ அல்லது ஆளும் கட்சியுடனோ நெருக்கமான இருக்கும் நபர்களை மேலும் பணக்காரர்களாக வளர்த்தெடுக்கும் முயற்சியாகும். மின்சாரம், நீர், தொலை தொடர்பு மற்றும் பல துறைகள் தனியார்மயம் ஆக்கப்பட்டுவிட்டன அல்லது இணைக்கப்பட்டுவிட்டன.

குறைந்தபட்ச சம்பளக் கோரிக்கை

2003-ம் ஆண்டு தொடக்கம், பி.எஸ்.எம்., ஜெரிட் மற்றும் இதர பல தொழிலாளார் அமைப்புக்களுடன் இணைந்து, தீபகற்ப மலேசியாவிலும், சபா, சரவாக் ஆகிய மாநிலங்களிலும் ஒருசேர நடத்திய கையெழுத்து வேட்டையின் பயனாக, 2013 ஜனவரி முதல், அரசாங்கம் அடிப்படை மாத சம்பளத்தை அறிவித்தது. கையெழுத்து வேட்டையோடு இல்லாமல், நாடு முழுமைக்கும் ‘ஹோட் லைன், தொலைபேசி சேவை முறையை ஏற்படுத்தி, கிடைக்கப்பெற்ற மக்களின் புகார்களை தொழிலாளர் வள அமைச்சின் பார்வைக்கு நேரடியாக கொண்டு சேர்த்தது.

தற்கால பொருளாதார தேவைகளுக்கு ஏற்ப குறைந்த பட்ச சம்பளத்தை ரிம. 1,500 வெள்ளிக்கு உயர்த்துவதற்கும் அரசாங்கத்திடம் பி.எஸ்.எம். பரிந்துரை செய்து வருகிறது . தொழிலாளர் வர்க்கமே ஒவ்வொரு நாட்டின் முதுகெலும்பு என்பது பி.எஸ்.எம்.-இன் அசைக்க முடியாத சித்தாந்தம் ஆகும்.

குத்தகை அடிப்படையிலான வேலை வாய்ப்புகளை ஒழிப்போம், நிரந்தர வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்.

கால மாற்றத்திற்குச் சற்றும் ஒத்துவராத குத்தகை (காண்ட்ராக்ட் / அவுட்சோர்சிங்) அடிப்படையிலான வேலை வாய்ப்புகளை உடனடியாக ஒழிக்க வேண்டும். பி40 எனப்படும் மிகவும் வறுமை கோட்டில் வாழும் பல மலேசியர்கள் இன்னும் கூட பல அரசாங்க கட்டிடங்களில் குத்தகை அடிப்படையில் பாதுகாவலர்களாகவும் துப்புரவு தொழிலார்களாகவும் தனியார் நிறுவனங்களால் வேலைக்கு அமர்த்தப்பட்டு இருக்கின்றனர். பெருவாரியான சம்மந்தபட்ட தனியார் நிறுவனங்கள், தங்களது தொழிலாளர்களுக்கு முறையான சம்பளத்தையும் அடிப்படை சலுகைகளையும் கொடுப்பது இல்லை என்பது வேதனைக்குரிய ஒன்றாகும். பாதுகாவலும் துப்புரவு பராமரிப்பு வேலைகளும் நிரந்தர தேவைகளாக இருக்கும் போது, எதற்காக குத்தகை அடிப்படையில் வேலையாட்களை அமர்த்தும் நிலை தொடர வேண்டும்?

இவ்வாறான வேலை வாய்ப்புகளை நேரடியாக அராசாங்கம் ஏற்றுக்கொண்டு, தொழிலாளர்கள் சம்பளத்தையும், நியாயமான அடிப்படை சலுகைகளையும் உறுதி செய்ய வேண்டும் எனவும்; இந்த முறையற்ற முதலாளித்துவ அநியாயங்களை உடனே தடை செய்யக்கோரியும் அரசாங்கத்தை பி.எஸ்.எம் இடைவிடாது வலியுறுத்தி வருகின்றது.

தொழிலாளர் அமைப்புகள்

முன்னேறி வரும் நாட்டில், இன்றளவும் தனியார் நிறுவனங்கள் பல தொழிலாளர் அமைப்புகளுக்கு அனுமதி மறுக்கும் நிலை நீடிக்கிறது. அதற்கு அரசாங்கத்தின் பல சட்டத் திட்டங்களும் துணை நிற்கின்றன. இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு தொழிலாளர் இயக்கங்களை உருவாக்குவதில் உதவுவதோடு, அவற்றின் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வையும் பி.எஸ்.எம். ஏற்படுத்தி வருகிறது. அதோடு, முதற்கட்ட பணியாக நாடு முழுவதிலும் உள்ள அரசாங்க மருத்துவமனைகளில் வேலை செய்யும் பாதுகாப்புத் துறை ஊழியர்களுக்கான ஒரு கட்டமைப்பையும் உருவாக்கி வருகிறது. தொழிலாளர் இயக்கங்கங்களுக்கு தானியக்க முறையில் அங்கீகாரம் வழங்கவும் அரசாங்கத்திடம் முன்மொழிந்து வருகிறது.

OLYMPUS DIGITAL CAMERA

நாட்டு மக்களுக்குப் பாதகமான உலகமயப் பொருளாதாரக் கொள்கைகள்

பி.எஸ்.எம். பல சமூக அமைப்புக்களோடு இணைந்து, உலக முதலாளித்துவத்தின் கைப்பாவையாக செயல்படும் சில வல்லாதிக்க நாடுகளின் விருப்பப்படி, தீர்வையற்ற வணிக வட்டார ஒப்பந்தங்களில் மலேசியா கையெழுத்து இடுவதை எதிர்த்து அயராது போராடி வருகிறது.

1 % முதலாளிகளுக்கும் அரசாங்கத்திற்கும் மட்டுமே பயனளிக்கக் கூடிய இவ்வகை உலகலாவிய வர்த்தக ஒப்பந்தங்கள், நாளடைவில் மீதம் 99% சாமான்ய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கச் செய்யும் என்ற பல நிதி நிர்வாக வல்லுநர்களின் கருத்துக்களையும் செவிமடுக்காது, தான் தோன்றி தனமாக 2005-ல், திறந்த வாணிப ஒப்பந்தம் (ஃப்.தி.ஏ.) , 2014 – 2016-ல் ஆசிய-பசுபிக் வட்டார வாணிப ஒப்பந்தம் (தி.பி.பி.ஏ.) போன்றவற்றில் கையெழுத்திட்ட அரசாங்கத்தின் போக்கை கண்டித்த வட்டார நலனபிவிருத்தி வாணிப சம்மேளனத்தில் (ஆர்.சி.ஈ.பி) பி.எஸ்.எம். இடம்பெற்றுள்ளது.

வல்லாதிக்க நாடுகளின் வட்டார வாணிப புரிந்துணர்வு ஒப்பந்தங்களானது, சிறுபான்மை பெரும்பணக்காரர்களுக்கு மிகவும் அனுகூலம் சேர்க்கும் வகையிலும், சாமான்ய மக்களின் அடிப்படை தேவைகளை நசுக்கும் வகையிலும் வரையப்பட்டு உள்ளது.

பி.எஸ்.எம்., நமது நாட்டு சாமான்ய மக்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வாணிப ஒப்பந்தங்களில் மட்டும் கையொப்பம் இடும்படியும், அவ்வாறான ஒப்பந்தங்களில் கையொப்பம் இடுவதற்கு முன் அணுகுமுறைகளையும், பரிசீலனை செய்யவேண்டிய உள்ளடக்கங்கள் பற்றியும் தற்போதைய அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியும், வலியுறுத்தியும் பல பரிந்துரைகளைச் செய்துள்ளது.

வீடமைப்பு திட்டங்கள் மக்கள் வசிப்பதற்காக, முதலாளிகளின் இலாபத்திற்காக அல்ல

வீடமைப்பு திட்டங்களில் கட்டப்படும் வீடுகள், மக்கள் அமைதியாகவும் சுபீட்சமாகவும் பாதுகாப்புடனும் வாழ வேண்டும் என்பதை மனதில் இறுத்தி கட்டப்பட வேண்டுமே அன்றி, முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டைப் பன்மடங்காக்கும் பங்குசந்தை வணிகமாக இருக்ககூடாது என்ற நிலைப்பாட்டை பி.எஸ்.எம். என்றும் வலியுறுத்தி வருகிறது.

பி.எஸ்.எம். பல காலமாக, ஒரு வீட்டுடைமை வாரியத்தைத் தொடங்கும் படி அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கி வருகிறது. இவ்வாரியத்தின் வாயிலாக,

–      வீடுகள் இல்லாத குடும்பங்கள் தங்களது முதல் வீட்டை, கட்டுமான விலைக்கே வாங்க வகை செய்ய வேண்டும்.

–      இத்திட்டத்தின் வழி விற்கப்பட்ட வீடுகளை வாங்கிய பொது மக்கள், எக்காரணம் கொண்டும் இந்த வீடுகளை வியாபார நோக்கிற்காக மற்றவர்களுக்கு விற்கக்கூடாது.

–      அப்படியே வாங்கிய வீட்டை விற்பதானால், மீண்டும் வாரியத்திடமே மறுவிற்பனை செய்ய வேண்டும்.

–      இந்த திட்டத்தில் வீடுகளை வாங்கிய குடும்பங்கள் எதிர்காலத்தில் சொந்தமாக வேறு வீடுகளை வாங்க விரும்பினாலும் வாரியத்திடம் மீண்டும் மறுவிற்பனை செய்த பிறகே, பிற வீடுகளை வாங்க முடியும்.

இது தவிர்த்து நாட்டில் உள்ள அனைத்து மலிவு விலை அடுக்கு மாடி குடியிருப்புகளின் பராமரிப்பு சேவைகளையும் அரசாங்கம் தனது நேரடி கண்காணிப்பில் எடுத்துகொள்ள வேண்டும்.

மாதம் ரிம 2,500-க்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு, ஆக குறைந்த பட்ச வாடகையில் வீடுகள் வாடகைக்குக் கிடைக்க அரசாங்கம் வழி காண வேண்டும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளையும், வீட்டு மனைகளையும் சேர்த்து வைத்திருப்போருக்கும், சொகுசு சொத்துமனை வர்த்தகர்களுக்கும் அதிக பட்ச வரிகள் விதிக்க வேண்டும். இதன் மூலம் திரட்டப்படும் நிதியை, ஏழை மக்களுக்கான மலிவு வீடுகளை நிர்மாணிப்பதற்குச் செலவிட வேண்டும். உரிமையாளர்கள் இல்லாத மனைகளுக்கும், உரிமையாளர்கள் வசிக்காத சொத்துகளுக்கும் வரிகள் வசூலிக்க வேண்டும். இதன் வழி வருமானத்திற்கு மீறிய விலையேற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

ஆக்கப்பூர்வமான இத்திட்டங்களை அமலாக்கம் செய்வதன் வழி, சாமான்ய மக்களை வீட்டுடைமையாளராக ஆக்குவதோடு, மக்கள் எளிதாக வாடகை வீடுகள் பெறுவதற்கும் தீர்வு காண இயலும். அதே சமயத்தில், மலேசியாவில் தேவைக்கு அதிகமாக சொத்து குவித்து வைத்திருக்கும் 10% பெரும்பணக்காரர்களை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் முடியும்.

மக்கள் சக்தியை முடுக்கி விடுவதன் மூலம், மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வீடமைப்பு திட்டங்களை நிறைவேற்றுவதோடு; அவ்வாறான திட்டங்களில் நடைபெறும் முறைகேடுகளைச் சீர் செய்யவும் முடியும். வீட்டுடைமை என்பது நாட்டு குடிமக்களின் அத்தியாவசியத் தேவையாகும், சிறுபான்மை முதலாளித்துவ வர்க்கத்தின் பேராசைக்காக, இந்த அத்தியாவசிய தேவைகூட வலுக்கட்டாயமாக மறுக்கப்படுகிறது.

நகர முன்னோடிகளும் தோட்டப்புற மக்களும்

கட்டாய வசிப்பிட வெளியேற்றத்தைப் பல ஆண்டுகளாக தடுக்க முடியாமல் இருக்கிறது. மலேசிய நில உரிமைச்சட்டம் இன்னமும் சமபங்கு முறைக்கு மாற்றப்படாமல், அரசாங்கக் காப்பக நிலைபாட்டின் (தோரன்ஸ் முறைமை) கீழ் வைக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, ஒரு நிலமானது எவர் ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளதோ , அவரே அந்த நிலத்தின் ஏகபோக உரிமையாளர் ஆவார், வேறு எவரும் பன்னெடுங்காலம் அந்த நிலத்தில் குடியிருந்தாலும், மேம்படுத்தி இருந்தாலும் தேவைபடும் நேரத்தில், அவர்களை நில ஆக்கிரமுப்புச்சட்டத்தின் மூலமாக கட்டாய வசிப்பிட வெளியேற்றம் செய்ய முடியும்.

இவ்வாறான சர்ச்சைக்குரிய சட்ட விதிகளால், நகர முன்னோடிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அந்த நிலத்தைச் செம்மையாக்க அவர்கள் பட்ட துன்பங்களும் விலைமதிப்பு இல்லாத உடல் உழைப்புகளும் சட்டத்தின் முன்னே கானல் நீராகின்றன. அப்படியே அவர்களுக்கு மறுகுடியேற்றம் என்ற பெயரில் வீடுகள் கட்டி தரப்பட்டாலும் அந்த வீடுகள் அவர்கள் குடியிருக்க வசதியாக கட்டிகொடுக்கப்படுவது இல்லை, முறையான பாதுகாப்பு வசதிகளும் பராமரிப்பு சேவைகளும் இருப்பதில்லை.

நகர முன்னோடிகளின் நலனைக் காப்பதற்கு பி.எஸ்.எம்.-இன் பரிந்துரைகள்:-

–      அரசாங்கம் நகர முன்னோடிகளின் நலனைக் காக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்து அவர்களின் கிராமங்களை அங்கீகரிக்க வேண்டும்.

–      கட்டாய வசிப்பிட வெளியேற்ற கொள்கையை உடனடியாக தடைசெய்ய வேண்டும்.

–      அரசாங்க நிலங்களை மேம்பாட்டு நிறுவனங்களுக்கு விற்காமல், நகர முன்னோடிகளுக்கே அவர்கள் குடியிருக்கும் நிலத்தின் உரிமம் அல்லது நீண்ட கால அடிப்படையில் குத்தகை ஒப்பந்தம் செய்துகொடுக்க வேண்டும்.

–      மேற்கூறியவற்றுக்கு ஏதுவாக மலேசிய நில உரிமை சட்டத்தில் திறுத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

–      தனியார் நிலத்தில் குடியேறி இருக்கும் நகர முன்னோடிகளுக்கு, அவர்கள் மறு குடியேற்றம் செய்வதற்கான செலவீனத்தில், நில மேம்பாட்டாளர்கள் நியாயமான, கணிசமான அளவு பங்கெடுத்துகொள்ள வேண்டும். நில மேம்பாட்டாளர் அந்தத் தொகையை முழுவதுமாக கொடுக்கும் வரை, சம்மந்தபட்ட நகர முன்னோடி அந்த நிலத்திலேயே குடியிருக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

விவசாயிகளுக்கான நில உரிமை விவகாரம் மற்றும் உணவு பாதுகாப்பு

எந்தவித விவசாயத்திற்கும் ஏற்ற நிலத்தையும் கனிம வளங்களையும் கொண்டிருந்தும், மலேசியா இன்றளவும் உணவுத் தேவைகளுக்காக மற்ற நாடுகளை நம்பி இருக்க வேண்டிய நிலையில்தான் இன்னமும் இருக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டில் மட்டும், நமது நாட்டின் உணவு இறக்குமதியின் மதிப்பு ரிம 45 பில்லியன்களாக இருந்தது. இது ஒரு சாதாரண தொகை அல்ல.

இந்நிலை தொடருமானால், உலகளாவிய அளவில் உணவுப் பொருட்களுக்கான சந்தை விலை ஏற்ற இறக்கங்களால் உள்நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இதை தடுப்பதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுத்தே ஆக வேண்டும். உள்நாட்டு உற்பத்தி திறனை மேம்படுத்த திட்டங்களை வரைய வேண்டுமே தவிர, உணவு அல்லாத பயிர்களைப் பயிரிட்டு ஏற்றுமதி செய்யும் பெருந்தோட்ட முதலாளிகளின் திட்டங்களைக் களைய வேண்டும்.

உணவுப்பொருள் உற்பத்தியை அதிகரிக்கச்செய்ய, விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். அதற்கு ஏதுவாக, அவர்கள் விவசாயம் செய்யும் நிலங்களின் உரிமம் அவர்களுக்கே வழங்கப்பட வேண்டும். நிறைய விவசாயிகள் அரசாங்க மற்றும் தனியார் நிலங்களில் பயிர் செய்து வரும் வேளையில், பல சமயங்களில் பெரும் இலாபத்திற்காக நிலங்கள் விற்கப்படும் போது, விவசாயிகள் கட்டாய வெளியேற்றம் செய்யப்படுகின்றனர். இந்த நிலை மாறவேண்டும். விவசாயிகள் எந்தவொரு அச்சமும் தயக்கமும் இன்றி முழுமையாக விவசாயத்தில் ஈடுபட ஊக்குவிப்பு தர வேண்டும்.

பி.எஸ்.எம். விவசாயிகள் கட்டாய வெளியேற்றம் செய்யப்படுவதைக் கண்டிக்கிறது, விவசாயிகளின் நலன் பாதிக்கப்படுமேயானால், நாட்டின் உணவு பாதுகாப்பு பெரிதும் பாதிப்புக்குள்ளாகும். இவ்வாறான சவால்களைத் தடுப்பதற்கு ஏதுவாக, விவசாயிகளுக்கு அவர்கள் விவசாயத்திற்குப் பயன்படுத்தும் நிலத்தின் உரிமம் அல்லது அந்த நிலங்களை நீண்டகால குத்தகை அடிப்படையில் கொடுக்க வேண்டும்.

விவசாயிகள் இன்றி நமக்கு உணவுகள் ஏது? நிலங்கள் இன்றி விவசாயம் ஏது?

பூர்வக்குடி மக்களின் பாரம்பரிய நில உரிமை

மலேசியாவில் பூர்வக்குடி மக்களே மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வருகின்றனர். பூர்வக்குடியினர் இந்நாட்டில் இயற்கையோடு ஒன்றிய, அமைதியான வாழ்க்கை முறையைக் கடைபிடிக்கின்றனர். இவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் கடப்பாடு அரசாங்கத்திற்கு இருந்தபோதிலும், நடப்பது என்னவோ, இவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதும் இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்கள் சூரையாடபடுவதும் தான்.

பூர்வக்குடியினரே நமது நாட்டின் வனக்காவலர்கள் என்பது மிகையல்ல, ஆயினும் பேராசையின் காரணமாக காடுகளை அழித்து, அதன் வளங்களைச் சூரையாடிவரும் முதலாளித்துவ வர்க்கத்தின் செயற்பாடுகளால், இந்தப் பூர்வக்குடியினரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவது யாவரும் அறிந்த ஒன்று.

பேராசை பிடித்த அரசியல்வாதிகள் மற்றும் முதலாளிவர்க்கத்திடம் இருந்து தங்களது பாரம்பரிய நிலங்களைத் தற்காத்துகொள்ள பூர்வக்குடியினர் நடத்திவரும் போராட்டங்களை பி.எஸ்.எம். முழுமையாக ஆதரிக்கிறது.

சுகாதாரம் ஒரு பங்குச்சந்தை வாணிகம் அல்ல!

நாட்டு மக்களின் சுகாதாரப் பராமரிப்பு அவர்களின் உரிமை, அதைக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அதைவிடுத்து, சுகாதாரத்தை வியாபாரச் சந்தை ஆக்குவது மிக வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

பி.எஸ்.எம். நாட்டின் எல்லா குடிமக்களுக்கும் இலவசமான, அதேசமயம் தரமான மருத்துவச் சேவை வழங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறது.

பி.எஸ்.எம்.-இன் சுகாதார அமலாக்க கோரிக்கைகள்:-

–      சுகாதாரத் துறையும் அரசாங்க மருத்துவமனைகளின் உபசேவை பிரிவுகளும் தனியார் மயமாக்கப்படுவதை முற்றிலும் தடுக்க வேண்டும்.

–      புதிதாக தனியார் மருத்துவமனைகள் கட்டுவதற்கு அனுமதி மறுக்கப்பட வேண்டும்.

–      முழுக்கட்டண மருத்துவச் சேவை திட்டத்தை நிறுத்த வேண்டும்.

–      அரசாங்க மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், தாதியர், மற்றும் இதர பலதுறை ஊழியர்களுக்குச் சம்பள உயர்வும் அவர்களின் நலனைப் பாதுகாக்க தனி வாரியம் ஒன்றும் அமைக்கப்பட வேண்டும்.

–      நாட்டின் வரவு செலவு திட்டத்தில் மருத்துவத்துறைக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (கே.டி.என்.கே.) இருந்து இன்னும் அதிகமாக, குறைந்தபட்சம் 4% நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இலவசக் கல்வி முறை

கல்வி என்பது நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை ஆகும். அது எக்காரணத்திற்காகவும் முதலாளித்துவத்தின் பணம் செய்யும் வியாபாரம் ஆகக் கூடாது.

இடதுசாரி கூட்டணி வெளியிட்ட 99%-க்கான தேர்தல் அறிக்கையில், கல்விக்கான எங்கள் திட்டங்கள்:-

–      எல்லா மக்களுக்கும் பொதுவான, அறிவியல் பூர்வமான, அதி தொழில்நுட்பம் கலந்த, படைப்பாற்றல் மிகுந்த மிக நேர்த்தியான கல்வி முறையை அறிமுகம் செய்ய வேண்டும்.

–      மத, இன பேதமின்றி, எந்தவோர் அரசியல் தலையீடும் இல்லாத புதியக் கல்விமுறை அறிமுகம் செய்தல்.

–      கல்வி தேர்ச்சி விகிதம், கலாச்சார சாரம்சங்கள், மற்றும் பொருளாதார நிலைகளை அடிப்படையாக கொண்டு பொதுக் கல்வி கழகங்களில் இடங்கள் ஒதுக்கப்படுதல்.

–      தரமான முதலீடுகளை தேர்வு செய்வதோடு, பொதுக் கல்வி கூடங்களில் எந்தவொரு இடையூருகளும் இல்லாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும்

–      தேசிய மொழி பள்ளிகளிலேயே, மற்ற மொழிகளைப் பாடமாக பயில்வதற்கு வகை செய்யப்படும், இதன் வாயிலாக பல்லின மாணவர்களிடையே இன நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதோடு, ஆசிரியர்களுக்குச் சமசீரான கற்றல் கற்பித்தல் பயிற்சிகளை வழங்கவும், நிதி பங்கீடுகள் சமமாக இருப்பதையும் உறுதி செய்ய இயலும்.

–      ஆரம்ப, இடைநிலை மற்றும் உயர்க்கல்வி கூடங்களில் அனைத்து மலேசிய மக்களுக்கும் “இலவசக் கல்வி” வழங்கப்படும்.

–      எல்லா பல்கலைகழகங்களுக்கும் அரசாங்க தலையீடு இல்லாத முழு சுதந்திரமான கல்வி முறையை வழங்குதல்

–      ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் ஒன்றிணைக்கப்பட்ட, கலை கலாச்சார, இசை மற்றும் நாடகக் கல்விகள் அறிமுகப்படுத்துதல்

–      கைத்தொழில் மற்றும் தொழிற்துறை கல்விகளை மேலும் மெருகூட்டி, மாணவர்களின் படைப்புத் திறனை மேம்படுத்துவதோடு, பசுமை பொருளாதாரத் திட்டத்தை அறிமுகம் செய்தல்

–      மேல்தட்டு வர்க்கத்தினருக்கான பள்ளி அமைப்புகளை மாற்றி, சமசீர் கல்வியை அறிமுகம் செய்வதோடு, கிராமப்புற மற்றும் ஒதுக்குப்புற பள்ளிகளில் பணியாற்ற விழையும் ஆசிரியர்களுக்குத் தனியாக ஊக்குவிப்பு தொகைகளை அறிமுகப்படுத்துதல்.

–      எல்லா தேசிய நிலை பள்ளிகளிலும் சரிசமமான விளையாட்டு உபகரணங்களும், கலை கலாச்சார மற்றும் புறப்பாடத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்தல்

–      ஆசிரியர்களின் சம்பள உயர்வுக்குப் பெரும்பாலான நிதி ஒதுக்கீடு செய்வதன் மூலம் ஆசிரியர்கள் மனதிருப்தியோடு வேலை செய்வதை உறுதி செய்வதோடு, கற்பித்தல் தொழிலை ஒரு பெருமைமிகு தொழிலாகவும், எதிர்கால சந்ததியினர் ஈடுபட விரும்பும் தொழிலாகவும் உருமாற்றம் கொடுத்தல்.

பி.எஸ்.எம். அனைத்து தட்டு வர்க்கத்தினருக்கும் இலவசமான, அதே சமயம் தரமான கல்வியைப் பாலர்ப்பள்ளி தொடங்கி பல்கலைக்கழகம் வரை கிடைக்க வேண்டுமென விரும்புகிறது.

ஒருங்கிணைக்கப்பட்ட, மேம்படுத்தப்பட்ட பொதுப் போக்குவரத்து சேவை

பொது போக்குவரத்து அனைவரது அன்றாட வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான ஒரு தேவையாகும். ஒருங்கிணைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட பொதுப் போக்குவரத்து சேவையின் வாயிலாகவும் தனியார் வாகனப் பயனீட்டைக் குறைப்பதன் வாயிலாகவும் அனுதினமும் வேலைக்கும் பள்ளிக்கூடத்திற்கும் மற்ற பல பணிகள் நிமித்தம் வெளியே செல்லும்போது வாகன நெரிசலில் சிக்கித் தவிப்பதைத் தவிர்க்க முடியும்.

இப்படியாக, மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய இன்னும் பற்பல போரட்டங்களைச் சளைக்காமல் செய்து கொண்டிருக்கும் ஒரே அரசியல் கட்சி, மலேசியாவைப் பொறுத்தமட்டில் பி.எஸ்.எம். ஒன்று மட்டுமே.

மக்கள் பிரச்சனைகளுக்குச் செவிசாய்த்து, மக்கள் நலனைப் பாதுகாக்க எப்போதும் மக்களோடு இணைந்து போராடிவரும் பி.எஸ்.எம். கட்சி வேட்பாளர்களுக்கு இம்முறை ஒரு வாய்ப்பளிப்போம்.

தொலைநோக்குடன் சிந்தித்து, விவேகமாக வாக்களிப்போம்!