காமெடியில் மட்டுமல்ல…. கிரிக்கெட் வர்ணனையிலும் அசத்தியவர் நீலு

சென்னை: மறைந்த நாடக மற்றும் திரைப்பட நடிகர் நீலு, தனது காமெடியால் பலரையும் கலக்கியவர். அதைத் தாண்டி அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் விமர்சகராகவும் இருந்துள்ளார்.

பழம்பெரும் நடிகர் நீலு இன்று மரணமடைந்தார். நாடகம் மூலம் திரைப்பட நடிகரான அவர், ஆயிரக்கணக்கான நாடகங்கள், 160 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

காமெடி நடிப்பில் தனக்கென்று தனி பாணியை வைத்துக் கொண்டு, பலரையும் கவர்ந்தவர். இயல்பாகவே நகைச்சுவையாக பேசக் கூடியவர்.

காமெடி நடிகர் மொட்டை பாஸ்கி ஒருங்கிணைப்பாளராக இருந்த சன் நியூஸ் தொலைக்காட்சியின் என் வழி டோணி வழி நிகழ்ச்சியிலும் நீலு பங்கேற்றார். அதேபோல் கிரிக்கெட் தொடர்பான பல டிவி நிகழ்ச்சிகளிலும் நீலு பங்கேற்றிருந்தார்.

இவற்றில் கிரிக்கெட் குறித்து நீலு அறிந்து வைத்திருந்த தகவல்கள், அவருடைய விமர்சனம், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களையே ஆச்சரியப்படுத்தியது.

-tamil.mykhel.com