கோகிலனை இழந்த பத்து!

‘ஞாயிறு’ நக்கீரன், கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசத்தில் இந்திய சமூகத்தின் சார்பில் ஓர் இளம் வேட்பாளர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கள நிலவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தால், 14-ஆவது நாடாளுமன்றத்திற்கு 22 வயதேயான ஓர் இளம் வேட்பாளரை தங்களின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்த பெருமையை பத்து தொகுதி மக்கள் பெறக்கூடும்.

சுயேச்சையாக களம் இறங்கிய சட்டக் கல்வி மாணவரான பி.பிரபாகன்தான் அந்த நல்வாய்ப்பிற்கு உரியவர் என்று நிலையை எட்டவிருக்கிறார். இதற்காக, அவர் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளூர நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

தான் ஒன்று நினைக்க, வேறொன்றாகிப் போனதால் கைகளைப் பிசைந்து கொண்டு நிற்கிறது தேர்தல் ஆணையம். நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தும் நிலையை எதிர்கொண்டதால் பத்து நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தகுதி இல்லையென்று அந்த ஆணையம் கைவிரித்து விட்டது. கடந்த பொதுத் தேர்தலின்போதும் இதே நிலையில்தானே களம் இறங்கினேன். அப்போது அனுமதித்த தேர்தல் ஆணையம் இப்போது மறுப்பதேன் என்று கடந்த இரு தேர்தல்களிலும் அங்கு வென்ற தியான் சுவா கேட்ட வினாவிற்கு தேர்தல் ஆணையம் நேரடியாக பதில் சொல்லவில்லை.

தேர்தலெல்லாம் முடிந்தபின் நீதிமன்றத்தை நாடும்படி சொல்லிவிட்டு, அத்துடன் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துக் கொண்டது தேர்தல் ஆணையம்.

ஆரம்பத்தில் சோசலிச முன்னணி கைவசமான இந்தத் தொகுதியை பின்னர் கெராக்கான் கைப்பற்றியது. இப்படிப்பட்ட நிலையில் 1974-இல் கலைக்கப்பட்ட இந்தத் தொகுதி, பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் 1986-இல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அப்போதும், இந்தத் தொகுதி கெராக்கான் வசம்தான் இருந்தது.

மொத்தத்தில் தேசிய முன்னணியின் கோட்டையாக இருந்த இத்தொகுதியை பன்னிரண்டாவது பொதுத் தேர்தலின்போது மக்கள் நீதிக் கட்சி(பிகேஆர்) கைப்பற்றியது. தொடர்ந்து பதின்மூன்றாவது தேர்தலிலும் அதே தியான் சுவா வென்றதன் மூலம் எதிரணி வசம்தான் இத்தொகுதி சென்றது.

தற்பொழுது 14-ஆவது பொதுத் தேர்தல் நடைபெற விருக்கும் நிலையில், கெராக்கான் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தேசிய உதவித் தலைவரும் கல்விமானும் மென்மையான அரசியல்வாதியாக அடையாளம் காணப்படுபவருமான டத்தோ அ. கோகிலன் போட்டியிட விரும்பினார்.

ஆனால், அக்கட்சியின் தலைமை அதற்கு பச்சைக் கொடி காட்டவும் இல்லை; சிவப்புக் கொடி காட்டவும் இல்லை. இதனால் கோகிலன் அமைதியாகக் காத்திருந்தார். கடைசியில் கட்சி டத்தோ டாக்டர் டொமினிக் லாவை பத்துவில் களம் இறக்கியதால், இலவு காத்த கிளியின் ஆளாகிவிட்டார் கோகிலன்.

இந்திய வாக்காளர்கள் கணிசமான அளவிற்கு உள்ள பத்து நாடாளுமன்றத் தொகுதியில், ஒருவேளை கோகிலன் களம் இறக்கப்பட்டிருந்தால் தற்பொழுது தியான் சுவா களத்தில் இல்லாத நிலையில், போராடி வெல்லும் வாய்ப்பு கோகிலனுக்கு இருந்திருக்கும்.

தற்பொழுது, சுயேச்சையாக களம் இறங்கிய பிரபாகரனை பிகேஆர் தத்து எடுத்திருப்பதால், குறிப்பாக தியான் சுவா இதை ஒரு கௌரவப் பிரச்சினையாகக் கருதிக் கொண்டு தான் போட்டியிடா விட்டாலும் கெராக்கான் கட்சியைத் தோற்கடிப்பது என்று கங்கணம் கட்டிக் கொண்டு, பிரபாகரனுக்காக வாக்கு வேட்டியாடி வருகிறார்.

சீன சமுகத்தின் ஆதரவும் மலாய் வாக்காளர்களில் ஒரு பிரிவினரும் குறிப்பாக பாஸ் ஆதரவாளர்களும் தியான் சுவாவிற்காக அணிவகுக்கும் நிலையில் பத்து தொகுதியில் உள்ள இந்திய வாக்காளர்களில் பாதிக்கு மேற்பட்டோர் பிரபாகரனுக்காக அனுதாப முறையில் வாக்களிக்கக் காத்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் அவதானித்துள்ளனர்.

மொத்தத்தில், இந்த பத்துத் தொகுதியை தத்துப் பிள்ளையான பிரபாகரனின் மூலம் பிகேஆர் தக்க வைத்துக் கொள்ளும் என்றுதான் தெரிகிறது. இத்தகைய அரசியல் களத்தை பத்துத் தொகுதியில் எதிர்பார்க்காத கெராக்கான், இப்போது வருந்துகிறது. ஒருவேளை, கோகிலனை அனுமதித்திருந்தால் வெல்ல முடியுமே என்று மறு சீராய்வு செய்து வருகிறதாம்.

இருந்தும் என்ன பயன்? காலம் கடந்து விட்டது. இருந்தாலும் தேர்தல் ஆணையம்தான் இஞ்சியைக் கடித்த குரங்கின் நிலையில் இருக்கிறது.